கூட்டமைப்பு என்ன செய்தது???

சுப்பிரமணியம் பிரபா


இன்று நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான கதையொன்றும் வந்தது. அவர் வசிக்கும் தொகுதியில் அவரின் வட்டாரத்தில் முந்தைய முறை த.தே.கூட்டமைப்பை சேர்ந்த வேட்பாளரே வெற்றி பெற்று தவிசாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தார் ஆனால் கடந்த ஆண்டு (2018) இல் நடைபெற்ற தேர்தலில் கூட்டமைப்பின் வேட்பாளர் தோல்வியடைந்து “தூயகரம் தூய நகரம்” என்ற கோசத்தோடு வந்த கட்சியை சேர்ந்த வேட்பாளர் வெற்றி பெற்றிருந்தார்.


அது எப்படி கூட்டமைப்பு வேட்பாளர் தோற்றுப்போனார் என்ற கேள்விக்கு நண்பர் சொன்ன பதில் கூட்டமைப்பு “எதுவும் செய்யவில்லையாம்” அதுதான் தோற்றுவிட்டதென்றார். அத்தோடு கூட்டமைப்பு எதுவும் செய்யவில்லையென்பதற்கு ஒரு உதாரணத்தை அவர் சுட்டிக்காட்டினார். அதாவது அவருக்கு தெரிந்த இளைஞன் ஒருவன் அவரை நாடி வந்திருகிறான் நீங்கள் கூட்டமைப்புக்கு ஓட்டுப்போடு ஓட்டுப்போடு என்கிறீர்கள் கூட்டமைப்பு இதுவரை எங்களுக்கு என்ன செய்திருக்கிறதென்று ஓட்டுப்போடச்சொல்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்,

அதற்கு இவர் தம்பி இன்று இருக்கும் இந்த அமைதியான சூழல், அச்சமின்றிய வாழ்க்கை அவசியமான அபிவிருத்திகள் இதெல்லாம் கூட்டமைப்பு செய்தது தானே? கடந்த காலத்தில் இருந்த ஆட்சி உனக்கும் தெரியும் தானே எத்தனை கெடுபிடிகள் எத்தனை அடக்குமுறைகள் அவையெல்லாம் இன்று இல்லையென்றால் அதற்கு காரணம் கூட்டமைப்பு கொண்டுவந்த ஆட்சிமாற்றம் தானே இதை செய்தது கூட்டமைப்பு தானே என்றிருக்கிறார்…

ஆனால் அந்த இளைஞனோ பழையபடி முதலில் இருந்து அதை விடுங்கோ கூட்டமைப்பு எங்களுக்கு என்ன செய்தது என்று ஓட்டுப்போடச்சொல்றிங்க என்று ஆரம்பித்திருக்கிறான். இவரும் பழையபடி முதலில் இருந்து ஆரம்பித்து முடிக்க அவனும் அதையெல்லாம் விடுங்கோ கூட்டமைப்பு என்ன செய்தது எங்களுக்கென்று தொடங்கி இருக்கிறான் இது என்ன கோதாரியடா என்று நினைத்த அவர் அவனையே திரும்ப கேட்டிருக்கிறார் சரி கூட்டமைப்பு என்ன செய்யவேணும் என்று நீ நினைத்தாய் அதை செய்யாததால் அக்கட்சிக்கு வாக்களிக்க மறுக்கிறாய் என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு அவன் இன்று எங்களுக்கு என்ன தேவை அதை கூட்டமைப்பு தந்ததா என்றிருக்கிறான் இன்று உனக்கு என்ன தேவை என்று இவர் திருப்பி கேட்டிருக்கிறார் அதற்கு பதிலாக அவன் போட்டிருந்த ரீ சேர்ட்டை உயர்த்தி இடுப்பை காட்டி இருக்கிறான் அங்கே இருந்தது என்ன தெரியுமா தூயகரங்களால் வழங்கப்பட்ட “கால் போத்தில் சாராயம்” 😊 அது மட்டுமல்ல தேர்தல் அன்று இளைஞர்களை அங்கிருக்கும் பிரபலமான ஹோட்டலுக்கு அழைத்துச்சென்று தேவையான அளவுக்கு தேவையானதை சாப்பிடுங்கள் என்றும் அந்த வட்டார தூயகரம் வேட்பாளர் கைகாட்டியிருக்கிறார்…

ஆக இப்படியாக தேவை அறிந்து வேலை செய்து தூய வெற்றியினை அவர் பெற்றிருக்கிறார். இதனை செய்ய தவறியதால் கூட்டமைப்பு அவ்வட்டாரத்தில் தோற்றிருக்கிறது.

இப்போதுதான் எனக்கும் ஒரு சந்தேகம் வந்தது சமீபகாலமாக கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் மக்களையும் புத்திஜீவிகளையும் உள்ளடக்கிய தொடர் சந்திப்புகளை மேற்கொண்டு சமகால அரசியல் தொடர்பான விளக்கங்களை அளித்து வருகின்றார் அவரிடம் திரும்ப திரும்ப சிலர் கேட்கும் கேள்வி “கூட்டமைப்பு இதுவரை என்ன செய்திருக்கிறது” என்பதாகும் அதற்கு பாராளுமன்ற உறுப்பினரும் காணி விடுவிப்பில் இதை செய்தது, அரசிய கைதிகள் விடயத்தில் இதை செய்தது, காணாமல் போனார் விடயத்தில் இதை செய்தது, அபிவிருத்தி விடயத்தில் இவற்றை செய்திருக்கிறது, ஐ.நா விவகாரத்தில் இதை செய்திருக்கிறதென்று இதுவரை கூட்டமைப்பு செய்தவைகளின் நீண்ட பட்டியலை தொகுத்து வழங்கிக்கொண்டு வருகின்றார் ஆனால் கேள்வி கேட்பவர்கள் பழைய படி முதலில் இருந்து “கூட்டமைப்பு என்ன செய்தது” என்ற கேள்வியைத்தான் கேட்கின்றனர்.

என்னைப்பொருத்தவரை பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் இவ்வாறான கேள்விகளை கேட்போருக்கு பதில் சொல்வதன் முன் கேள்வி கேட்டவர்களை நோக்கி “கூட்டமைப்பு மக்களுக்கு செய்தது பற்றி கேட்கிறீர்களா அல்லது தனிப்பட்ட ரீதியாக உங்களுக்கு செய்தது என்ன” என்று கேட்கிறீர்களா என்ற கேள்வியை கேட்டு பதிலை பெற்றுவிட்டு விளக்கத்தை வழங்க வேண்டும் என நினைக்கிறேன் ஏனெனில் அந்த இளைஞன் தூக்கி காட்டியது போல் இவர்கள் இடுப்பை தூக்கி காட்டமுடியாதவர்களாய் இருக்கக்கூடும்…😊 அவர்கள் இடுப்புகளுக்குள்ளும் ஏனைய கட்சிகள் செய்தவைகளின் பட்டியல்கள் இருக்க கூடும் அதை ஒப்பிட்டு கூட்டமைப்பு தமக்கு ஒன்றும் செய்யவில்லையென்ற கேள்வியை மீண்டும் மீண்டும் எழுப்பக்கூடும்…

Share the Post

You May Also Like