மாகாணங்களை இணைக்கும் முறை புதிய அரசியல் நகலில் இருக்கின்றது! உண்மையை வெளிக்கொணர்ந்ததால் வலம்புரியை பாராட்டினார் சுமந்திரன்

மாகாணங்களை இணைக்கும் முறை புதிய அரசியல் நகலில் இருக்கின்றது என்று யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவருகின்ற வலம்புரி பத்திரிகை உள்ளதை உண்மையை திரிவுபடுத்தாமல் மக்கள் மயப்படுத்தியிருக்கின்றது..

– இவ்வாறு வலம்புரி பத்ரிகையை பாராட்டினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.

நேற்றுமுன்தினம் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற ”கருத்துக்களால் களமாடுவோம்” நிகழ்வில் ஊடகங்கள் தொடர்பிலான கருத்துக்களை வெளியிட்டபோதே அவர் இவ்வாறு புகழாரம் சூட்டினார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

நான் பலமுறை வலம்புரி பத்திரிகையை விமர்சித்திருக்கின்றேன். ஆனால், இன்றைய அதன் செய்தி பாராட்டுக்குரியது. அரசமைப்பில் உள்ள விடயத்தை – தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கின்ற விடயத்தை – அதாவது, இரண்டு மாகாணங்களை இணைக்கின்ற சாத்தியம் அரசமைப்பில் உண்டு என்ற விடயத்தை வலம்புரி வெளிக்கொண்டுவந்திருக்கின்றது. இது தொடர்பில் இன்று காலை பருத்தித்துறையில் நடைபெற்ற ஒரு கூட்டத்திலும் பாராட்டியிருந்தேன். எப்படியாக மாகாணங்களை இணைக்கமுடியும் எனவும் எழுதியிருக்கின்றார்கள். நேற்றுவரை யாரும் அதைப் பற்றிப் பேசவில்லை. நாங்களும் பேசவில்லை. எங்களுடைய பேச்சுக்களைக் கேட்டு எழுதவில்லை. புதிய அரசமைப்பு நகலை படித்துப்பார்த்து எழுதியிருக்கின்றார்கள். அதை நான் மெய்ச்சுகின்றேன். அவர்களை வாழ்த்துகின்றேன். அந்தத் துணிவு உங்களுக்கும் வரவேண்டும். அதை நீங்களும் படிக்கவேண்டும்.

வலம்புரி ஆசிரியருக்கு இருக்கின்ற துணிவு மற்றப் பத்திரிகை ஆசிரியர்களுக்கும் வரவேண்டும் என்பதுதான் எங்களுடைய விண்ணப்பம்.

படித்துப் பாருங்கள். ஒரு நகல் வரைவு வந்திருக்கின்றது. அதில் மாகாணங்கள் இணைவதற்கான பொறிமுறை கொடுக்கப்பட்டிருக்கின்றது. எவராவது எழுதியிருக்கின்றார்களா? ஒரு பத்திரிகைதான் எழுதியிருக்கின்றது. – என்றார்.

 

Share the Post

You May Also Like