மக்கள் வலிமையை உணர்த்தும் நேரடி ஜனநாயகப் போராட்டங்களையே 2019 ஆண்டு எம்மிடம் எதிர்பார்க்கிறது- பிரதமர் வி.உருத்திரகுமாரன்

பிரான்சில் எழுந்த மஞ்சள் அங்கிப் போராட்டம் உலகத்தின் கவனத்தை ஈர்ந்திருந்ததனை சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், தேர்தல் ஜனநாயகப்பாதையில் ஏற்படும் குறைகளைக் களையும் வகையில் மக்களின் நேரடி ஜனநாயகப் போராட்டங்களினால் அரசின் தீர்மானங்களின்மேல் காத்திரமான அழுத்தம் கொண்டுவர முடியும் என்பதையும் இப்போராட்டம் உணர்த்தி நிற்கிறது என அவர் குறித்துரைத்துள்ளார்.

இந்நிலையில், மலர்ந்துள்ள 2019ம் ஆண்டில் ஈழத்தமிழர் தேசம் நேரடி ஜனநாயகப் போராட்டங்களில் தன்னை எழுச்சியுடன் ஈடுபடுதத வேண்டும் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அதனது புத்தாண்டுச் செய்தியில் அறைகூவல் விடுத்துள்ளார்.

பிதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது புத்தாண்டுச் செய்தி:

ஈழத் தமிழர் தாயகத்திலும் அனைத்துலகிலும் வாழும் தமிழ் மக்களுக்கும், உலகெங்கும் தமது உரிமைகட்காகப் போராடும்; அனைத்து மக்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்வதில் நிறைவடைகிறேன். மலரும் இவ் 2019 ஆம் ஆண்டில் உலகெங்கும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பதில் முன்னோக்கிய காலடிகளை வைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் நாம் இப் புத்தாண்டை வரவேற்றுக் கொள்வோமாக!

கடந்து சென்ற 2018ம் ஆண்டு உலக அரங்கில் மக்கள் போராட்டங்களுக்கு வலிமையுண்டு என்பதை மீண்டுமொருமுறை வெளிப்படுத்திக் கொண்ட ஆண்டாக அமைந்திருந்தது. குறிப்பாக, பிரான்ஸ் நாட்டில் எழுந்த மஞ்சள் அங்கிப் போராட்டம் உலகத்தி;ன் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்திருந்தது. தேர்தல் ஜனநாயகப்பாதையில் ஏற்படும் குறைகளைக் களையும் வகையில் அமையும் மக்களின் நேரடி ஜனநாயகப் போராட்டங்களால் அரசின் தீர்மானங்களின்மேல் காத்திரமான அழுத்தம் கொண்டுவர முடியும் என்பதையும் இப் போராட்டம் உணர்த்தி நிற்கிறது. 

பதில்: அப்படிப் போடு அருவாளை. முப்பது ஆண்டுகாலக் கொடிய போரில் இருந்து இன்னமும் மது மக்கள் மீண்டு இயல்பு நிலையை அடையவில்லை. வட – கிழக்கில் வாழும் பெரும்பான்மைத் தமிழ் மக்கள் போதிய அடிப்படை வசதிகளின்றி வாழ்கிறார்கள். இழந்து போன வாழ்வாதாரங்களை முழுமையாக மீள் கட்டியெழுப்பப் பாடாதபாடு படுகிறார்கள்.  போதாக் குறைக்கு ”பட்ட காலே படும், கெட்ட குடியே கெடும்” என்பதுபோல மார்கழி மாதக் கடைசிப் பகுதியில் பெய்த பேய் மழை – வெள்ளம் காரணமாக வீடு வாசல்கள், கன்றுகாலிகளை இழந்து ஏதிலி முகாம்களில் வாழ்கிறார்கள். இவர்களைப் வெள்ளத்துக்கு முந்திய காலத்துக்கு கொண்டு செல்ல நீண்ட காலம் எடுக்கும். இந்த இலட்சணத்தில் 2019 ஆம் ஆண்டில் மக்கள் வலிமையை உணர்த்தும் நேரடி ஜனநாயகப் போராட்டங்களையே 2019 ஆண்டு எம்மிடம் எதிர்பார்க்கிறது என்ற நப்பாசையை பிரதமர் உருத்திரகுமாரன் வெளியிட்டுள்ளார். இப்போதல்ல, நீண்ட காலமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்  யதார்த்தத்தைப் புறம்தள்ளிவிட்டு  ஆகாயத்தில் கோட்டை கட்டி வருகிறது. வெளிநாட்டில் இருந்து கொண்டு உண்ண உணவு, உடுக்க உடை, குடியிருக்க வீடுவாசல் இல்லாமல் அல்லல்படும் எமது மக்கள் “ஜனநாயகப் போராட்டங்களில் தன்னை எழுச்சியுடன்” ஈடுபட வேண்டும் என்பது ”மரத்தாலே விழுந்தவனை மாட்டைக் கொண்டு மிதித்த” கதையாக இருக்கிறது. முதலில் தாயக மக்களை போராட அழைப்பு விடுவதற்கு நாகதஅ க்கு எந்தத் தார்மீக உரிமையும் கிடையாது.  அதனை அங்கு வாழும்  மக்களும் அவர்களது அரசியல் தலைமையும் இடம், பொருள், காலம் அறிந்து எடுக்க வேண்டிய முடிவு! தூரத்தில் இருந்து கொண்டு தொலைக்கட்டுப்பாட்டு     (remote control) அரசியல் நடத்த எண்ணுவது  அறமாகாது.  அது சரிப்பவும் மாட்டாது.

மேலும் பிரான்சில் நடந்த மஞ்சள் அங்கிப் போராட்டம் தோல்வியில் முடிந்துள்ளது. அது மட்டுமல்ல அந்தப் போராட்டம் பிரான்ஸ் நாட்டு மக்கள் பிரான்ஸ் நாட்டு அரசோடு நடத்திய போராட்டம். அதனை  முன்மாதிரியாக வைத்து எப்படி எமது மக்கள் போராட முடியும்? மேலும் அந்தப் போராட்டத்தில் அரசுக்கும் பொதுமக்களுக்கும் சொந்தமான கடைகள், வண்டிவாகனங்கள்  போராட்டக்காரர்களால் எரியூட்டப்பட்டன. பொதச் சொத்துக்கள் நாசமாக்கப்பட்டன. ஆயிரம் பேரளவில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள். எரிபொருள் விலை ஏற்றத்தைக் காரணம் காட்டி தொடக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பின்னர்  திசைமாறிப் போய் வன்முறையில் முடிந்தது.  அந்தப் போராட்டத்தை முன் உதாரணமாகக் கொண்டு எமது மக்கள் அரசோடு போராட முடியுமா? போராடினால்  என்ன நடக்கும் என்பது தெரியுமா?

இலங்கைத்தீவைப் பொறுத்தவரை ஒரு அரசின் மூன்று முக்கிய தூண்களான நாடாளுமன்றம், நிறைவேற்று அரசாங்க நிர்வாகம், நீதித்துறை மூன்றும் முட்டி மோதிக் கொண்ட காட்சிகளை நாம் 2018 இல் கண்டோம். நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டிருந்த ஜனாதிபதியின் அதிகாரங்கள் தறித்துக் குறைக்கப்பட்டிருந்த நிலையில் சிறிலங்கா ஜனாதிபதி ஆடிய அரசியல் ஆட்டங்கள் தோல்வியில் முடிவடைந்திருக்கின்றன. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் ஊடாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாகக் கருதப்படும் இவ் அரசியல் மோதல்கள் உண்மையில் கனதியான அனைத்துலகத் தலையீட்டால், குறிப்பாக அமெரிக்கத் தலையீட்டால்தான், முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாகப் பலராலும் கணிக்கப்படுகிறது.

 பதில்: இந்தக் கணிப்பீடு முற்றிலும் பிழை. அமெரிக்கா எட்ட நின்று அக்கறையோடு கவனித்தது என்பதே சரியானது. நாட்டில் சனநாயகம், சட்டத்தின் ஆட்சி நடைமுறைப்படுத்தப் பட வேண்டும் என்றே அமெரிக்கா வலியுறுத்தியது. அதற்கு மேல் நீதிமன்றம் சென்று அடிப்படை உரிமைகளுக்கு வழக்காடிய கட்சிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முன்னணியில் இருந்தது. மனுதாரர் இரா. சம்பந்தன் சார்பாக தோன்றி வாதாடிய சனாதிபதி சட்டத்தரணிகள் கனக – ஈஸ்ரவரன் மற்றும் ம.ஆ. சுமந்திரன் இருவருமே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது அரசியல் யாப்புக்கு முரணானது என சிறப்பாக வாதாடினார்கள். இதில் இருந்து ஒரு உண்மை வெளிப்பட்டது. நல்லாட்சி அரசால்  கொண்டுவந்து நிறைவேற்றப்பட்ட சட்ட திருத்தம் 19ஏ காரணமாகவே வழக்கை வெல்ல முடிந்தது. அந்தத் திருத்தம் கொண்டு வரப்படுவதற்கு முன்னர் சனாதிபதிகள் தான்தோன்றித்தனமாக நடந்து கொண்டார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணிமாறாமல் தடுக்கப்பட்டமை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்விடயத்தில் எடுத்துக் கொண்ட நிலைப்பாடு, நீதித்துறையைச் சேர்ந்தவர்கள் மாறான தீரப்பை வழங்கினால் அதன் விளைவாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அனைத்துலக அரங்கில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பாக வழங்கப்பட்ட எச்சரிக்கைகள் உட்பட பல்வேறு வகையான அனைத்துலகத் தலையீடுகள் இவ் விடயத்தில் இருந்ததாகக் கருதப்படுகிறது. தீவிர சிங்களத் தேசியவாதிகள் இம் முரண்பாட்டை சிங்கள தேசத்துக்கும் அந்நிய கைப்பாவைகளுக்குமிடையிலான முரண்பாடாகவே சித்தரிக்கின்றனர். சிங்கள தேசத்தை இவ் விடயத்தில் அந்நிய கைப்பாவைகள் வெற்றி கொண்டதாக அவர்கள் மத்தியில் ஒரு கொதிப்பு இருக்கிறது. சிங்கள தேசத்தின் இத் தோல்விக்குத் தமிழ், முஸ்லீம் மக்களும், அமெரிக்க, இந்திய அரசுகளுமே காரணம் என அவர்கள் நம்புகிறார்கள். இதனால் மலரும் 2019 ஆம் ஆண்டில் சிங்கத் தேசியவாதிகளின் தீவிரமான செயற்பாட்டை இலங்கைத்தீவு எதிர்கொள்ள வேண்டி வரலாம். இதனைத் தமிழ் மக்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து நாம் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.

பதில: இவையெல்லாம் பிரதமர் உருத்திரகுமாரனது அனுமானம் ஆகும். மேற்குலக நாடுகள், குறிப்பாக அமெரிக்கா மற்றும் இந்தியா மறைமுக அழுத்தம் கொடுத்தது என்பது சரியே. அதற்கு மேலாக அந்த நாடுகள் இலங்கையின் உள்நாட்டு விடயங்களில் தலையிடாமல் பார்த்துக் கொண்டன. அப்படித்தான் அந்த நாடுகள் இராசதந்திரத்தோடு நடந்து கொள்ளும். யாரும் இதனை சிங்கள தேசத்தின் தோல்வி என்று பார்க்கவில்லை. சிங்கள பவுத்த தீவிரவாதத்துக்கு கிடைத்த தோல்வி என்றே பார்க்க வேண்டும்.  அதே  நேரம் இந்த வெற்றியை சிங்கள முற்போக்குச் சக்திகளும்  சிவில் அமைப்புக்களும் ஊடகங்களும் வரவேற்றன. சிங்கள மக்களின் கண்ணோட்டத்தில் சனநாயகத்துக்காகவும் சட்டத்தின் ஆட்சிக்கும் வாதாடிய  ததேகூ  பற்றிய  பிம்பம்  உயர்ந்திருக்கிறது.  அதே சமயம் சனாதிபதி சிறிசேனா மற்றும் பிரதமர் மகிந்த இராசபக்ச இருவரது பிம்பங்களும் பலத்த அடிவாங்கியுள்ள. ததேகூ எப்போதும் அறத்தொடு நிற்றல் கோட்பாட்டைக் கடைப்பிடிக்கிறது. அது அரசியல் தேர்தல் வெற்றி தோல்வி பற்றிக் கவலைப்படுவதில்லை.

2019 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் பத்தாண்டு நினைவைப் பதிவு செய்யப் போகிறது. நூறாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் துடிதுடிக்கப் படுகொலை செய்யப்பட்டு, பெரும் தமிழின அழிப்பு நடைபெற்று 10 வருடங்கள் நிறைவுறும் தருணத்திலும்கூட இனஅழிப்புக்குக் காரணமானவர்கள் ஒருவர் கூடத் தண்டனைக்குள்ளாக்கப்படவில்லை. தமிழின அழிப்பைத் திட்டமிட்ட வகையில் புரிந்த சிறிலங்கா அரசும் இதுவரை குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்படவில்லை. இவ் விடயத்தில் சிறிலங்கா அரசைப் பாதுகாப்பதில் சிங்கள தேசியவாதிகள் மட்டுமல்ல, அனைத்துலக அரசுகளும் சிறிலங்கா அரசின் பக்கம்தான் நிற்கின்றன என்பதே உண்மை. இனஅழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்குவதா, அல்லது சிறிலங்கா அரசின் ஊடாகத் தாம் அடைந்து கொள்ள வேண்டிய நலன்களை உறுதிப்படுத்துவதா என்பதில் தமது நலன்களின் பக்கம்தான் அரசுகள் நிற்கின்றன. இப்போது இந்த அரசுகளுக்குத் தேவைப்படுவதெல்லாம் சில கண்துடைப்பு நடவடிக்கைகளே தவிர நீதியை நிலைநிறுத்துவதற்கான செயற்பாடுகள் அல்ல.

 

பதில்: போர்க் குற்றம், மானிடத்துக்கு எதிரான குற்றம் இழைத்தவர்கள் இன்னும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவில்லை என்பது சரியே. ஆனால் போர்க்களத்துக்கு வெளியே தமிழர்களைக் கொன்றவர்கள் மீது சட்டம் பாய்ந்துள்ளது. குறிப்பாக 2008/2009 இல் கொழும்பிலும் அதனை அண்டிய புறநகர்ப்புறத்திலும் கப்பம் கேட்டு வெள்ளைவானில் கடத்திக் கொலைசெய்த குற்றச்சாட்டில் கடற்படைப் புலனாய்வுப் பிரிவைச் சார்ந்த உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் சிலர் பிணையில் வெளிவந்தாலும் அதன் பிரதம சூத்திரதாரியான  Lt. Commander Sedililage Don Sumedha Sampath Dayananda. சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தப்பிப் போவதற்கு உதவிய குற்றச்சாட்டில்  Navy Commander Vice Admiral Ravindra Wijegunaratne- who is now the Chief of Defence Staff (CDS) கைது செய்யப்பட்டு பிணையில்(http://www.dailymirror.lk/expose/article/Abduction-of-Tamil-youths-Twists-and-turns-in-the-investigations-154315.html)  செல்ல அனுமதிக்கப் பட்டுள்ளார். அமரர் முன்னாள் நா.உறுப்பினர் கொலையில் சம்பந்தப்பட்ட பிள்ளையான் உட்பட 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். விசாரணைகள்  வேகமாக நடைபெறவில்லை என்பது சரியே. ஆனால் முன்னைய காலங்களைவிட இப்போது சட்டம் தனது கடமையைச் செய்கிறது.  

கொலைக்குற்றவாளியே தன்மீது சுமத்தப்பட்ட கொலைக்குற்றச்சாட்டை விசாரிக்கும் நீதிபதியாக நியமிக்கப்படுவதைப் போல சிறிலங்காவின் போர்க்குற்றத்தை விசாரிக்கும் பொறுப்பை சிறிலங்கா அரசிடம் அனைத்துலக அரசுகள் வழங்கின. இவ் விடயத்தில் எதுவும் நடைபெறவில்லை என்பது அம்பலமாகியுள்ள இத் தருணத்தில், தமது நாட்டின் ஜனாதிபதிக்கு எதிராகவே தீர்ப்பு வழங்கி நீதியின்பாற்பட்டுச் செயற்படும் மிகவும் உன்னதமான நீதித்துறை என்ற பட்டுக்குஞ்சத்தை இப்போது சிறிலங்காவின் நீதித்துறையின்மீது கட்டுகிறார்கள். சிறிலங்கா உச்சமன்றம் ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக வழங்கிய தீர்ப்பானது யுத்தக்குற்றம் தொடர்பாக உள்நாட்டு விசாரணை ஒன்றினை நியாயப்படுத்தும் வகையில் 2019 ஆம் ஆண்டின்போது பயன்படுத்தப்படப்போகிறது. இவ் விடயத்தில் தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

பதில்: “சிறிலங்காவின் போர்க்குற்றத்தை விசாரிக்கும் பொறுப்பை சிறிலங்கா அரசிடம் அனைத்துலக அரசுகள் வழங்கின” என்ற கூற்று உண்மைக்குப் புறம்பானது. ஐநாமஉ பேரவையின் தீர்மானம் 30-1 கலப்பு விசாரணை வேண்டும் என்றே கூறுகிறது. குறித்த தீர்மானத்தின் பந்தி 6 பின்வருமாறு அமைந்துள்ளது.

மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனித உரிமை மீறல்களை விசாரணை செய்ய நீதிப்பொறிமுறை ஒன்றை சிறப்பு சபை ஒன்றுடன் நிறுவுவதற்கு இலங்கை அரசாங்கம் இணங்கியது. இந்த நீதிப் பொறிமுறைக்குள்சுயாதீனமான இலங்கையின் இறைமை மற்றும் பக்கசார்பின்மையை கொண்ட ஆட்கள் தலைமையில் பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள் பாதுகாப்பு சட்டத்தரணிகள் அதிகாரம் கொண்ட வழக்கு தொடுநர்கள் மற்றும்விசாரணையாளர்களைக் கொண்ட சிறப்பு சபை அலுவலகம் உள்ளடக்கப்படும்

.

A/HRC/RES/30/146.Welcomesthe recognition by the Government of Sri Lankathat accountability is essential to uphold the rule of law and to build confidence in the people of all communities of Sri Lanka in the justice system,noteswith appreciation the proposal of the Government of Sri Lanka to establish a judicial mechanism with a special counsel to investigate allegations of violations and abuses of human rights and violations of international humanitarian law, as applicable; affirms that a credible justice process should include independent judicial and prosecutorial institutions led by individuals known for their integrity and impartiality; and alsoaffirms in this regard the importance of participation in a Sri Lankan judicial mechanism, including the special counsel’s office, of Commonwealth and other foreign judges, defence lawyers and authorized prosecutors and investigators. (chrome-extension://gphandlahdpffmccakmbngmbjnjiiahp/https://documents-dds-ny.un.org/doc/UNDOC/GEN/G15/236/38/PDF/G1523638.pdf?OpenElement)

எனவே  “சிறிலங்காவின் போர்க்குற்றத்தை விசாரிக்கும் பொறுப்பை சிறிலங்கா அரசிடம் அனைத்துலக அரசுகள் வழங்கின” என்பது அப்பட்டமான பொய். மலிவான அரசியல் வாதம். இந்தப் பொய் தெரியாமல் சொல்லப்பட்டதா? இல்லை தெரிந்தே செல்லப்பட்டதா என்பது தெரியவில்லை.

தமிழ் மக்கள் மீதான இனவழிப்பை மூடிமறைக்க சிங்களத் தேசியவாதிகள் அனைத்துலக அரசுகளின் உதவியுடன் மேற்கொள்ளும் பகீரத முயற்சியினை எதிர்த்து உண்மையை நிலைநிறுத்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உட்பட தமிழ் மக்களின் அமைப்புகள் நீதியின் பாற்பாட்டு இயங்கும் அனைத்துலக சிவில் சமூக அமைப்புகளின் உதவியுடன் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றன. தமிழின அழிப்பை மூடிமறைக்க முயலும் முயற்சியை முறியடித்து தமிழின அழிப்புக்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கையை உயிர்ப்பாக வைத்திருப்பதில் நாம் வெற்றி கண்டுள்ளோம். தமிழின அழிப்புக்கு எதிராக அனைத்துலக அரங்கில் நீதிகோரும் போராட்டம் காலநீட்சி கொண்டது என்பதனால் இக் காலநீட்சியில் எமது போராட்டம் நீர்த்துப் போகாமற் பாதுகாப்பதில்தான் இவ் விடயம் தொடர்பான எமது வெற்றி தங்கியுள்ளது. இப் புரிதலுடன் நாம் அனைத்துலக அரங்கில் தமிழின அழிப்புக்கு எதிராக நீதி கோரும் போராட்டத்தை 2019 ஆம் ஆண்டிலும் உறுதியாக முன்னெடுக்க வேண்டும்.

பதில்: “நாம் அனைத்துலக அரங்கில் தமிழின அழிப்புக்கு எதிராக நீதி கோரும் போராட்டத்தை 2019 ஆம் ஆண்டிலும்; உறுதியாக முன்னெடுக்க வேண்டும்” என்பது சரியான முடிவு. ஆனால் நாகதஅ ம் ஐநாமஉபே பயன்படுத்தாத, பயன்படுத்த மறுக்கும் ஒரு சொல்லை சர்வசாதாரணமாகப் பயன்படுத்துகிறது. அந்தச் சொல் தமிழ் இன அழிப்பு. “தமிழின அழிப்புக்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கையை உயிர்ப்பாக வைத்திருப்பதில் நாம் வெற்றி கண்டுள்ளோம்”  என்பது சரியானால் எந்த நாடு அல்லது நாடுகள் இலங்கையில் நடந்தது தமிழ் இன அழிப்புத்தான் என ஒப்புக் கொண்டுள்ளன? இன அழிப்பு நடந்தது என்று நாம் சொல்லிவிட்டால் போதாது.

சிறிலங்கா அரசாங்கங்கள் எவையாக இருந்தாலும் தமிழின அழிப்பையோ, அல்லது தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசம் என்பதனையோ ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இதனால் தமிழ் மக்கள் சிங்கள அரசாங்கங்களின் நிலைப்பாட்டை எதிர்த்து தொடர்ச்சியாக விட்டுக் கொடுப்பற்ற போராட்டத்தை நடாத்துவது தவிர்க்க முடியாத வரலாற்று நிரப்பந்தமாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் இப் போராட்டம் அரசியல் இராஜதந்திர வழிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலை உள்ளது. இந் நிலையில், தாயகத்தில் தமிழர் தலைமை  வெவ்வேறு காரணங்களைக்கூறி சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருப்பது தமிழ் மக்களின் போராட்டத்தைப் பலவீனப்படுத்துவதாகவே அமையும். அவர்கள் கடந்த தேர்தலின்போது தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காற்றில் பறக்க விடுவது குறித்தும் எவ்வித அக்கறையும் இல்லாத நிலையே தெரிகிறது.

பதில்: ஒரு பொறுப்புள்ள அமைப்பின் பொறுப்புள்ள பிரதமர் பொறுப்போடு பேச வேண்டும். “இந் நிலையில், தாயகத்தில் தமிழர் தலைமை  வெவ்வேறு காரணங்களைக் கூறி சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருப்பது தமிழ் மக்களின் போராட்டத்தைப் பலவீனப்படுத்துவதாகவே அமையும்” என்பதில் எந்த உண்மையும் இல்லை. அரசாங்கத்துக்கு ததேகூ கொடுக்கும் ஆதரவு என்பது அரசியல் இராசதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. “துணையின்றித் தனித்திருப்பவன் தன்னை எதிர்த்த இரு பகையில் ஒன்றைத் துணையாயகக் கொள்ளவேண்டும்” என்பது அரசியல் சாணக்கியம். அந்தக் கோட்பாட்டின் அடிப்படையில்தான் ததேகூ அரசுக்கு ஆதரவு கொடுக்கிறது.   “தேர்தலின் போது தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காற்றில் பறக்க விடுவது குறித்தும் எவ்வித அக்கறையும் இல்லாத நிலையே தெரிகிறது” என்பது சொல் அலங்காரத்துக்குப் சொல்லப்படும் குற்றச்சாட்டு. உண்மையில் ததேகூ கொடுத்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்க விட்டுவிட்டது என்றால் மக்கள் ததேகூ அடுத்த தேர்தலில் நிராகரிப்பார்கள். இது தமிழ்மக்களுக்கும் ததேகூ கும் இடையிலான அரசியல் இணக்கப்பாடு. இதில் நாகதஅ  மூன்றாம் தரப்பு!

இந்த நிலையில், 2019 ஆம் ஆண்டில் தாயக மக்கள் தீர்க்கமான அரசியல் முடிவொன்றை எடுப்பது குறித்துச் சிந்திக்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர்களாவும், தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகவும் தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் தலைவர்களை தொடர்ந்தும் நம்பிக் கொண்டிராமல் நேரடி ஜனநாயகப்போராட்டங்களில்; அணியணியாக இறங்குவதன் மூலம் நாம் ஏற்படுத்தக் கூடிய அரசியற்தாக்கம் குறித்தும் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம். அரபு வசந்தம் போலவோ அல்லது பிரான்சின் மஞ்சள் அங்கிப் போராட்டம் போலவோ தாக்கமுள்ள அரசியல் ஜனநாயகவழி நேரடிப் போராட்டங்களைத் தமிழ் மக்கள் தாயகத்தில் முன்னெடுக்கும் போது அவர்களை ஆதரித்து புலம் பெயர் மக்களும் போராட்டத்தில் குதிப்பார்கள். தமிழ் நாட்டிலும், உலகெங்கும் தமிழ் மக்கள் வாழும் நாடுகளிலும் தமிழ் மக்கள் ஈழத் தமிழ் மக்களை ஆதரித்துப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். இக் கூட்டுப் போராட்டச் செயற்பாடு எமது விடுதலைப் போராட்டத்தில் முன்னோக்கிய காலடிகளை எடுத்து வைப்பதற்கு உறுதுணையாக அமையும் என நான் நம்புகிறேன்.

இந் நேரடி ஜனநாயகப் (

direct action) போராட்டங்களையே 2019 ஆண்டு எம்மிடம் எதிர்பார்க்கிறது: ஈழத் தமிழர் தேசம் நேரடி ஜனநாயகப் போராட்டங்களில் தன்னை எழுச்சியுடன் ஈடுபடுத்தட்டும். இதுவே 2019 ஆம் ஆண்டு மலர்ந்துள்ள இத் தருணத்தில் நான் விடுக்கும் முதன்மைச் செய்தியாகும் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது புத்தாண்டுச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதில்: நாகதஅ இன் பிரதமர் எந்த உலகில் இருக்கிறார் என்பது தெரியவில்லை. தமிழ்மக்களையும் அவர்களால் இனம் காணப்பட்ட தலைமையையும்  அவர் பிரிக்கப் பார்க்கிறார். ஏதாவது போராட்டம் என்றால் அதனைத் தமிழ்த் தலைமையும் தமிழ் மக்களும் சேர்ந்து நடத்த வேண்டும். பத்தாயிரம் மைல்களுக்கு இப்பால் சகல வசதிகளோடும் இருந்து கொண்டு அங்குள்ள மக்களைப் போராட அழைப்பது அறமாகாது.  அவர்களை ஆதரித்து புலம்பெயர் மக்களும் போராட்டத்தில் குதிப்பார்கள் என்பது ஊமையன்  கண்ட கனவாகத்தான் இருக்க முடியும். நாகதஅ நடைமுறைச் சாத்தியங்கள் பற்றி யோசனை செய்ய வேண்டும். எமது போராட்டம் எதுவாக இருந்தாலும் அது நியாயத்தின் பக்கம் இருக்க வேண்டும். அனைத்துலக நாடுகள் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நாகதஅ ஒன்று செய்யலாம். 2019 ஆம் ஆண்டில் ஐநாமஉ பேரவையில் இடம்பெற இருக்கும் 30 -1, 34 -1 தீர்மானங்கள்  முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் பணியில் ஈடுபட வேண்டும்.

நாகதஅ பிரதமர்   வெளியிட்ட  2019 புத்தாண்டு அறிக்கை தாயகத்தில் பல நெருக்கடிக்குள் அரசியல் செய்து கொண்டிருக்கும்  ததேகூ குறிவைத்துத் தாக்கும் முயற்சியாகவே  பார்க்க வேண்டியுள்ளது.

நக்கீரன்

 

Share the Post

You May Also Like