யாழ் மாநகரசபையின் 70 ஆவது ஆண்டு சேவைப் பூர்த்தியை முன்னிட்டு மாநகரசபையில் விசேட நிகழ்வு

யாழ் மாநகரசபை ஸ்தாபிக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாகின்றமையை முன்னிட்டு இன்று (2019.01.14) காலை 9.00 மணியளவில் யாழ் மாநகரசபையில் விசேட நிகழ்வொன்று இடம்பெற்றது. இந் நிகழ்வில் வடக்குமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானம் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். அத்துடன், யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட், பிரதி முதல்வர் து.ஈசன்,  மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர், பிரதி ஆணையாளர், சிரேஸ்ட உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், திணைக்கள தலைவர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் கலந்து கொண்டு, நிகழ்வை சிறப்பித்த யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் தனது உரையில் –

யாழ் மாநகர சபையின் 70 ஆண்டுகால பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந் நிகழ்வில் எமது அழைப்பை ஏற்று வருகை தந்து நிகழ்வை சிறப்பித்துக் கொண்டிருக்கும் வடக்குமாகாணசபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானம், மாநகர ஆணையாளராக செயற்பட்ட காலத்தின் நினைவுகள், மாநகரத்திற்கான அவரது 15 வருடத்திற்கு மேற்பட்டதான அர்ப்பணிப்பான சேவைகள் குறித்தும் நினைவு படுத்தினார்.

மேலும் மாநகரசபைக்கே உரித்தான இடத்தில் புதிய மாநகரசபைக் கட்டடத் தொகுதியை அமைப்பதற்கான ஆரம்ப முயற்சிகளை இந்தக் காலாண்டுக்குள்ளே நடாத்தி முடிப்பதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். அவ்வாறே மாநகரத்தினுடைய பல்வேறு நிகழ்வுகளை, நகர அபிவிருத்தி அதிகார சபையின் அனுசரணையோடு பல்வேறு திட்டங்கள், உலக வங்கியின் அனுசரணையோடு பல்வேறு திட்டங்கள் மற்றும் இன்னும் பல அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்குரிய ஆண்டாக இந்த ஆண்டை நாங்கள் பார்க்கின்றோம்.

இம் மாநகரசபையை மக்கள் பிரதிநிதியாக நாம் பொறுப்பெடுத்து 9 மாதாங்களாகின்ற இக் காலப்பகுதியில் நாங்கள் உட்பட உறுப்பினர்களும், ஏனையோரும் பல்வேறு விடயங்களை அவதானித்திருக்கின்றோம். மாநகரசபையில் பல்வேறு விடயங்கள் அது நிர்வாக விடயங்களாக இருந்தாலும் சரி, ஏனைய நடைமுறைகள் சார்ந்த நடவடிக்கைகளில் சரி அவற்றில் பல கருமங்கள் திருத்தப்பட வேண்டி இருக்கின்றன, முன்னோக்கி நகர்த்தப்பட வேண்டி இருக்கின்றன. ஆகவே அவற்றை நாங்கள் இணங்கண்டுள்ளோம்.

எங்களுடைய உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மன நிலையிலே மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக உள்ளக ரீதியாக சில முன்னேட்பாடுகளை செய்திருக்கின்றோம். அதில் ஒன்றுதான் எங்களுடைய மாநகரசபையின் பெண் ஊழியர்கள் ஒரே நிறத்திலான சாறிகளை அணிந்திருக்கின்றமை மாநகரத்தின் அடுத்த முன்னோக்கி நகரக்கூடிய ஒரு சமிங்ஞையாக நாங்கள் பார்க்கின்றோம். ஏன் ஏன்று சொன்னால் எல்லோரும் எங்களுடைய மன நிலையிலே மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். மனநிலையில் மாற்றம் ஏற்படாது விட்டல், நாங்கள் செய்ய வேண்டிய கருமங்களை செய்யத் தவறிவிடுகின்றோம்.

மாநகர மக்களின் தேவையை பூர்த்தி செய்கின்ற முதலாவது நிர்வாக நிறுவனமாக நாங்கள் இதைப் பார்க்கின்றோம். மாநகர சபைக்குத்தான் அதிகமான பயனர்கள் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக வருகை தருகின்றனர். அவ்வாறான பயனர்களை நல்ல முறையில் நடத்தி, அவர் தனது தேவையை முழுமையாக பெற்றுக்கொள்ள முடியாத சந்தர்ப்பத்திலும் மாநகர வளாகத்தை விட்டு வெளியேறும் போது வெறுப்படையாது, கௌரவமாக நடத்தப்பட்டு திருப்தியாக தனது தேவையை முடிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் செல்ல வேண்டும் என்பதுதான் எனது பேரவா. ஏன் என்றால் மக்கள் பிரதிநிதிகளும் சரி, அரச உத்தியோகத்தர்களும் சரி மக்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் என்பதை உள்ளுணர்வை நாங்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். சேவை வழங்கும் உத்தியோகத்தர்கள் பல்வேறு சிக்கல்களுக்கும், பிரச்சினைகளுக்கும் முகம் கொடுப்பவர்களாக இருப்பீர்கள் அதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. ஆனால் அவை சேவைகளை பெற வரும் பயனர்கள் மீது அவை காட்;டப்படக்கூடாது. அவர்களை இன்முகத்தோடு வரவேற்று அவர்கள் திருப்தியடையும் விதமாக எமது சேவைகள் அமைய வேண்டும். அது போல கௌரவ உறுப்பினர்களும், கட்சிகள், அதன் நிலைப்பாடுகள் கடந்து மாநகர சபை உறுப்பினராக, மக்கள் சேவகனாக அனைத்துவிதமான மக்கள் நல அபிவிருத்தி செயற்பாடுகளிலும் தம்மை ஈடுபடுத்தி ஒற்றுமையாக, சேர்ந்து செயற்பட அழைத்து நிற்கின்றேன்’ என்று தனது உரையில் குறிப்பிட்டார்.

வட மாகாணசபை உருவாக்கிய மாகாண கீதம் மாகாணசபைக்கு வெளியே முதலாவதாக இசைக்கப்பட்டமையும் யாழ் மாநகரசபையிலே என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

Share the Post

You May Also Like