பிரித்தாளும் தந்திரத்திற்கு இடமளிக்கப்போவதில்லை: துரைராஜசிங்கம்!

பிரித்தாளும் தந்திரத்திற்கு  ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கே. துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

இளைஞர்களுக்கான தொழிற்பாதை வழிகாட்டல் தேசிய திட்டத்தின் முதலாவது நிகழ்வு ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “சிறுபான்மையினரான தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் பிளவுகள் ஏற்பட்டால் அதுதான் இந்த நாட்டில் பேரினவாதிகளின் வெற்றியாகக் கொண்டாடப்படும்.

பேரினவாத அரசியலாளர்களின் கையாளுகின்ற ஒரு தந்திரோபாயமாகவும் அதுதான் இருந்து வந்துள்ளது. இதனை ஒவ்வொருவரும் நின்று நிதானித்து உற்று நோக்க வேண்டும்.

முன்பு எங்களை ஆட்சி செய்த ‘பிரித்தானிய’ அரசாங்கம் எங்களைப் ‘பிரித்துத்தான்’ வைத்து ஆட்சி புரிந்தது. ‘பிரித்தானியர்கள் பிரித்தாளும்’ தந்திரத்தையே கையாண்டார்கள்.

அது மட்டுமல்ல அவர்கள் நாட்டை விட்டுச் செல்லும்பொழுது தாம் பிரித்தாண்ட பிரித்தாளும் தந்திரத்தையே பேரினவாதிகளிடம் வாரிசு உரிமையாகக் கையளித்து விட்டுச் சென்றார்கள்.

அதனாலேயே தற்போதுவரை பிரித்தாளும் தந்திரத்தால் சிறுபான்மையினாராகிய நாம் வதைபட்டுக் கொண்டிருக்கின்றோம்” என கே. துரைராஜசிங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share the Post

You May Also Like