இவர்களுக்குப் புத்தி பேதலித்துள்ளதா…?

”விநாசகாலே விபரீத புத்தி’‘ என்று வடமொழியில் ஒரு சுலோகம் உண்டு. அதாவது அறிவு மங்கியவனுக்கு புத்தி பேதலித்துவிடுமாம். அவ்வாறுதான், சங்கரி, விக்கி ஐயா, சுரேசருடன் சேர்த்து செல்வத்தையும் சித்தரையும் எண்ணத் தோன்றுகின்றது.

இலங்கைக்கு ஐ.நா. மீண்டும் கால அவகாசம் வழங்கக்கூடாது என்று இந்த புத்தி பேதலித்தவர்கள் கூட்டாக ஒப்பமிட்டிருக்கின்றார்கள். கூட்டமைப்பு கால நீடிப்பு வழங்கவேண்டும் என்று கூறுகின்றது என்று ஒப்பாரி வைக்கின்றார்கள். இங்கு கால நீடிப்பு என்பது – கூட்டமைப்புக் கோரும் கால நீடிப்பு என்பது – சர்வதேசத்தின் மேற்பார்வை நீடிப்பே. சர்வதேசத்தின் மேற்பார்வை நீடிப்பை வழங்கினால்தான் ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் பார்வை இலங்கை மீது இருக்கும். இவர்கள் சர்வதேச மேற்பார்வை வேண்டாம் என்றுதான் கூறவருகின்றார்கள்.

முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மக்களுக்கு என்ன எடுபடும் என்பதை மட்டும் பார்த்துக் கதைப்பவர் .சுயமாகச் சிந்தித்து அவர் கதைத்தார் என்றால் அது ஒருபோதும் இருக்காது. ஒன்றில் மற்றவர்களின் சொற் கேட்டுக் கதைப்பார். அல்லாவிடில் மக்கள் மத்தியில் எவ்வாறு பேசினால் தனக்குக் கூடுதலாக கைகொட்டுதல்கள் கிடைக்குமோ என்று சிந்தித்து பேசுவார். பின்னர் ஏதாவது சிக்கல் வந்தால் தான் இன்னமும் படிக்கவில்லை என்பார்.

அண்மையில் புதிய அரசமைப்பு தொடர்பான நிபுணர்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதுதொடர்பான தெளிவான விளக்கத்தைத் தமிழ் மக்களின் பேச்சாளர் சுமந்திரன் கருத்தாடற் களம் ஊடாக மக்களுக்குத் தெளிவுபடுத்தினார். அந்தநேரத்தில், சுமந்திரனால் அரசியலுக்குள் கொண்டுவரப்பட்டு, அரசியல்சுகபோகத்தை ருசித்து, அதிலிருந்து விடுபடமுடியாமல் உழறும் விக்கி ஐயா, ”புதிய அரசமைப்பால் தமிழ் மக்களுக்கு எந்தப் பயனும் கிடையாது அதில் ஒன்றும் இல்லை” என்றார். ஊடகவியலாளர் எதற்காக அவ்வாறு சொல்கின்றீர்கள் என்று கேட்டமைக்குத, ”தான் இன்னமும் அதைப் படித்துப் பார்க்கவில்லை. படித்துப் பார்த்துவிட்டுத்தான் கூறவேண்டும்” என்றார். அவர் படித்துப் பார்க்காவிட்டால் அது தமிழ் மக்களுக்குப் பயனற்றது. எவ்வளவு முட்டாள்தனமாக கருத்து இவருடையது.

தற்போது ஐ.நா.இலங்கைக்குக் கால அவகாசத்தை வழங்கக்கூடாது என்பதுதான் இவர்களின் – இந்த அடிமுட்டாள்களின் – நிலைப்பாடு. இதைத்தானே மஹிந்த ராஜபக்ஷவும் கோருகின்றார். புதிய அரசமைப்பு நகல் வந்தபோது மஹிந்த ராஜபக்ஷவும் அதைக் கடுமையாக எதிர்த்தார். இதே விக்னேஸ்வரன், சங்கரி, சுரேஸ் போன்றவர்களும் எதிர்த்தார்கள். வீட்டுக்குள்ளே இருக்கும் செல்வத்தாரும் சித்தரும் மதில்மேல்பூனையாக ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு கருத்தை வெளியிட்டார்கள்.

தமிழில், ”வெண்ணெய் திரண்டுவர தாழியை உடைத்த கதை’‘  என்று ஒரு முதுமொழியை அடிக்கடி பயன்படுத்துவார்கள். இந்த முட்டாள்களின் நிலையும் அப்படித்தான். தமிழ் மக்களின் பேச்சாளர் சுமந்திரன், மிகவும் நிதானத்துடன் – புத்திசாதுர்யத்துடன் – வேகம், விவேகத்துடன் – எமது மக்களின் தீர்வுதொடர்பிலும் இலங்கையை எவ்வாறு சர்வதேசத்தின் பொறியில் சிக்கவைப்பது என்பது தொடர்பிலும் தன் நகர்வுகளை மெல்ல நகர்த்தி வருகின்ற இந்த நேரத்தில், இந்த முட்டாள்கள் அனைத்தையும் குழப்புகின்றமை போல் செயற்படுகின்றமை வேதனையளிக்கின்றது. இவர்கள் தமிழ் மக்களுக்கு சாபக்கேடேயன்றி வேறில்லை.

இலங்கை தானும் சேர்ந்து ஐ.நா. அரங்கில் பொறுப்புக்கூறல், நிலைமாறுகால நீதி என பல்வேறு பொறிமுறைக்குள் இணங்கி, தானும் அனுசரணை வழங்கி தனக்கெதிரான தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது. இந்தத் தீர்மானம் ஐ.நா. சபையில் வருவதற்கு எவ்வளவு சிரமப்படவேண்டியிருந்தது. ஆனால், இலங்கை தான்வைத்த பொறிக்குள் தானே வந்து மாட்டிக்கொண்டது.இன்று மஹிந்த – மைத்திரி தரப்புகள் அதிலிருந்து விடுபட எத்தனிக்கின்றார்கள்.

இலங்கை அதிலிருந்து விடுபடவேண்டும் என்றால் அதற்குக் கால அவகாசம் மேலும் வழங்காமல் அப்படியே அனைத்தையும் முடிவுறுத்துவது. அதற்குத்தான் மைத்திரி – மஹிந்த தரப்புகள் துடிக்கின்றார்கள். இந்த முட்டாள்களும் அவர்கள் விரும்புகின்றமைபோல் தொடர்ந்தும் கால அவகாசம் வழங்கக்கூடாது என்று – அதாவது போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச பொறிமுறையில் இருந்து இலங்கையை விடுவிப்பதற்காக – செயற்படுகின்றார்கள்.

இவர்களின் இவ்வாறான செயற்பாடு, இவர்கள் உண்மையில் புத்தி பேதலித்தமையால் புரியாமல் செயற்படுகின்றார்களா? அல்லது மஹிந்த – மைத்திரி கூட்டிடம் பணத்தைக் பெற்றுவிட்டு இவ்வாறான ஒரு முடிவுக்கு வந்தார்களா என்று மக்களை சிந்திக்கத் தூண்டுகின்றது. சரி, கால நீடிப்பை வழங்காமல் விடுவம். அடுத்து என்ன செய்வது, யுத்தக் குற்றமிழைத்த படையினரை தப்பிக்கவிடுவதா? அல்லது வேறு என்ன பொறிமுறைகளை இவர்கள் கையாளச் சொல்கின்றார்கள்? இலங்கையில் ஆட்சியிலுள்ள அரசு சம்மதிக்காமல் நாங்கள் எந்த நகர்வையும் முன்னெடுத்தல் ஆகாது? முதலில் ஆட்சியிலுள்ள அரசு சம்மதிக்கவேண்டும்.

கடந்தமுறை அவகாசம் வழங்கப்பட்டபோது ஒரு நாடு குறிப்பிட்டது, தான் எதிர்த்து வாக்களிக்க இருந்ததாகவும், ஆனால், இலங்கை தானே பொறுப்புக்கூறல் செயற்பாட்டை மேற்கொள்கின்றேன் என்றும் அதற்கு சர்வதேச மேற்பார்வையுடன் கூடிய கால நீடிப்பு வேண்டும் என்றும் கேட்டு, அதற்கு இலங்கையே வாக்களித்ததால் தாமும் அதற்கு ஆதரவாக வாக்களித்தோம் என்றது.

ஆகவே, இலங்கை சர்வதேச மேற்பார்வையிலிருந்து விடுபடுவதற்கான ஒரு பிரேரணையைக் கொண்டுவந்தால் சில நேரங்களில் அது தனக்குச் சார்பாக சர்வதேசத்தை மாற்றி வாக்கெடுப்பில் வெற்றிபெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்குத்தான் எமது இந்த விக்கி, சங்கரி, சுரேஸ், சித்தர், செல்வம் போன்ற பஞ்சபாண்டவர்களும் துணைபோகின்றார்களா?

பாதுகாப்புச் சபைக்குக் கொண்டு போகலாம் என்பார்கள். அதிலும் பல சட்டச் சிக்கல்கள் உள்ளன. பாதுகாப்புச் சபைக்குக் கொண்டு செவ்வதானாலும் உலக நாடுகள் அதற்கு ஆதரவாக வாக்களிக்கவேண்டும். இலங்கைக்கு எதிரான தீர்மானம் வருகின்றபோதே 47 நாடுகளில் 24 நாடுகளின் வாக்குகளைத்தான் பெற்றோம். அதில் இலங்கையும் சேர்ந்தே அந்தப் பிரேரனைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தது. ஆனால், தற்போது இலங்கை அதிலிருந்து விடுபட எண்ணுகின்றது. அதற்கு நாம் துணைபோகலாமா?

.இன்றைக்கு ஒரு நாடு தவறாமல் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு உரிய தீர்வை வழங்கவேண்டும் என்று தெரிவித்திருக்கின்றன. எமக்கு ஆதரவாக உள்ளன. எமது தலைமைகள் இதய சுத்தியுடன் மத்தியில் குவிந்துள்ள அதிகாரங்கள் மாகாணங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டு, ஒரு மக்களாட்சி ஏற்படுத்தப்பட’வேண்டும் என்று தமது நகர்வுகளை மிகவும் நிதானத்துடன் நகர்த்துகின்றார்கள். சர்வதேசம் மிகவும் உன்னிப்பாக இலங்கையின் ‘போக்கை அவதானித்துக்கொண்டிருக்கின்றது.

இலங்கை அரசு சரியான முறையில் செயற்படத் தவறின், எமது உள்ளக சுயநிர்ணய உரிமைகள் மறுக்கப்படின் – மீண்டும் எமது இனம் நசுக்கப்படின் – நாம் சர்வதேசத்திடம் இனியும் ஒரு நாட்டுக்குள்ளே எம்மால் வாழமுடியாது. என்று தெரிவித்து சர்வதேச ஆதரவுடன் வெளியக சுயநிர்ணயம் – தனிநாடு கோருவதற்கான உருத்தை நாம் பெறுவோம். அது தமிழீழமாகவும் இருக்கலாம். இதுதான் யதார்த்தம்.இந்த புத்திபேதலித்தவர்கள் சகலவற்றையும் குழப்புமாற்போல் செயற்படுகின்றார்கள். இவர்களின் செயற்பாடு –

”நந்தவனத்திலோர் ஆண்டி – அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி – அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி”  என்ற   கடுவெளிச்சித்தரின் பாடல்தான் ஞாபகத்துக்கு வருகின்றது.

  • தெல்லியூர் சி.ஹரிகரன் –

.

Share the Post

You May Also Like