பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்படவேண்டும்: யோகேஸ்வரன்!

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று பிரதேசத்தில் பதிவுசெய்யப்பட்ட 33 இளைஞர் கழகங்களுக்கு கையளிக்கும் நிகழ்வு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் போர்வையில் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் என்ற புதிய சட்டத்தை கொண்டுவருவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்கிறது.

தற்போதைய சூழ்நிலையில் பொலிஸார் சட்டத்திற்கு முரணாக பல செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். இந்நிலையில் புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி பொலிஸார் அப்பாவிகளைக்கூட கைதுசெய்து சித்திரவதைக்குட்படுத்துவதைத் தடுக்க முடியாது.

எனவே, இந்தச் சட்டத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரும்போது நாங்கள் எதிர்க்க உள்ளோம். இச்சட்டத்தின் விளைவுகள் குறித்து சட்ட வல்லுனர்கள் தற்போது மக்களுக்கு தெளிவுபடுத்திவருகின்றனர்.

எனவே பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாகக் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை திருத்தமின்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு போதும் இடமளிக்கமாட்டாது” என சீனித்தம்பி யோகேஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share the Post

You May Also Like