குறுகிய அரசியலுக்காக ஒட்டுக்குழுவுடன் சேர்ந்த கஜேந்திரகுமார் அணி!

கிளிநொச்சியில் நேற்றைய தினம் நடைபெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டறிவதற்கான நீதி கோரிய போராட்டம் யார் குழப்ப முற்பட்டார்கள்? அவர்களின் நோக்கம் என்ன? குழப்ப முற்பட்டவர்கள் அப்பழியை யார் மீது போட முற்பட்டார்கள்?

கடந்த யுத்த காலத்தில் இராணுவத்தினராலும் அவர்களோடு சேர்ந்தியங்கிய இராணுவ ஒட்டுக்குழுக்களாலும் பலர் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். தமிழர்களைக் வகைதொகையின்றிக் கொத்துக்கொத்தாகக் கொன்றொழித்த முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதிக் காலத்தில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்ற மக்களில் பலர், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சரணடைந்த போராளிகள், இராணுவம் விசாரணை எனக்கூறிய வேளையில் உறவினர்களால் இராணுவத்திடம் விசாரணைக்காகவென தமது கையால் ஒப்படைத்தவர்கள் மற்றும் ஓமந்தை இராணுவப் பரிசோதனை முகாம், வவுனியா செட்டிகுளம் முள்வேலி முகாம்கள் என்பவற்றில் வைத்து இராணுவத்தோடு சேர்ந்தியங்கிய இராணுவத் துணைப்படைகளாகச் செயற்பட்ட ஒட்டுக்குழுக்களால் காட்டிக்கொடுக்கப்பட்டு இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்டவர்கள் எனப் பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள்.

தமிழர் தாயகத்தில் தமிழர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு அடிமைகளாக நடத்தப்பட்டு அப்பாவித் தமிழ் மக்கள் மீது சிறீலங்காப் பேரினவாதிகள் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டு சொல்ல முடியாத கொடுமைகளைப் புரிந்து வந்ததார்கள். இதனைத் தங்கிக்கொள்ள முடியாத தமிழ் மக்கள் தமது தாயகப் பகுதிகளில் தாமும் நிம்மதியாக வாழ்வதற்கான கோரிக்கைகளை முன்வைத்து அகிம்சை வழியில் போராடி வந்தார்கள். தமிழ் மக்களது உயிர் வாழ்வதற்கான அகிம்சை வழிப் போராட்டமும் சிறீலங்காப் பேரினவாதிகளால் ஆயுத வழியில் வன்முறையைப் பிரயோகித்து அடக்கி ஒடுக்கப்பட்டது. தொடர்ந்தும் தமிழ் மக்களது உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் சித்திரவதைப்பட்டுக் கொல்லப்பட்டுக்கொண்டுள்ளமையைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தமிழர்கள் தம்மைத் தாமே பாதுகாத்துக்கொள்வதற்காக ஆயுதங்களைக் கையிலெடுத்து தம்மை அழிக்க வந்தவர்களுக்கு எதிராக ஆயுத் வழிப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்கள்.
அக்காலத்தில் தமிழர்களது உரிமைகளை வலியுறுத்தி தமிழர் தரப்பிலிருந்து பல ஆயுத இயக்கங்கள் தோற்றம் பெற்றாலும் தமிழ் மக்களது உரிமைகளுக்காகக் கொண்ட கொள்கை மாறாது இறுதியாக முள்ளிவாய்க்கால் மௌனிப்பு வரை தமிழ் மக்களது விடுதலைக்காகப் போராடிய ஒரேயொரு விடுதலை அமைப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பே காணப்படுகின்றது.

தமிழ் மக்களது விடுதலையை வலியுறுத்திப் போராடவெனக் கிழப்பிய பல இயக்கங்கள் சிறிது காலத்தில் தமது கொள்கையிலிருந்து விலகி தமிழ் மக்களுக்கு எதிராகவே செயற்படத் தொடங்கினார்கள். அவர்கள் சிறீலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கி தமது சுகபோகத்திற்காக மக்களைக் காட்டிக்கொடுத்தார்கள். இந்திய இராணுவம் அமைதிப்படை என்னும் போர்வையில் இலங்கைக்கு வருகைதந்து தமிழர் தாயகத்திலுள்ள தமிழ் மக்களைக் கொடுமைப்படுத்திய போது அதற்கெதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் போரிட்ட காலங்களில் தமிழ் மக்களது விடுதலைக்காகப் போராடவெனத் தோற்றம்பெற்ற பல இயக்கங்கள், இந்திய இராணுவத்துடன் இணைந்து அதன் துணை இராணுவக் குழுக்களாக மாறி தமிழ் மக்களைக் கடத்திச் சென்றும் பிடித்துச் சென்றும் சித்திரவதை செய்து வருத்தி வந்தார்கள். தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பினைச் சேர்ந்த போராளிகளையும் போராளிகளது உறவினர்களையும், முகமூடி அணிந்து தலையாட்டிக் காட்டிக்கொடுத்தார்கள்.

இந்திய இராணுவத்தினர் தாயகப் பகுதிகளை விட்டு இந்தியாவுக்குத் திரும்பிச் சென்றபோது அவர்களுடன் இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற துணை இராணுவக் குழுக்களான ஒட்டுக்குழுக்கள் சிறிது காலம் இந்தியாவில் தங்கிவிட்டு இலங்கையில் சிறீலங்காப் படைகள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சிறீலங்கா அரசாங்கத்தினது துணையுடன் மீண்டும் இலங்கைக்கு வந்து சிறீலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கி துணை இராணுவ ஒட்டுக்குழுக்களாகச் செயற்பட்டு தமிழ் மக்களை வெள்ளை வான்களில் கடத்திச் சென்று தமது முகாம்களில் அடைத்து வைத்துச் சித்திரவதை செய்து வந்தார்கள்.

துணை இராணுவ ஒட்டுக்குழுக்களான இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்டு வந்த தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தைக் காட்டிக்கொடுத்து அழிக்க வேண்டும் என்பதில் முழுமூச்சாக நின்று செயற்பட்டு வந்ததுள்ளார்கள். மற்றும் தமிழ் மக்களைக் கடத்துதல், கொள்ளையடித்தல், கற்பழித்தல், வெள்ளைவான் கடத்தல், படுகொலை செய்தல் போன்ற பல கொடிய செயல்களிலும் ஈடுபட்டு வந்தார்கள். இப்படியான விரோதச் செயல்களில் ஈடுபட்டவர்களுள் மிகவும் கொடூரமானவர்களாக ஈ.பி.டி.பி என்னும் துணை இராணுவ ஒட்டுக்குழு காணப்படுகின்றது. இவர்கள் செய்த வன்கொடுமைகள் ஏராளம் ஏராளம்.

ஈ.பி.டி.பி யில் இருந்து பிரிந்ததாகக் கூறிக்கொண்டு கிளிநொச்சியில் சமத்துவ சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு என்னும் குழுவை வைத்து இயக்கும் அசோக் தோழர் என்றழைக்கப்படும் சந்திரகுமார், முள்ளிவாய்க்காலில் தமிழர்களை வகைதொகையின்றிக் கொத்துக்கொத்தாகக் கொன்றொழித்த இனவழிப்பாளி மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய சகா. இவர் 2009 ஆம் ஆண்டிற்குப் பின்னர், இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் கிளிநொச்சியில் காட்டாட்சி நடத்தி தனது குழுவினர் மூலம் மக்களை அச்சுறுத்தி அட்டகாசம் புரிந்துவந்தவர்.

கடந்த 2012 ஆம் ஆண்டு ஐ.நா. சபையில் இலங்கையில், நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட இருந்தபோது ஐ.நா சபைக்கு எதிராகவும் அதனை ஆதரித்த அமெரிக்காவுக்கு எதிராகவும், முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் மக்கள் எவரும் கொல்லப்படவுமில்லைக் காணாமல் ஆக்கப்படவுமில்லை அங்கு கொல்லப்பட்டவர்கள் அனைவரும் புலிப் பயங்கரவாதிகள் எனக் கூறி கிளிநொச்சி நகர் ஏ-9 வீதியில் மக்களை அச்சுறுத்தி ஏமாற்றிக் கூட்டிச் சென்று ஆர்ப்பாட்டம் நடத்திய ஈ.பி.டி.பி ஒட்டுக்குழுவைச் சேர்ந்த சந்திரகுமார் மகிந்தவின் அமைப்பாளர் கீதாஞ்சலியுடன் இணைந்து, இனப்படுகொலையாளியான தனது சகா மகிந்த ராஜபக்சவைக் காப்பாற்றுவதில் ஈடுபட்டிருந்தார்.

தமிழ் மக்களை ஏமாற்றி தாங்கள் செய்தவற்றை மறைப்பதற்காகவும் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களாகிய இவர்கள் தமிழ் மக்களைப் பயன்படுத்தி தங்களின் இலக்கினை அடைந்து விட இப்போது கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். அதன் ஒரு அங்கமாகத்தான் நேற்றைய தினம் 25.02.2019 ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைக் கண்டறிவதற்கான போராட்டத்தில் நடைபெற்றுள்ளது.

கிளிநொச்சியில் ஈ.பி.டி.பி ஒட்டுக்குழுவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான மு.சந்திரகுமார் மக்களை ஏமாற்றித் தலையெடுப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தடையாகவுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மீது அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி மக்களை ஏமாற்றி தான் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக வந்துவிட வேண்டும் எனபதில் ஈ.பி.டி.பி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தமது ஒட்டுக்குழுப் பாணியில் கடுமையாகச் செயற்பட்டு வருகின்றார்.

அவ்வகையில் கிளிநொச்சியில் அமைதியாக வாழும் மக்களைக் குழப்பி சமூக ரீதியாக, சாதி, சமய ரீதியக சிதறடிப்பதற்குப் பல தடவைகள் முயற்சித்துத் தோற்றுப் போயுள்ளார். இந்நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் சிலரை நாடி அவர்களுக்கு சகல ஒத்துழைப்பையும் செய்வதாகக் கூறி, உணர்வு ரீதியான போராட்டத்தை திசை திருப்பி தனது குறுகிய நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள முயற்சித்துள்ளார்.

கிளிநொச்சியில் நடைபெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறிய ஒட்டுக்குழுவைச் சேர்ந்த சந்திரகுமார் அணியினர், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் ஒருசிலரை நாடி அவர்களைச் சந்தித்து அப்போராட்டத்தை எப்படி நடாத்துவது யாருக்கு எதிராக அப்போராட்டத்தில் குற்றம் சுமத்தி குழப்பத்தை ஏற்படுத்துவது என்பன ஏற்கனவே திரைமறைவில் திட்டமிடப்பட்டிருந்தன.
ஈ.பி.டி.பி ஒட்டுக்குழுவைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சந்திரகுமாரின் அரசியல் கட்சியைச் சேர்ந்த கரைச்சிப் பிரதேசசபை உறுப்பினரான காந்தன் மூலமாக காணாமல் போனவவர்களது உறவினர்களுக்கான மதிய உணவை உதயநகர் மீனாட்சி அம்மன் கோயிலில் வைத்து அன்னதானமாக வழங்குவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது.

போராட்டத்தில் கலந்துகொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களை வெளியிடங்களிலிருந்து வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள், ஏனையோர் மூலமாகச் சீண்டி அவர்களைக் குழப்பம் விளைவித்த குழப்பவாதிகளாகக் காட்டுதல், அதனைப் பரப்புதல், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக எழுதப்பட்ட கோசங்களடங்கிய வாசகங்களை வழங்கி அவர்கள் மூலமாக அதனைக் கூறவைத்தல், பேரணியில் கலந்துகொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களை ஈ.பி.டி.பி ஒட்டுக்குழுச் சந்திரகுமாரால் ஒழுங்கு செய்யப்பட்ட அவர்களது ஆட்டோவில் ஏற்றி அதில் கட்டப்பட்ட ஒலிபெருக்கி மூலம் சந்திரகுமார் ஆதரவாளர்களால் எழுதிக் கொடுக்கப்பட்ட கோசங்களை ஒலிக்கச் செய்தல் போன்ற பாரிய திட்டமிடல்கள் மூலம் களமிறங்கியிருந்தார்கள்.

வலிந்து காhணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டறிவதற்கான போராட்டம் ஆரம்பித்த போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒழிக, கூட்டமைப்பு கூத்தடிக்கிறது, கூத்தமைப்பு கூத்தாடிகள் போன்ற கோசங்களடங்கிய வாசகங்கள் எழுதப்பட்ட மட்டைகள் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களிடம் வழங்கப்பட்ட போது அதனை அவதானித்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் சிலர் இது எமது உறவுகளைக் கண்டறிவதற்கான போராட்டத்தைக் குழப்புவதற்காக எழுதப்பட்ட வாசகங்கள் எனக் கூறி அவற்றை வாங்கிச் சென்று அழித்தமையும் அதனால் ஆத்திரமடைந்த சந்திரகுமாரின் அடாவடிக்கும்பல் அடுத்த திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தொடங்கியிருந்ததாக போராட்ட களத்திலிருந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை அப்போது எமது உறவுகளைக் கடத்தியவர்கள் இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர், இராணுவ ஒட்டுக்குழுக்களே உங்களால் கடத்தப்பட்ட எங்கள் உறவுகள் எங்கே? போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட மட்டைகளைத் தாங்கியிருந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் சந்திரகுமார் ஒட்டுக்குழுவைச் சேர்ந்தவர்கள் அந்த மட்டைகளை இப்போராட்டத்தில் பிடிக்க வேண்டார் என்றும் அதனைப் பிடிப்பது தங்களைத் தாக்குவதாக அமைகின்றது எனவும் இப்போராட்டத்தில் நாம் திருந்தித்தானே இப்போது வந்து கலந்துகொண்டு உங்களுக்கு ஆதரவு தந்துள்ளோம். அந்தமட்டடைகளில் எழுதப்பட்ட வாசகங்களை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம் திரும்பவும் நாம் யாரென்று காட்ட வேண்டிவரும் எனக் கூறி முரண்பட்டுக்கொண்டனர்.

மற்றும் ஈ.பி.டி.பி ஒட்டுக்குழுவைச் சேர்ந்த சந்திரகுமாரால் ஏற்பாடு செய்யப்பட்ட முச்சக்கரவண்டியில் கட்டப்பட்ட ஒலிபெருக்கியில் சந்திரகுமார் ஒட்டுக்குழுவைச் சேர்ந் பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபை உறுப்பினருடன் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒருவரும் இணைந்து அரசியல் கோசங்களை எழுப்பி குழப்பத்தை ஏற்படுத்த முற்பட்டிருந்தார்கள். இதற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தை முன்நின்று நடாத்துவதாகக் கூறிக்கொண்டு சந்திரகுமாரின் அரசியலுக்காகச் செயற்படும் சிலரும் காரணமாய் இருந்துள்ளார்கள்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் போராட்டத்தைக் குழப்பி அதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மீது குற்றம் சுமத்தி அதனைப் பரப்புவதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணியினரும் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக ஈ.பி.டி.பி ஒட்டுக்குழுவைச் சேர்ந்த சந்திரகுமார் அணியினருடன் இணைந்து செயற்பட்டுள்ளனர்.

-இனியவன்-

Share the Post

You May Also Like