அரசியல் தீர்வு – அபிவிருத்தி இரண்டிலும் சமாந்தரமாகப் பயணிக்கும் கூட்டமைப்பு!


ஐக்கிய தேசிய முன்னணி அரசு வட – கிழக்கு பொருளாதார மேம்பாட்டுக்கு முன்னைய காலங்களைவிட அதிகளவு நிதியை ஒதுக்கியுள்ளது. கிராமவெழுச்சி என்ற திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நா.உறுப்பினருக்கும் 30 கோடி ரூபா ஒதுக்கியுள்ளது. இந்த நிதியிலிருந்து நா.உறுப்பினர்கள் அடையாளம் காட்டும் மேம்பாட்டுத் திட்டங்களுக்குச் செலவழிக்கப்படுகிறது. சாலை புதிதாக அமைத்தல்பழுதான சாலைகளை  சீரமைத்தல்பள்ளிக்கூட வகுப்பறைகள் கட்டுதல்விளையாட்டு உபகரணங்கள் வாங்குதல் போன்றவற்றுக்கு செலவழிக்கப்படுகிறது. இவற்றைவிட

(1) 45.27 மில்லியன் டொலரில் காங்கேசன்துறைமுகம் (இந்திய அரசின் உதவி) மீள் கட்டமைக்கப்பட்டு வருகிறது. மூன்று ஆண்டுகளுக்குள் திட்டம் பூர்த்தியடையும் என தலைமை அமைச்சர் ரணில் கூறியுள்ளார்.

(2) மேலும் 205 மில்லியன் ரூபா முதலீட்டில் ஆகஸ்ட் 22, 2018  ஆம் திகதி மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் அபிவிருத்தி நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தொடக்கி  வைக்கப்பட்டது. வேலைகள் துரித கதியில் நடைபெறுகிறது.

(3) பெப்ரவரி 15,2019 அன்று  புதிதாக மயிலிட்டிப்  பகுதியில் மீள்குடியேறிய 615 மக்களுக்கான வீட்டுத்திட்டத்தினை பிரதமருடன் சுமந்திரன் அடிக்கல் நாட்டி தொடக்கி வைதனர்.

(4) 450 கோடி ரூபாயில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு புதிய கட்டிடத்தொகுதி கட்டப்பட இருக்கிறது.

ஆனால் விக்னேஸ்வரன் போன்றவர்கள் முதலில் இனச் சிக்கலுக்கு அரசியல் தீர்வு அப்புறம்தான் பொருளாதார மேம்பாடு என்று நெஞ்சில் கொஞ்சமும் ஈரமின்றி கொல்லிவருகிறார். இது மேட்டுக்குடிச் சிந்தனையாகும்.

இப்போது அவரை மிஞ்சும் வண்ணம் ரெலோ செயலாளர் நாயகம் ஸ்ரீகாந்தா  வட கிழக்கு மேம்பாட்டுக்கு  அரசு கொடுக்கும் நிதியை எள்ளி நகையாடுகிறார். அவர் எதுகை மோனை நடையில் என்ன சொல்கிறார்?

அபிவிருத்தி என்ற பெயரில் அங்கும் இங்குமாகப் போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு அள்ளித் தெளித்து அல்லது கிள்ளித் தெளித்து அடுத்த தேர்தலில் அவர்களுடைய வாக்குகளை மீண்டும் எங்களுக்கு உறுதிப்படுத்துவது தானா எங்களது நோக்கம் என்ற கேள்வியைக் கூட்டமைப்பிலுள்ள அரசியல் மனச்சாட்சி கொண்ட ஒவ்வொரு பிரமுகரும் கட்டாயம் எழுப்பி அதற்கு விடை காண வேண்டும்.. மேலும் வெறுமனே அரசு கொட்டிக் கொடுக்கின்ற முப்பது கோடி ரூபாக்களோடு எங்களை நாங்கள் மட்டுப்படுத்திக் கொள்வோமாக இருந்தால் அது தமிழ் மக்களுக்குச் செய்யும் துரோகமாக இருக்கும். அது மாத்திரமல்லாமல் கூட்டமைப்பின் அரசியல் தற்கொலையாகவும் இருக்கும். அந்த நிலைமைக்குள்ளே நாங்கள் ஒரு போதும் எங்களுடைய கட்சியை அனுமதிக்க மாட்டோம். ஸ்ரீ காந்தாவுக்கு 30 கோடி சின்னக்காசாக இருக்கலாம். அற்ப பணமாக இருக்கலாம். எமது மக்களுக்கு அப்படியில்லை. அவர்களது அன்றாட வாழ்க்கைச் சிக்கல்களை நீக்க வீடுகள்,மருத்துவமனைகள்பள்ளிக்கூடங்கள் கட்டிக் கொடுக்க வேண்டும்குடி தண்ணீர் வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். வேலைவாயப்புக்களை உருவாக்க வேண்டும்.

இதில் வேடிக்கை என்னவென்றால் ரெலோ கட்சியைச் சார்ந்த நா.உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கவீந்திரன் கோடீஸ்வரன் இருவரும் இந்த 30கோடியை இரண்டு கையாலும் வாங்கி மக்களது அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கிறார்கள்.

கோட்டையில் உள்ள இராசா நினைக்கிறாராம் குடிமக்களும் தன்னைப் போல சகல சுகபோகங்களோடும் வாழ்வதாக. ஸ்ரீகாந்தா தன்னை இந்தக் கோட்டை இராசா போல் நினைக்கிறார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமது மக்களது அரசியல் சிக்கல்பொருளாதார மேம்பாடு இரண்டும் ஒரே நேரத்தில்  சமாந்திரக் கோட்டில் பயணிக்க வேண்டும் என நினைக்கிறது. எமது மக்களுக்கு இரண்டும் தேவை!

நக்கீரன்

Share the Post

You May Also Like