தேசம், தேசியம், சுயநிர்ணயம் என்றால் என்ன? விளக்குகின்றார் சட்டத்தரணி சுமந்திரன் எம்.பி.!

தேசம், தேசியம், சுயநிர்ணயம் என்றால் என்ன? என்ற சொற்பதங்கள் மக்கள் மத்தியில் அவரவர் அறிவுக்கு ஏற்ப பரவலாகப் பேசப்படும் பதங்களாகும். எமது இன விடுதலை தொடர்பிலும் இந்த சொற்பதங்கள் ஆழமான ஆதிக்கத்தைச் செலுத்தியுள்ளன. இவையனைத்துக்கும் தெளிவான – நேர்த்தியான – விளக்கத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுமந்திரன் தந்துள்ளார்.

நேற்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் பெருந்திரளான கற்றறிந்த சமூகத்தினர், அரசியல் ஆர்வலர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் மீது சிவில் சமூகப் பிரதிநிதிகளால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சலனமின்றி விளக்கமளிக்கையிலேயே அவர் இவை தொடர்பிலும் கருத்துரைத்திருக்கின்றார்.

அவரது விளக்கம் வருமாறு:-

தேசம், தேசியப் பிரச்சினை, தேசிய இனம். இந்தச் சொற்றொடர்களை நாங்கள் சரளமாகப் பாவிக்கின்றோம். ஒரு தேசம் என்றால் என்ன? என்றொரு கேள்வியை எழுப்பினால் அதற்கு ஒரு பதில் கிடையாது. இந்தியா சுதந்திரமடைந்தபோது ஜவகர்லால் நேரு சொன்ன ஒரு வார்த்தை ஒரு வசணம், ”இந்த நடு இராத்திரியிலே உலகம் நித்திரையாய் இருக்கின்றபோது நீண்டகாலமாக அடக்கப்பட்டிருந்த ஒரு தேசத்தினுடைய ஆன்மாவிற்கு வார்த்தைகள் வருகின்றன!”. அவர் என்னத்தை தேசம் என்று சொன்னார்? எதை அவர் தேசம் என்று வர்ணித்தார்? முழு இந்திய நாட்டையும் ஒரு தேசம் என்று சொன்னார். தேசத்தினுடைய ஆன்மா பேசத் தொடங்குகின்றது. தேசம் என்பதற்கு, ஒரு முழுவதும் சட்ட ரீதியானதும் அரசியல் ரீதியானதுமான வரைவிலக்கணம் கிடையாது. அதனால்தான் என்னவோ சர்வதேச சட்டத்தில் சுயநிர்ணய உரிமை யாருக்கிருக்கின்றது என்று சொல்லப்படும் போது ”தேசம்” என்ற சொல் பாவிக்கப்படவில்லை. ”மக்கள்” என்ற சொல்தான் பாவிக்கப்பட்டிருக்கின்றது.

ஐக்கியநாடுகள் மனித உரிமைப் பிரகடனத்திலே முதலாவது உறுப்புரை ”மக்கள்”. அந்த மக்கள் என்பவர்கள் யாவர்? என்ற கேள்விக்குப் பல வியாக்கியானங்கள் உள்ளன. 1990 ஆம் ஆண்டு பரிஸ் மாநாட்டில் சில படிமுறைகளைச் சொல்லியிருந்தார்கள். 10 – 12 படிமுறைகளைக் குறிப்பிட்டு, அந்தப் படிமுறைகள் இருந்தால் அவர்கள் ஒரு மக்கள். அந்த 12 படிமுறைகளும் இலங்கையில் வாழ்கின்ற தமிழ்மக்களுக்கு இருக்கின்றன.. நாங்கள் ஒரு மக்கள். ஆகையினால்தான் நாங்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள்.

சுயநிர்ணய உரிமை என்பது ஒன்றுதான். அதை சிலர் தவறாக உள்ளக சுயநிர்ணய உரிமை என்றும், வெளியக சுயநிர்ணய உரிமை என்றும் சொல்கின்றார்கள். அது தவறு. சுயநிர்ணய உரிமை என்பது ஒன்று. அது இருக்கின்றதா? இல்லையா? அவ்வளவுதான். அந்த சுயநிர்ணய உரிமையை உள்ளகமாகவும் பயன்படுத்தலாம் அல்லது வெளியகமாகவும் பயன்படுத்தலாம். ஒரே உரித்துத்தான்.

இன்றைக்கு இருக்கின்ற சர்வதேச சட்டத்தில் காலனித்துவகாலம் அல்லது காலனித்துவ ஆட்சி முடிவடைகின்றபோது நாடுகள் சுதந்திரமடைகின்றபோது இந்த சுயநிர்ணய உரித்து பயன்படுத்தப்பட்டது. அத்தோடு இந்த வெளியக சுயநிர்ணய உரித்து முடிந்துவிட்டதாகச் சொல்கின்றார்கள்.

1960 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றின் பிரகாரம், அந்தக் காலம் முடிவடைந்துவிட்டது என்று சொல்கின்றார்கள். அதுக்குப் பிறகு வருகின்ற காலத்திலே ஒரு மக்கள் ஒடுக்கப்படுகின்றார்களாக இருந்தால் – சுயநிர்ணய உரித்துடைய மக்கள் ஒடுக்கப்படுகின்றார்களாக இருந்தால் – அல்லது அவர்களுக்கு அவர்கள் வாழ்கின்ற நாட்டிலே சுயமாகத் தங்களைத் தாங்களே ஆளுகின்ற கட்டமைப்பு மறுக்கப்பட்டிருந்தால் – அவர்கள் வெளியான சுயநிர்ணய உரித்துக்கு ஏற்புடையவர்கள். அது இன்றைய சர்வதேச சட்டம்.

ஒடுக்கப்பட்டவர்கள் உள்ளக சுயநிர்யண கட்டமைப்பிலே தங்களைத் தாங்களே ஆளுகின்ற உரித்து மறுக்கப்பட்டவர்கள் என்ற இந்த இரண்டு அம்சங்களும் இலங்கைவாழ் தமிழ் மக்களிடத்திலே இருக்கின்றது என்று நாங்கள் சர்வதேசத்தில் நிரூபிப்போமாக இருந்தால் வெளியக சுயநிர்ணய உரித்தை நாங்கள் பெறுவதற்கு ஏற்புடையவர்களாக இருப்போம். பெறுவோம் என்று நான் சொல்லவில்லை. பெறுவதற்கான ஒரு வாதத்தை முன்வைக்கக்கூடியதாக இருக்கும்.

ஆனால் அதற்கு முன்னதாக, அந்த ஒடுக்கு முறையில் இருந்து மீள்வதற்கும் உள்ளகக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கும் நாங்கள் சரியான விதத்திலே பங்காற்றியிருக்கின்றோம் என்பதை நாங்கள் நிரூபிக்கப்படவேண்டிய கடப்பாடு இருக்கின்றது. நாட்டு சட்டங்களைப் பிரயோகித்து – சமத்துவ சட்டங்களைப் பிரயோகித்து – நாங்கள் ஒடுக்குதலில் இருந்து இந்தக் கட்டுக்கோப்புக்குள்ளேயே இருக்கின்ற நீதி, நியாயங்களை வைத்து நாங்கள் வெளியே வரலாம். அதற்கான முயற்சிகளைச் செய்திருக்கின்றோம். பாரபட்சம் காட்டுதலை நாங்கள்  தவிர்க்கக்கூடியதாக உள்ளது. உள்ளகக் கட்டமைப்புக்குள்ளே எங்களை ஆட்சி செய்வதற்கான முயற்சியில் நாங்கள் உண்மைத்துவத்தோடு பங்குபற்றியிருக்கின்றோம் என்பதை நாங்கள் சர்வதேசத்துக்குக் காண்பிக்கவேண்டும் – என்றார்.

 

 

Share the Post

You May Also Like