சு.கவும் ஐ.தே.கவும் மாறி மாறி தமிழருக்குத் துரோகமிழைப்பு!-  சார்ள்ஸ் எம்.பி

“இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழர்களுக்குத் துரோகமிழைத்தன.”

– இவ்வாறு சபையில் குற்றம்சாட்டினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்.

“மஹிந்தவும், மைத்திரியும் வடக்கில் பிறந்திருந்தால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு இன்று சிறைவாசம் அனுபவித்து வந்திருப்பர்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

“சகல மக்களுக்கும் சமவுரிமை வழங்கப்படும் வரை இலங்கை முன்னேற முடியாது” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டமூலம் மற்றும் ஆளொருவரின் இறப்புக்கான சேதவீடுகளை அறவிடுதல் சட்டமூலம் குறித்த விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பயங்கரவாத தடைச் சட்டதின் கீழ் வடக்கு, கிழக்கில் கைதுசெய்யப்பட்டு பல வருட காலமாகப் பல தமிழர்கள் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்றனர். தற்போது இவ்வாறு 103 பேர் சிறைச்சாலைகளில் உள்ளனர். இவர்கள் அனைவரும் சாட்சியங்களின்றி குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இது சர்வதேச சட்டத்திற்கு முரணானது.

இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் அனைவரும் வடக்கு, கிழக்கில் பிறந்த குற்றத்திற்காக சூழ்நிலை (அரசியல்) கைதிகளானவர்கள். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ அல்லது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோ வடக்கில் பிறந்திருந்தால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு இன்று சிறைகளிலேயே வாடிக்கொண்டிருந்திருப்பர்.

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட திடீர் ஆட்சி மாற்றத்தின்போது சிறைச்சாலைகளுக்குச் சென்ற நாமல் ராஜபக்ஷவும், மூன்று பிரதி அமைச்சர்களும் “ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கூறுங்கள். நாங்கள் ஆட்சிப்பீடம் ஏறியதும் உங்களை உடனடியாக விடுப்போம்” என்று தமிழ் அரசியல் கைதிகளிடம் கூறியுள்ளனர்.

அவ்வாறு தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியுமானால் இப்போது ஏன் விடுவிக்க முடியாது?

இதேவேளை, புதிய அரசமைப்பு திருத்தம் வராது என மக்களைத் திசை திருப்பும் முயற்சியில் சிலர் இனவாதக் கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர்”

Share the Post

You May Also Like