விடுதலைப் புலிகள் தொடர்பாக உங்கள் நிலைப்பாடுதான் என்ன? சுமனிடம் கேட்ட வித்தி!

விடுதலைப் புலிகளை சுமந்திரன் விமர்சிப்பவர். அவர் புலி எதிர்ப்பாலர் என பலரும் சுமந்திரனுக்கு எதிரான பிரசாரத்தில் பபயன்படுத்துகின்றமை வழமை. இதை நன்கு உணர்ந்திருந்த – இதற்கு நேரடியாக அவரிடம் பதிலை எதிர்பார்த்த – மூத்த ஊடகவியலாளரும் ‘காலைக்கதிர்’ பத்திரிகை ஆசிரியருமான நடேசபிள்ளை வித்தியாதரன் பளீச்சென்று சுமந்திரனைப் பார்த்து விடுதலைப் புலிகள் தொடர்பாக தங்கள் நிலைப்பாடு என்ன? என்று கேள்விக்கணையைப் போட்டுடைத்தார்.

அவரது கேள்விக்கு ஆணித்தரமாகவும் உறுதியாகவும் தெளிவாகவும் பதிலளித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரன்.

நேற்று வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற ”கருத்துக்களால் களமாடுவோம்” நிகழ்வில் சிரேஷ்ட ஊடகவியலாளரும் ”காலைக்கதிர்” பத்திரிகை ஆசிரியருமான நடேசபிள்ளை வித்தியாதரன், கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் மீது அபாரமாண கேள்விக்கணைகளை பத்துகளாக வீசினார். அவரால் வீசப்பட்ட ஒவ்வொரு கேள்விக் கணைகளுக்கும் மிகவும் நிதானமாகக் களமாடினார் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.

அவரது பதிலில் –

விடுதலைப் புலிகளைப் பற்றி நான் ஓர் இடத்திலும் குறைகூறியமை கிடையாது. இன்றைக்கும் குறைகூறப்போவது கிடையாது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வோர் அரசியல் தலைவர்கள் இருந்திருக்கின்றார்கள். அப்படியானால் தந்தை செல்வாவைக் குறைகூறலாம் ஏமாற்றப்பட்டுவிட்டார் என்று. ஜி.ஜி.பொன்னம்பலத்தைக் குறைகூறலாம், அமிர்தலிங்கத்தைக் குறைகூறலாம். குறைகூறுவதனாலே நாம் எதனையும் அடையப்போவது கிடையாது. அந்தந்த வேளைகளிலே – அந்தந்த நிலைமைகளிலே – அவர்கள் எடுத்த தீர்மானத்தை நாங்கள் பின்னொரு காலத்தில் விமர்சிக்க முடியாது.

1963 ஆம் ஆண்டு நெல்சன் மண்டேலா நீதிமன்றத்தின் முன்நின்று அரசைக் கவிழ்ப்பதற்கான குற்றவாளியாக ஆயுள் சிறைத் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். அந்தநேரத்தில் நீதிபதி அவரிடத்தில் ஒரு கேள்வியைக் கேட்டார்.

அவர் குற்றவாளிக் கூண்டிலே இருந்து சொன்ன பதில்,” 1961 ஆம் ஆண்டு நாங்கள் – ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் தலைவர்கள் கூடி ஒரு முடிவை எடுத்தோம். எங்களுக்கு எதிராகக் கட்டவிழ்க்கப்பட்டிருக்கின்ற வன்முறையை எங்களுடைய மக்களாலே தாங்கிக்கொள்ளமுடியாமல் இருக்கின்றது. அiதை எதிர்ப்பதாக இருந்தால் நாங்களும் வன்முறையைக் கையில் எடுக்கவேண்டும் என்று ஒரு தீர்மானம் எடுத்தோம். அது அன்று நாங்கள் எடுத்த தீர்மானம் அது.. அதற்கு முதல்வனாக நான் நியமிக்கப்பட்டேன். ஆம், நாங்கள் அந்த வன்முறைகளைச் செய்தோம்” என்று சொல்லிவிட்டு, அவர் நீதிபதிகளிடத்தில் ஒரு விடயத்தைச் சொல்லுகின்றார். ”1961 ஆம் ஆண்டு நாங்கள் எடுத்த தீர்மானத்தை நான் இப்போது உங்களுக்குச் சொல்லுகின்றேன். நான்’ சொல்வதை நீங்கள் விளங்கிக்கொள்ளப்போவதில்லை. அது சரியென்று நீங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் அன்றைக்கு இருந்த சூழ்நிலையிலே – அன்றைக்கு நாங்கள் இருந்த மனேனிலையிலே அதுசரியென நாங்கள் அதைச் செய்தோம்” என்று சொல்கின்றார்.

அதேபோன்றுதான் இங்கும். திம்புக் கோட்பாட்டில் இருந்து பின்வாங்கினோம், சந்திரிகா அம்மையாரின் தீர்வுத் திட்டத்தைப் பின்வாங்கினோம், விடுதலைப் புலிகள் தொடர்பான செயற்பாடுகள். இவை அனைத்தும் அந்தந்தச் சூழ்நிலைகளில் அந்தந்தத் தலைவர்களுக்கு சரியாகப் பட்டன. அதை நாங்கள் இன்று விமர்சிக்கக்கூடாது. அதை நாங்கள் இன்று தவறு என்று சொல்லக்கூடாது. அந்தச் சூழ்நிலையில் அது அவ்வாறே. – என்றார்.

 

Share the Post

You May Also Like