அரசமைப்பு ஊடாகத் தீர்வு வரும் என்று இன்னமும் நம்புகிறீர்களா? வித்தியின் கேள்விக்கு சுமன் பதில்

”அரசமைப்பு ஊடாகத் தீர்வு வரும் என்று நீங்கள் இன்னமும் நம்புகின்றீர்களா?” என வீரசிங்கம் மண்டபத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ”கருத்துக்களால் களமாடுவோம்” நிகழ்வில் மூத்த ஊடகவியலாளரும் ‘காலைக்கதிர்’ பத்திரிகை ஆசிரியருமான நடேசபின்ளை வித்தியாதரன் கேள்வி எழுப்பினார்.

அவரது கேள்விக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அளித்த பதில் வருமாறு:-

கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட தீர்வு முயற்சிகள் அனைத்தையும் நாங்கள் தவறவிட்டுள்ளோம். ஆனால், அதை நான் விமர்சிக்கவில்லை. விமர்சிக்கவும் முடியாது. ஒவ்வொரு தலைவர்களாலே மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாடுகளும் அந்தந்தச் சூழ்நிலைகளில் சரியானவையாகத்தான் இருந்தன. அதை தற்போது விமர்சிப்பதில் அர்த்தமில்லை. ஆனால், இந்தத் தருணத்தை நாம் கவனமாகப் பயன்படுத்தவேண்டும்.

இன்றைக்கு சர்வதேசம் எம்பின்னாலே நிற்கின்றது. ஒரு நாடு தவறாமல் எங்களுடைய இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வைக் கொடுக்கவேண்டும் என்று ஆதரவாகத்தான் இருக்கின்றார்கள். ரஷ்யாவும் ஆதரவாகத்தான் இருக்கின்றார்கள். சீனாவும் ஆதரவாகத்தான் இருக்கின்றார்கள்.

ஆனால், போர் நடந்த காலத்திலே 33 நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பு என்று தீர்மானித்தார்கள். அந்த ஆதரவு இருக்கவில்லை. அதுசரி, இது சரி, அது பிழை, இது பிழை என்று நான் சொல்லவரவில்லை. நான் சொல்வது இன்றைக்கு இருக்கின்ற இந்த சாதகமான சூழ்நிலையை எங்களுடைய மக்களுக்கு நாம் எவ்வாறு பயன்படுத்தப்போகின்றோம் என்பதுதான் பிரச்சினை. சர்வதேச சமூகம் எங்களுக்கு எதிராகச் செயற்பட்டது என்று இன்றைக்கும் குழம்பிக்கொண்டிருப்பதற்காக அல்ல. இன்றைக்கு எங்களோடு நிற்கின்றார்கள். அந்த ஆதரவை எங்களுடைய மக்களுக்கானதாக எவ்வாறு மாற்றப்போகின்றோம் என்று சிந்திக்கவேண்டும். எப்படியாக செய்துமுடிக்கமுடியும். அந்த அழுத்தத்தை இலங்கை அரசுமீது எப்படி பிரயோகிக்கமுடியும்.அதுதான் இப்போதைய கேள்வி?

புதிய அரசமைப்பைக் கொண்டுவருவோம் என்று சொல்லி உலகத்துக்கு வாக்குறுதி கொடுத்தது இலங்கை அரசாங்கம். 2015 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 14 ஆம் திகதி இலங்கை வெளிவிவகார அமைச்சருடைய ஜெனீவா மனித உரிமை பேச்சிலே தெட்டத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றார். தமிழ்மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வாக – யுத்தக் குற்றங்கள் தொடர்பில் உரையாற்றும்போது கூறுகின்றார் -‘‘ மீள நிகழாமையை உறுதிப்படுத்துவதற்காக – நாங்கள் புதியதோர் அரசமைப்பைக் கொண்டு வருவோம்’‘. இது உலகத்துக்குக் கொடுத்த வாக்குறுதி.

மஹிந்த ராஜபக்ஷ பல தடவைகள் உலகத்துக்கு வாக்குறுதியளித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சம்பந்தன் ஐயா மஹிந்த ராஜபக்ஷவைப் பார்த்துக் கேட்டார், ”யுத்தத்தை முடிப்பதற்கு நீர் உலகத்துக்குக் கொடுத்த வாக்குறுதி என்ன? இந்தியாவுக்குக் கொடுத்த வாக்குறுதி என்ன? யுத்தத்தை முடிப்பதற்கு நீங்கள் உதவிசெய்யுங்கள். நான் அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாகக் கொடுப்பேன். 13 ஆம் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தி – அதை அர்த்தமுள்ளதாக்கி – அதற்கு அப்பாலும் சென்று தீர்வை வழங்குவேன்”. மூன்று தடவைகள் இந்தியாவுக்கு எழுத்திலே கொடுத்த வாக்குறுதி. ஒருதடவை மஹிந்த ராஜபக்ஷவே கைச்சாத்திட்டார். மற்ற இருதடவைகளும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், எஸ்.எம்.கிருஷ்ணாவுக்குக் கொடுத்த வாக்குறுதி. உலகத்துக்குக் கொடுத்த வாக்குறுதி. அதை நிறைவேற்ற செய்வது எப்படி?

மென்வலுவிலே இருக்கின்ற பிரதான பாகம் உலகத்தின் ஆதரவு. வன்முறையற்ற ஜனநாயக முறையிலே நாங்கள் பயணிக்கின்றோம் என்பதை அவர்கள் நிச்சயமாக நம்பவேண்டும். ஜனநாயக வழியிலே கிடைக்குமா? கிடைக்காதா? கிடைக்கும் என்று இன்னமுமா நம்புகின்றீர்கள்? என்ற கேள்விகளுக்கு நான் மாற்றுக்கேள்வியைத்தான் கேட்கவேண்டும். ஜனநாயக வழி இல்லாமல் வேறென்ன வழியை நீங்கள் உத்தேசித்திருக்கின்றீர்கள் எங்களுடைய மக்கள் கையாளவேண்டும் என்று? மீண்டும் ஆயுதம் ஏந்திப் போராடவேண்டும் என்று உத்தேசிக்கின்றீர்களா? மிகவும் அபாயகரமான ஒரு முன்மொழிவு. அதை இந்த மண்டபத்திலே நான் கண்டேன். நண்பர் வித்தியாதரன் அதைச் சொல்கின்றபோது எழுந்த கைதட்டல்கள். விசில்கள். இந்த உணர்ச்சிகளை இலகுவாகத் தட்டியெழுப்பி விடலாம். அதனை முகாமைத்துவம் செய்வது கடினம். நீங்கள் தட்டி எழுப்புபவர்களே நாளை உங்களைச் சுட்டுக் கொல்வார்கள்.

ஆகையால், பழையதில் இருந்து நாங்கள் பாடம் படிக்கவேண்டுமாக இருந்தால் அதைச் செய்யக்கூடாது. குறிப்பாக ஊடகங்கள் செய்யக்கூடாது. இன்றைக்கு அரசியல் வாதிகள் செய்கின்ற அரசியலைவிட ஊடகங்கள் செய்கின்ற அரசியல் மோசமானதாக உள்ளது. நம்பிக்கையீனத்தை வளர்ப்பதிலே அவர்கள் வல்லவர்கள். இன்றைக்கு ஒரு பத்திரிகையை எடுத்துப் பார்த்தால் ஒற்றையாட்சியின் கீழ்தான் தீர்வு. பௌத்தத்துக்கே முன்னுரிமை. வடக்குக் கிழக்கு இணைப்பு இல்லை. என்று பெரிதாகக் கட்டமிட்டு போட்டிருக்கின்றார்கள். ஊடகங்கள் மக்களைக் குழப்பாமல் ஆரோக்கியமாகச் செயற்படவேண்டும். –  என்றார்.

Share the Post

You May Also Like