ஏக்கிய இராட்சியவுக்கான தமிழ் வடிவம் ‘ஒற்றை ஆட்சி’ அல்ல அது ‘ஒருமித்த நாடு’!

‘எக்கிய இராட்சிய”‘ என்ற சிங்கள பதத்தின் தமிழ் வடிவம் ஒற்றை ஆட்சி அல்ல. ”ஒருமித்த நாடு”. ஒற்றை ஆட்சி என்பது ஓர் ஆட்சிமுறையைக் குறிக்கின்றது. ஒருமித்த நாடு என்பது ஆட்சிமுறை அல்ல. அது நாட்டைக் குறிக்கின்றது.

– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.

நேற்றுமுன்தினம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற ”கருத்துக்களால் களமாடுவோம்” என்ற நிகழ்வில் கருத்துரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவரது உரையில் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

இந்த ஒற்றையாட்சி, ஒருமித்த நாடு என்பன தொடர்பில் நான் பல தடவைகள் சொல்லிக் களைத்துவிட்டேன். ஆனாலும், மீண்டும் இந்த இடத்தில் சொல்லுகிறேன். புதிய அரசமைப்பு நகலிலும் அதுதான் சொல்லப்பட்டுள்ளது. இலங்கை என்பது மத்தியிலும் மாகாணத்திலுத் அரச அதிகாரங்களைக் பிரயோகிக்கக்கூடிய ஒருமித்த நாடு. இந்த ஒருமித்தநாடு என்றால் பிரிக்கமுடியாத – பிளவுபடாத – நாடு. அவ்வளவுதான். வரைவிலக்கணத்தையும் கொடுத்து அந்த சொற்றொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது. மூன்று மொழிகளிலும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எக்கியராட்சிய – ஒருமித்த நாடு என்று தெளிவாக எழுதப்பட்டுள்ளது. அதுதான் ஒரேயொரு முன்மொழிவு. மாற்று முன்மொழிவுகள் கிடையா.

இவ்வாறு சொல்லப்பட்டு இடைக்கால வரைவு வெளிவந்தது செப்ரெம்பர் 23 ஆம் திகதி 2017 ஆம் வருடம். பத்திரிகைகள் இன்றைக்கு வரைக்கும் எக்கிய இராட்சிய என்றுதான் எழுதுகின்றார்கள். நான் செய்கின்ற விண்ணப்பம் எக்கிய இராட்சியஒருமித்த நாடு என்று எழுதுங்கள். ஏன் தமிழை விட்டு சிங்கள சொற்பதத்தை மட்டும் பாவிக்கவேண்டும். எக்கிய இராட்சிய என்று சிங்களத்தில் ஒருவர் சொல்வாரானால், அதற்கு ஒற்றை ஆட்சி என்று மொழிபெயர்ப்பு போடவேண்டும் என்பதும் கிடையாது. புதிய அரசியலமைப்பைப் பற்றி எழுதுகின்றபோது – இன்றைக்கு இருக்கின்ற அரசமைப்பில் அதுதான் மொழிபெயர்ப்பு அதுசரி. ஆனால், புதிய அரசமைப்பிலே அப்படி அல்ல என்று எழுதப்பட்டிருக்கின்றது – சொல்லப்பட்டிருக்கின்றது – உத்தியோகபூர்வமாக வைக்கப்பட்டிருக்கின்றது.

இதற்குக் காரணம் ஒன்று இருக்கின்றது. எக்கிய என்ற சொல் ஒன்று – ஒருமித்த – என்ற அர்த்தத்தைக் கொடுக்கும். ஐக்கிய, ஏக்கிய என்பன வடமொழியில் இருந்து வருகின்ற சொற்கள். ஐக்கிய என்றதுதான் எக்கிய – ஒன்றாக இருப்பம். அது ஓர் ஆட்சிமுறையைக் குறிக்கின்ற சொல் அல்ல. ஆனால், ஒற்றை ஆட்சி என்பது தெட்டத்தெளிவாக ஓர் ஆட்சிமுறையைக் குறிக்கின்றது. எக்கிய இராட்சிய அது ரஜஜ அல்ல. ரஜஜ என்றால் அரசாங்கம். இராட்சிய என்றால் நாடு. ஒரு நாடு – ஒற்றுமையாக இருக்கின்ற நாடு. அதனுடைய அர்த்தம் அதுதான். அதைத்தான் நாங்கள் ஒருமித்த நாடு என்று சொல்கின்றோம்.

இந்த ஒற்றை ஆட்சி என்ற சொற்பதத்தை சிங்கள மக்களை ஏமாற்றவேண்டும் என்று நாங்கள் தவிர்க்கவில்லை. பலவிதமான மக்கள் மத்தியில் நடத்தப்பட்ட மதிப்பீடுகள் பலவற்றை நாங்கள் பார்த்தோம். அதிலே இலங்கை எப்படியான நாடாக இருக்கவேண்டும் என்றால் எக்கிய இராட்சிய நாடாக இருக்கவேண்டும் என்பது சிங்கள மக்களில் 90 வீதமானவர்களின் கருத்து. அடுத்த கேள்வி ஏன் எக்கிய இராட்சிய இருக்கவேண்டும். நூறுக்கு நூறு சதவீதமானவர்களின் கருத்து நாடு ஒன்றாக இருக்கவேண்டும். ஆட்சிமுறையைப்பற்றி எவரும் சொன்னமை கிடையாது. நாடு பிழவுபடாமல் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் எக்கிய இராட்சிய இருக்கவேண்டும் என்பது சிங்கள மக்களின் கருத்து.

ஆகவேதான் அந்த அர்த்தத்தில் அது போடப்பட்டு தெட்டத் தெளிவாக அதில் எழுதப்பட்டுள்ளது. அது வரைவிலக்கணப் பகுதியில் எழுதவில்லை. அதிலே எழுதப்பட்டுள்ளது.இந்த உறுப்புரைக்கு இதுதான் விளக்கம்.- என்றார்.

 

 

 

Share the Post

You May Also Like