தமிழரசின் வாலிபர் முன்னணி மாநாட்டில் இரு ஜனாதிபதி சட்டத்தரணிகள் சிறப்புரை!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி மாநாட்டில் சிறப்புரைகளைக் கட்சியின் உறுப்பினர்களான இரு ஜனாதிபதி சட்டத்தரணிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையைச் சேர்ந்த ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவும் ஆற்ற உள்ளனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி மாநாடு முன்னணியின் தலைவர் க.பிருந்தாவன் தலைமையில் 16 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் சட்டநாதர் வீதி, நல்லூரில் அமைந்துள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் காலை 9 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.

காலை 9 மணிக்கு யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா சதுக்கத்தில் அமைந்துள்ள – தமிழரசின் தந்தை மூதறிஞர் தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் சிலைக்கு கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மலர்மாலை மற்றும் மலரஞ்சலி செலுத்துவார்கள்.

9.15 மணிக்கு மாநாடு நடைபெறும் இடத்தில் கட்சிக்கொடி ஏற்றும் நிகழ்வுடன் அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகும். அகவணக்கம், மங்கள விளக்கேற்றல், தமிழ்த்தாய் வாழ்த்து, வரவேற்புரை என்பவற்றைத் தொடர்ந்து வாழ்த்துரையை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரும் சட்டத்தரணியுமான கி.துரைராஜசிங்கம் வழங்குவார்.

தலைமையுரையைத் தொடர்ந்து, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஒவ்வொரு தொகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதித் தலைவர்களின் உரைகள் இடம்பெற உள்ளன.

பிரதான உரையை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் வாலிப முன்னணியின் முன்னாள் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசா வழங்குவார்.

இந்த நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்கள், பிரதேச சபையின் உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், வடக்கு மாகாண அவைத் தலைவர், கட்சித் தொண்டர்கள் எனப் பலர் கலந்துகொள்வர்.

Share the Post

You May Also Like