காணி விடுவிப்பு மக்கள் போராட்டத்தாலேயே! ஆனால் கூட்டமைப்பு உரிமைகொண்டாடுகிறது!

தெல்லியூர் சி.ஹரிகரன்
(உறுப்பினர் – வலி.வடக்கு பிரதேசசபை)

கடந்த 3 ஆம் திகதி சாவகச்சோரி சிவன் ஆலயத்துக்கு அருகில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் பங்குபற்றிய புத்திஜீவிகளின் கருத்துக்களுக்கு களமாடும் நிகழ்வில் கலந்து கருத்துரைத்த புத்திஜீவியும் மதகுருவுமான வணக்கத்துக்குரிய றெக்ஸ் சௌந்தரநாயகம் அடிகளார் பல்வேறுபட்ட பந்துக்களை காரசாரமாக சுமந்திரன் முன் வீசினார். அவரது பந்துவீச்சில் ஒரு காழ்ப்புணர்வு இருந்ததாகவும் தெரிந்தது. உண்மையில் அது சிறப்பு. ஆனால், அதிலும் விட அவர் அதை எவ்வாறு நிதானமாகக் களமாடுகின்றார் என்பதைக் கண்ணுறாமல் பாதிரியார் பந்துகளை மட்டும் வீசிவிட்டுச் சென்றுள்ளார். அவரது நிதானம் மிக்க – சிறப்பான – சாணக்கியமான – தலைவனுக்குரிய – தமிழ் மக்களின் பேச்சாளன் என்ற தகுதிக்குப் பொருத்தமான களத் தடுப்பை பாதிரியார் கண்ணுறாதமைதான் எனக்கு வருத்தமளிக்கின்றது.

நல்லது. நல்ல கேள்விகள். மக்களின் தவறான – புரியுயாத – தெளிவில்லாத – கருத்துப் பசிக்கான கேள்விகள். அதற்கு மிகத் தெளிவாக சுமந்திரன் அவர்கள் விருந்தளித்து, அவர்களின் வயிற்றுப் பசியை தீர்த்திருக்கின்றார். அவரின் அந்த கிராமம் கிராமமமான கருத்தாடல் கருத்துப் பகிர்வால் பலர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நகர்வையும் சுமந்திரனின் சாணக்கியத்தையும் புரிந்திருப்பார்கள் என்று எண்ணுகின்றேன்.

அதில் அவர் தெரிவித்த விடயம் காணி விடுவிப்புகள் தொடர்பில் உரிமை கொண்டாட நீங்கள் யார்? அது மக்கள் போராட்டத்தின் மூலம் கிடைத்தது என்று கேட்டிருந்தார். கூட்டமைப்பின் பேச்சாளராக – ஒரு மக்கள் தலைவனாக – ஒரு சட்டத்தரணியாக – அத்தனை தகுதிக்குரிய தரத்தோடும் அவர் பாதிரியாரின் வினாவுக்குத் தெளிவான விளக்கமளித்திருந்தார். அது அந்தநேரத்தில் அரங்கில் இல்லாத பாதிரியாருக்கும் சென்றடைந்திருக்கும் என்று நம்புகின்றேன்.

சரி, நான் வலி.வடக்கு மக்களின் ஆதரவு பெற்று இரண்டாவது தடவையாகவும் தெரிவுசெய்யப்பட்டவன் என்றவகையிலும் நாங்கள் பதவியேற்கின்றபோது எமது பிரதேசத்தின் பெரும் பகுதி உயர்பாதுகாப்பு வலயமாக இராணுவத்தின் கைகளில் இருந்தது என்பதாலும் அதை விடுவிக்க மக்கள் பிரதிநிதியாக – உள்ளுர் ஆட்சிப் பீடம் சார்பில் – கூட்டமைப்பு எடுத்த முயற்சி தொடர்பில் இங்கு பாதிரியாருக்கும் தெளிவற்றிருக்கும் எமது உயிரிலும் மேலான மக்களுக்கும் மீள் நினைவுறுத்துகைக்காக மீபள்பதிப்பு செய்கின்றேன்.

2011 ஆம் ஆண்டு நாம் ஆட்சிப்பீடம் ஏறிய காலம் தேர்தலில் போட்டியிட எவரும் முன்வராத காலம். மக்கள் தேர்தலில் ஆர்வம் செலுத்தாது இருந்த காலம். கூட்டமைப்பு தேர்தல் கூட்டத்துக்கே மக்கள் சென்று பார்வையிட பயந்து வீட்டுக்குள் முடங்கிக் கிடந்து ஒலிவாங்கிகளின் ஓசையால் காதோரம் எமது பேச்சுக்களைக் கேட்ட காலம்.

அந்தத் தேர்தலில் வலி.வடக்கில் 21 உறுப்பினர்களில் எமது கட்சி சார்ந்தோர். 15 பேர். நான் வலி.தெற்கையும் இங்கு குறிப்பிட்டாகவேண்டும். நான் கொஞ்சம் அக்கறை வைத்திருக்கும் சபை அதுவல்லவா. வலி.தெற்கில் 16 உறுப்பினர்களில் அதிகூடிய விருப்பு வாக்கு பெற்ற பிரகாஷ் தலைமையில் 13 உறுப்பினர்கள். தீவும் யாழ்.மாநகரசபையும் தவிர்ந்த ஏனைய அனைத்து சபைகளிலும் நாங்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை. நினைத்த தீர்மானத்தை பெரும்பான்மையுடன் நிறைவேற்றினோம்.

இந்த பொற்காலத்தில் நாம் – வலி.வடக்கு மக்கள் பிரதிநிதிகள் – எமது முழு ஆளுகைப் பிரதேசத்தையும் ஆள முடியாமல் தவித்தோம். எமது மக்கள் பிறந்து, வாழ்ந்து தவண்டு, முத்தமிட்ட பிரதேசங்களான வசாவிளான், பலாலி, மயிலிட்டி ஆகியவற்றில் இராணுவத்தினர் குடும்பத்துடன் வாழ்ந்து, விளைநிலங்களில் பயிரிட்டு, மரக்கறிகளை மருதனார்மடம் சந்தைக்குக் கொண்டுவந்து சந்தைப்படுத்தி பணம் பெற்ற காலம். வடக்கில் இராணுவ ஆட்சி நடைபெற்ற காலம். எமது மக்கள் தமது மண்ணுக்கு மீண்டும்போகவேண்டும் என நாம் பிரதேச சபையில் தீர்மானம் கொண்டுவந்து பல போராட்டங்களை எமது தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் முன்னெடுத்தோம்.தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன், எமது தமிழரசுக் கட்சி கொடுக்கும் சிறு தொகைப் பணத்தை விட மேலதிகமாகத் தனது சொந்தப் பணத்தை செலவுசெய்து பருத்தித்துறையில் இருந்த மயிலிட்டி மக்களை பல வாகனங்கள் அனுப்பி, ஏற்றி, இறக்கி, அவர்களுக்கு சிற்றுண்டி வழங்கி போராட்டங்களை மேற்கொண்டார். அந்த நேரத்தில் இந்த பாதிரியார் எமது பிரதேசத்தில் குழமங்கால் பங்குத் தந்தையாக இருந்தார் என்ற ஒரு ஞாபகம். ஆனால், அவர் இதை அறிந்திராமல் கர்த்தரின் சிந்தனையில் ஆழ்ந்திருந்திருக்கிறார் போலும்.

அந்த நேரத்தில் எமது போராட்டங்கள் குழமங்காலுக்கு அருகில் உள்ள தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலய முன்றிலில்தான் நடைபெறுகின்றமை வழமை. எங்கள் தவிசாளர் சுகிர்தன் தலைமை தாங்குவார். எங்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பங்கெடுப்பர். சிலநேரங்களில் கஜேந்திரகுமாரும் கஜேந்திரனும் பங்குபற்றியிருக்கின்றார்கள்.

இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால், குழமங்காலில் இருந்த பாதிரியாருக்கு போராட்டம் நடைபெற்றது தெரியாதமையே!, ஆனால் கொழும்பிலிருந்து இப்போதைய பிரதமரும் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, தற்போதைய அமைச்சர் மனோ கணேசன், கொழுமம்பு மாநகரசபை உறுப்பினர் பாஸ்கரா ஆகியோரே பங்குபற்றியி|ருக்கின்றார்கள். எனக்கு பாதிரியாருக்கு இவ்வளவு தேசிய உணர்வு இருக்கும் என்று அந்த நேரத்தில் தெரியாது. தெரிந்திருப்பின் குழமங்காலுக்குச் சென்று அவரையும் அழைத்திருப்பேன். இவை நடைபெற்றது 2012 ஆம் ஆண்டு. கிட்டத்தட்ட 3 போராட்டங்கள் 2012 இல் நடத்தியுள்ளோம்.

இராணுவப் புலனாய்வாளர்கள் கூட்டத்தில் எம்மைப் படமெடுப்பர். தொலைபேசி ஊடாக மிரட்டுவர். எமது ஆர்ப்பாட்டம் என்று பத்திரிகைகளில் செய்தி வந்ததும் நாம் ஆர்ப்பாட்டத்துக்குச் செல்லமுன்னரே கலகம் அடக்கும் பொலீஸார் குவிக்கப்பட்டுவிடுவர். பொலீஸ் மறியல்களை உடைத்துக்கொண்டு எமது பிரதேசங்களுக்கு நாம் வலுவந்தமாக அவர்களுடன் மல்லுக்கட்டிக்கொண்டு செல்ல முற்பட்டிருக்கின்றோம். ஒருநாள் மானிப்பாய் பிரதேசசபை தவிசாளர் ஜெபநேசன் வெளியே வர அவரைக்கூட புலனாய்வாளர்கள் தாக்கியிருக்கின்றார்கள். நாம் அனைவரும் செய்தியறிந்து அவர்களைத் தாக்க ஓடிவர அவர்கள் ஓடித்தப்பியுள்ளார்கள். இது எங்கள் பாதிரியாருக்குத் தெரியாதுபோல. அவர் சிந்தனை அந்தநேரத்தில் வெளிப்யுலகில் அல்ல போல….

2013 ஆம் ஆண்டு மாகாணசபை வந்துவிட்டது. மாவிட்டபுரத்தில் எமது சபையால் ஒழுங்குபடுத்தப்பட்டு போராட்டம். அந்தப் போராட்டத்திற்கும் நாம் மக்களை வலிந்து அழைத்துவந்து நடத்தினோம். இந்தப் போராட்டத்தில் பங்குபற்றிவிட்டு சென்ற மக்கள்மீது அரச அடிவருடிக் குழு ஒன்று தாக்குதல் மேற்கொண்டது. அதை தனிப்பத்தியில் வரைகின்றேன்.இந்த விடயங்களை மக்களுக்கு ஞாபகப்படுத்த – மக்களுக்கு தெளிவுபடுத்த – எமது பேச்சாளர் சுமந்திரனுக்கும் எனக்கும் சந்தர்ப்பம் வழங்கியமைக்காக பாதிரியாருக்கு என் சிரம்தாழ்ந்த நன்றிகளையும் தெரிவிக்கின்றேன்.

மீள்குடியேற்ற போராட்டத்தில்
கலந்த மக்கள் மீது தாக்குதல்!

பாதிரியார் மிக இலகுவாக வெறும் சொற்களால் கூறிவிட்டார் ”மக்கள் போராட்டத்தால்தான் நிலங்கள் விடுவிக்கப்பட்டன” என்று. மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்ளப் பயந்த காலம் அது. நாம் வாகன ஒழுங்கு செய்து எமது வாகனங்களில் சென்று அவர்களை அழைத்துவந்தோம். அச்சுவேலி தெல்லிப்பழை வீதி பூட்டப்படட்டிருந்த காலம் அது. மயிலிட்டி, பலாலி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பல குடும்பங்கள் பருத்தித்துறை கடற்கரையை அண்டி வாழ்ந்திருந்தனர். ஏனைய குடும்பங்கள் மல்லாகம் கோணப்புலம் முகாம், மல்லாகம் நீதிவான் முகாம், சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாம் ஆகியவற்றில் சொந்த நிலங்கள் இருந்தும் அகதிவாழ்வு வாழ்ந்திருந்தனர். இந்தமக்களைத் திரட்டியே நாம் போராட்டங்களை மேற்கொண்டோம்.

அன்றைய ”கூட்டத்தில் பாதிரியாரின் வினாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மிகத் தெளிவாக விளக்கம் கொடுத்திருந்தார். அதில் அவர் –

‘2003 ஆம் ஆண்டு மிகப்பெரிய அளவிலே வலி.வடக்கு பிரதேசம் உயர் பாதுகாப்பு வலயம் என்று அடைக்கப்பட்டிருந்தபோது வலி.வடக்கு நில விடுவிப்பு தொடர்பாக வழக்குத் தாக்கல் செய்யவேண்டும் என்று காலமாகியுள்ள வி.எஸ்.கணேசலிங்கம் சட்டத்தரணியும் நானும் மூத்த சட்டத்தரணி சதீஸ்தரனும் மாவை சேனாதிராசாவையும் சந்தித்து 100 போரின் பெயரிலே வழக்குத் தாக்கல் செய்வோம் 100 பேர் தயாராக இருக்கின்றார்கள் என்று வந்து பார்த்தால் மாவை சேனாதிராசாவைத் தவிர இரண்டே இரண்டுபேர்தான் முன்வந்தார்கள். இவர்களை வைத்து 2003 ஆம் ஆண்டு 646, 647, 648 ஆகிய இலக்கங்களில் மூன்று வழக்கு தாக்கல் செய்தோம். வழக்குத் தாக்கல் செய்த உடனேயே அவர்கள் அந்த எல்லையைக் கொஞ்சம் அகற்றிவிட்டார்கள். ஒருவருடைய காணி விடுவிக்கப்பட்டுவிட்டது. அவரது வழக்கு தள்ளுபடியானது. ஒருசில மாதங்களிலே மற்றவர் மரணித்துவிட்டார். அவருடைய வழக்கும் தள்ளப்பட்டுவிட்டது. 2004 ஆம் ஆண்டு ஒரேயொரு வழக்குதான் எஞ்சியிருந்தது.

”மாவை சேனாதிராசாவின் பெயரில் உள்ள வழக்கு மட்டும்தான் மிஞ்சியது. மாவை சேனாதிராசாவின் பெயரில் நிலங்கள் விடுவிக்கப்படவேண்டும் என்ற வழக்கு இன்றைக்கும் இருக்கின்றது. மாவை சேனாதிராசாவின் வீடு விடுவிக்கப்பட்டுவிட்டது.

”2012 ஆம் ஆண்டு நாங்கள் இந்த வழக்குத் தாக்கல் செய்வதில் ஒரு திருப்தி கண்டோம். மாவை சேனாதிராசாவின் காணி விடுவிக்கப்பட்டாலும் பிரதிநிதித்துவ வழக்காக இதனைக் கொண்டுசெல்லலாம் என்ற தீர்பு கிடைத்ததால் அவருடைய வழக்கு இன்றைக்கும் அவருடைய பெயரிலேயே இருக்கின்றது. 2007 ஆம் ஆண்டு இந்த நிலங்கள் விடுவிக்கப்படவேண்டும் என்று இடைக்காலத் தீர்ப்பைப் பெற்றோம். அந்த உத்தரவின் பிரகாரம் அப்போது மேல்நீதிமன்ற நீதிபதியாக இருந்த விக்னராஜாவின் தலைமையிலே ஒரு குழு நியமிக்கப்பட்டு பகுதி பகுதியாக விடுவிப்பு ஆரம்பமானது.

”அப்பொழுதுதான் நிலங்கள் விடுவிப்பு ஆரம்பமானது. அது இன்னமும் நடந்துகொண்டிருக்கின்றது.இப்பொழுது துரிதமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.” – என்று தெரிவித்தார்.

இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்து, சட்டரீதியாக நகர்வுகளை சுமந்திரன் முன்னெடுத்தாலும், நாம் மக்கள் போராட்டம் ஊடாக ஓர் எழுச்சியை தென்னிலங்கைத் தரப்புக்கும் சர்வதேசத்துக்கும் காட்டவேண்டும் என்பதாலேயே மக்கள் போராட்டங்களை நடத்தினோம். .இராணுவ அச்சுறுத்தல், புலனாய்வு அச்சுறுத்தல், பொலீஸ் அச்சுறுத்தல். எல்லாவற்றையும் மீறி எமது தமிழ் அரச ஒட்டுக்குழுவான ஆயுதக் குழுவின் அச்சுறுத்தலும்கூட. அத்தனையையும் தகர்த்தோம்.

பருத்தித்துறையில் இருந்து மக்களை அழைத்துவர புத்தூர் வந்து நிலாவரை, புன்னாலைக்கட்டுவன், சுன்னாகம் ஊடாகத்தான் தெல்லிப்பழை வரவேண்டும். நாம் போராட்டம் நடத்துகின்றோம் என்றால் வீதிகள் வெறிச்சோடிக்காணப்படும்.. இராணுவம், அரச ஒட்டுக்குழுக்களின் கெடுபிடிகள் நடக்கும் என்று அரச உத்தியோகத்தர்கள் கடமைக்குச் செல்பவர்களைத் தவிர ஏனையோர் வெளியில் செல்லப் பயப்படுவர். மயான அமைதியாக தெருக்கள் காணப்பட்டன.

இவ்வாறு 2013 ஆம் ஆண்டு நாம் மாவிட்டபுரத்தில் நடத்திய போராட்டத்துக்கு மக்களை வாகனங்களில் அழைத்துவந்து போராட்டத்தில் கலந்துகொள்ளச் செய்துவிட்டு மீண்டும் அனுப்பிவைத்தோம். அந்தப் போராட்ட நேரம் மாகாணசபை உருவாக்கப்பட்டுவிட்டது என்பதால் எங்கள் வடக்கு முதல்வர் விக்கி ஐயா, மக்கள் போராட்டத்தில் ஓர் அரச தலைவர் வந்து அவர்களின் குறைகளைக் கேட்டுவிட்டுச் செல்கின்றமைபோன்று மதியம் 12 மணியளவில் தனது பாதுகாவலர்களுடன் தன் மக்களைச் சந்திக் வந்தார். அவர்களின் ஒரு 15 நிமிடம் அரசியலுக்காக அவர்களுடன் குந்தி இருந்துவிட்டு, ஊடகவியலாளர்களுக்கு பேட்டியளித்துவிட்டுச் சென்றுவிட்டார். ஆனால், வலி.வடக்கின் மைந்தனும் மீள்குடியேற்றம் தொடர்பாக முதலாவது வழக்குத் தாக்கல் செய்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா போராட்டம் முடியும்வரை உணவின்றி காலை முதல் மாலை வரை தன் மக்களுடன் கூடவேயிருந்தார்.

போராட்டம் முடிந்துவிட்டது. பருத்தித்துறையிலிருந்து போராட்டத்தில் கலந்துகொண்ட எமது பிரதேச மக்களை பருத்தித்துறைக்கு அனுப்பிவைத்தோம். இடையில் – நிலாவரைக்கு அண்மையாக – ஆணிகளை x வடிவில் வைத்து வெல்டிங் செய்து பல ஆணிகளை மக்களது வாகனம் வருகின்ற நேரத்தில் வீதியில் வீசி, வாகனத்தை காற்றுப்போகவைத்துவிட்டு, பெரிய கல்லால் கண்ணாடிமீது வீசி கண்ணாடியை உடைத்துவிட்டு, மோட்டார் சைக்கிள்களில் வந்து சொப்பீன் பைகளில் நிரப்பப்பட்ட கழிவு ஒயில்களை மக்கள்மீது விசிறிவிட்டுச் சென்றது இந்த அரச ஒட்|டுக்குழு.

மக்கள் எமக்குத் தொலைபேசியில் அறிவித்தார்கள். நானும் சுன்னாகம் தவிசாளர் தி.பிரகாஸூம், எமது உறுப்பினர் மதியழகராசாவும் சுன்னாகம் தவிசாளரின் வாகனத்திலும், எமது தவிசாளர் சுகிர்தனின் வாகனத்தில் அவருடன் எமது உறுப்பினர் க.மயூரதனும் சென்றுகொண்டிருக்கும்போது மக்கள் மீதான தாக்குதல் அறிவிப்பு வந்தமையால் நாம் உடனடியாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசாவுக்கு அறிவித்துவிட்டு, அங்கு சென்றோம். நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சி.சிறீதரன் ஆகியோரும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்கள்.

ஒட்டுக்குழுவின் தாக்குதலுக்குள்ளாகிக் கண்ணீர் மல்க நிலாவரைக்கு அருகில் தவித்திருந்த மக்களுக்குச் சென்று ஆறுதல் பேசினோம். வாகனத்தின் சேதத்துக்குரிய பொறுப்பைத் தான் ஏற்பதாக எமது வலி.வடக்கு தவிசாளர் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்;.பின்னர் மக்களைத் தேற்றி, அவர்கள் வாகனத்துக்குப் பின்னாலும் முன்னாலும் எமது வாகனங்ளைச் செலுத்தி பாதுகாப்பாக அவர்கள் தங்கிவாழும் இடங்களுக்குக் கொண்டுசென்று விட்டோம்.

இவை எவையும் பாதிரியார் அறிந்திருக்கவில்லைப் போலும். ஆனால் அவர் தற்போது தன்மூலமாக மக்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கின்றார். அதற்கு நன்றிகள்.

Share the Post

You May Also Like