கருத்துக்களால் களமாடுவோம் கருத்துரைக்கு சுமந்திரன் பதில்!

யாழ்ப்பாணம் அரசியல் ஆர்வலர் குழாம் நடத்தும் ”கருத்துக்களால் களமாடுவோம்”  மாபெரும் அரசியல் கருத்தரங்கு 12 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு யாழ்.வீரசிங்கபம் மண்டபத்தில் நடைபெற உள்ளது.

”தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு ஜனநாயக வழிமுறைகளினூடாகத் தீர்வும் தமிழ்த் தலைமைகளின் வகிபாகமும்” என்னும் கருப்பொருளில் சிவில் சமூகப் பிரமுகர்கள் முன்வைக்கும் வாதங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் பதிலுரைக்கின்றார்.

அக வணக்கம், வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தனின் வரவேற்புரையைத் தொடர்ந்து கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பிரதி அதிபர் சந்திரமௌலீசன் லலீசனின் தலைமையுரையுடன் சிவில் சமூகப் பிரதிநிதிகளான வல்வெட்டித்துறை சிவன்கோவில் பிரதமகுரு பிரம்மஸ்ரீ ப.மனோகரக் குருக்கள், தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாணம் அத்தியட்சாதீனம் பேராயர் அதிவண. டானியல் தியாகராஜா, யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீடத்தைச் சேர்ந்த கலாநிதி சுப்பிரமணியம் சிவகுமார், யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி, சிரேஷ்ட ஊடகவியலாளரும் காலைக்கதிர் பத்திரிகை ஆசிரியரும் நிர்வாக இயக்குநருமான நடேசபிள்ளை வித்தியாதரன் ஆகியோர் தமிழ்த் தேசியப் பிரச்சினை தொடர்பாகவும் தமிழ்த் தலைமைகளின் வகிபாகம் தொடர்பிலும் தமக்குள்ள ஐயங்களையும் மக்கள் மத்தியில்  பரவலாக எழுப்பப்படும் எதிர்விமர்சனங்கள் தொடர்பிலும் கருத்துரைப்பர்.

சிவில் சமூகப் பிரதிநிதிகளின் கருத்துக்களை உள்வாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர், அவர்களால் தொடுக்கப்பட்ட வினாக்கள், ஐயங்கள், தெளிவின்மை, குழப்பங்கள் ஆகியவற்றுக்கு இறுதியில் பதிலுரை வழங்கித் தெளிவுபடுத்துவார்.

நாடாளுமன்ற உறுப்பினரின் பதிலுரையைத் தொடர்ந்து அரசியல் ஆய்வாளர் சிவராஜா கஜன் நன்றியுரை வழங்குவார். இந்த நிகழ்வுகளை வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன் தொகுத்து வழங்குவார்.

அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், அரசியல் ஆர்வலர்கள், பொதுமக்கள் அனைவரையும் கட்சிபேதமின்றி கலந்து பயனடையுமாறு ஏற்பாட்டுக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Share the Post

You May Also Like