தமிழரசுக் கட்சியின் கணக்குவழக்கு செயற்குழுக் கூட்டத்தில் சமர்ப்பிப்பு! சுமந்திரன் பதிலடி

தமிழரசுக் கட்சியின் கணக்குவழக்குகள் மத்திய செயற்குழுவின் ஒவ்வொரு கூட்டத்திலும் சமர்ப்பிக்கப்படுகின்றன. அத்துடன் ஒவ்வொரு வருடமும் தவறாமல் தேர்தல் ஆணையகத்துக்கும் வழங்கப்படுகின்றது. தகவல் அறியும் சட்டமூலம் ஊடாக வேண்டுமாயின் தேர்தல் ஆணையகத்திடம் விண்ணப்பித்து பெற்று பார்வையிட்டுக்கொள்ளலாம்.

– இவ்வாறு ஆணித்தரமாகவும் உறுதியாகவும் தெளிவாகவும் பதிலளித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரன்.

நேற்று வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற ”கருத்துக்களால் களமாடுவோம்” நிகழ்வில் சிரேஷ்ட ஊடகவியலாளரும் ”காலைக்கதிர்” பத்திரிகை ஆசிரியருமான நடேசபிள்ளை வித்தியாதரன், கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் மீது அபாரமாண கேள்விக்கணைகளை பத்துகளாக வீசினார். அவரால் வீசப்பட்ட ஒவ்வொரு கேள்விக் கணைகளுக்கும் மிகவும் நிதானமாகக் களமாடினார் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.

இந்தக் கூட்டத்தில் வித்தியாதரன் அவர்கள் கேள்விக் கணைகளைத் தொடுப்பதற்காகத் தன்னைத் தயார்ப்படுத்தியபோது, அவையிலுள்ள அன்பர் ஒருவரால் எழுத்தில் ”தமிழரசுக் கட்சி தனது மத்திய செயற்கூட்டத்தில் கணக்கு வழக்குகளைச் சமர்ப்பிப்பதில்லையே? இதுதொடர்பில் தங்கள் பதில் என்ன?” என்று ஒரு வினா தொடுக்கப்பட்து.

அவரது கேள்விக் கணைக்கு எந்தப் பதட்டமுமின்றி மிகவும் நிதானத்துடனும் தெளிவுடனும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பதிலளித்தார்.

அவரது பதிலில் –

ஊடகவியலாளர் வித்தியாதரன் என்மீது பல கேள்விகளை முன்வைத்துவிட்டு, மிகவும் லாவகமாக அமர்ந்திருக்கின்றார். அவரால் இறுதியாக முன்வைக்கப்பட்ட கேள்வி தமிழரசுக் கட்சியின் கணக்கு வழக்குகள் மத்திய செயற்குழுவில் சமர்ப்பிக்கப்படுவதில்லை என்ற ஓர் அபாண்டமான பாரிய குற்றச்சாட்டு. இந்தக் கேள்விக்கு நான் முதலில் பதில் வழங்கிவிட்டு ஏனைய விடயங்களுக்குள் செல்கின்றேன்.

ஏனெனில், வித்தியாதரன் அவர்கள் முன்வைத்த இந்த அபாண்டமான குற்றச்சாட்டுக்கும் நான் பதிலளிப்பதற்கும் இடையில் யாராவது அவையில் இருந்து எழுந்து சென்றுவிடுவார்களாயின் அவர்கள் தப்பான அபிப்பிராயத்துடன் சென்றுவிடுவார்கள். குழப்பத்தில் இருந்து அவர்களைத் தெளிவுபடுத்துவதற்காகவே நான் இந்தக் குற்றச்சாட்டுமீதான விளக்கத்தை முதலில் தருகின்றேன்.

எமது கட்சியின் கணக்கு வழக்குகள் கட்சியின் ஒவ்வொரு செயற்குழுக் கூட்டத்திலும் சமர்ப்பிக்கப்படுகின்றன. அதைவிட, ஒவ்வொரு வருடமும் சகல கணக்கு வழக்குகளும் தேர்தல் திணைக்களத்துக்கும் சமர்ப்பிக்கப்படுகின்றன. வேண்டுமானால் நீங்கள் தகவசல் அறியும் சட்டமூலத்தின் ஊடாகக் கோரி விண்ணப்பித்து அவற்றைப் பெற்றுப் பார்வையிடலாம். – என்றார்.

Share the Post

You May Also Like