இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டின் தூதுவருக்கும் – யாழ் மாநகர முதல்வருக்குமிடையில் விசேட கலந்துரையாடல்

இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டின் தூதுவர் எச்.ஈ. எரிக் லவற்றூஸ் (H.E. Eric LAVERTU’s) அவர்களுக்கும் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களுக்குமிடையில் விசேட சந்திப்பு ஒன்று நேற்று (2019.04.01) யாழ் மாநகர முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது. மேற்படி சந்திப்பில் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

முதலில் தூதுவர் அவர்கள் தன் பணிசார்ந்த அனுபவங்களை முதல்வருடன் பகிர்ந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து தற்பொழுது யாழ்ப்பாணத்திலுள்ள நிலமைகள் பற்றி முதல்வரிடம் வினவினார். இதற்கு பதிலளித்த முதல்வர் அவர்கள் சில முன்னேற்றகரமான நிலைப்பாடுகள் காணப்பட்டாலும் மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு பாரிய மாற்றங்கள் இடம்பெறவில்லை என்றும் மக்களிடம் இருக்கின்ற எதிர்பார்ப்பு திருப்தியளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

என்ன காரணத்தினால் மக்கள் அதிருப்தியைக் கொண்டிருக்கின்றனர் என தூதுவர் வினவினார். அதற்கு முதல்வர் ஆட்சிமாற்றம் நாட்டிலே ஏற்பட்டது. அந்த ஆட்சி மாற்றம் மக்கள் எதிர்பார்த்தது என்னவென்றால் முன்னர் இருந்த ஆட்சியை விட புதிய ஆட்சியிலே ஜனநாயக சூழல் உருவாகும், மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு ஒரு தீர்வொன்றை எட்ட முடியும் என்ற நம்பிக்கையோடு மக்கள் ஒரு ஆட்சிமாற்றத்தை மேற்கொண்டார்கள். எதிர்பார்த்தது போன்று ஜனநாயக வெளி உருவானது அதில் சந்தேகம் இல்லை. சில சில முன்னேற்றங்கள் மற்றும் காணி விடுவிப்பு போன்றவற்றில் முன்னேற்றம் காணப்பட்டாலும் மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு அந்த முன்னேற்றங்கள் இல்லாமை மக்களுக்கு வருத்தமளிக்கின்றது. அதிலும் குறிப்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட, காணாமல்போனவர்களின் உறவுகள் எண்ணூறுக்கும் மேற்பட்ட நாட்களை கடந்து தமது உறவுகளை தேடி போராடிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு இதுவரை எந்தவொரு விமோசனமும் கிடைக்காதது எங்களுடைய மக்கள் மத்தியிலே பெரும் அதிர்ச்சியையும் – ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது. அதற்குரிய பதிலை சம்மந்தப்பட்டதரப்பினர் உடனடியாக வழங்க வேண்டிய தருணம் தற்பொழுது ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் அரசியல் மாற்றத்தினால் பாராளுமன்றம் அரசியல் சபையாக மாற்றப்பட்டுள்ளது. அரசியல் சபையாக மாற்றப்பட்டதன் நோக்கம் நாட்டிற்குரிய புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கி எங்களுடைய நீண்டகால அபிலாசையை வென்றெடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு நாங்களும் தேசிய அரசாங்கத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பாக வழங்கக்கூடிய அத்தனை ஆதரவுகளையும் வழங்கியிருந்தோம். குறிப்பாக புதிய அரசியலமைப்பு மூன்றில் இரண்டு பொரும்பாண்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பாக தொடர்ந்தும் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவளித்திருந்தோம்.

ஆனால் கடந்த ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதி இடம்பெற்ற அரசியல் புரட்சியின் காரணமாக அரசாங்கத்தில் மாற்றங்கள் ஏற்பட்டது. குறித்த தருணத்தில் ஜனாதிபதியின் செயற்பாடு மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. இருப்பினும் இந்த நாட்டினுடைய ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக எமது பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் மற்றும் எமது சட்டத்தரணிகள் குழாமினர் பணியாற்றியமையையும் யாரும் மறந்துவிட முடியாது. அவ்வாறிருக்க மீண்டும் புதிய அரசியல் அமைப்பு பாராளுமன்றத்திற்கு வருகின்ற போது மூன்றில் இரண்டு பொரும்பாண்மையை இருக்குமா என்ற அச்சம் தோன்றுகின்றது. இரண்டு மூன்று நாட்களில் வரஇருக்கின்ற வரவு செலவுத் திட்டம் கூட மூன்றில் இரண்டு பொரும்பாண்மையுடன் அங்கீகரிக்கப்படுமா என்ற சந்தேகம் காணப்படுகின்றது. வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டாலும் புதிய அரசியல் அமைப்பு பாராளுமன்றத்திற்கு வருகின்ற போது மூன்றில் இரண்டு பொரும்பாண்மையுடன் நிறைவேற்றப்படுமா என்ற ஐயமும், ஏமாற்றமும் மக்கள் மத்தியில் இருக்கின்றது.

குறித்த சந்தர்ப்பத்தில் நாட்டில் நடந்த அசம்பாவிதங்களுக்கு தூதரகமாக தனது அதிருப்தியையும் தூதுவர் வெளியிட்டிருந்தார். அது குறித்தும் தனது கருத்துக்களையும் வழங்கியிருந்தார். தொடர்ந்து வடமாகாணசபையின் நோக்கம் நிறைவேறியுள்ளதா என்ற தனது வினாவினை தூதுவர் முதல்வரிடம் முன்வைத்தார். அதற்கு பதிலளித்த முதல்வர் வடமாகாணசபையில் தாம் தெரிவு செய்யப்பட்டிருந்த போது குறிப்பிட்ட பொறிமுறை சார் நோக்;கம் பூரணமாக நிறைவு செய்யப்படவில்லை என்றதுடன், இடம்பெற்ற தவறுகளையும், மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்களுக்கும் எல்லைகளுக்கும் அப்பால் சென்று செயற்பட்டதன் விளைவாக ஏற்பட்ட பிரச்சினைகளையும் சுட்டிக்காட்டினார். எதிர்காலத்தில் குறித்த நோக்கத்தை அடையும் பொருட்டு செயற்பட வேண்டிய பொறிமுறை குறித்தும் தூதுவருக்கு விளக்கினார்.
அடுத்து யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்ற முன்னேற்றங்கள் மற்றும் அபிவிருத்திகள் குறித்து வினவினார். ஆதற்கு பதிலளித்த முதல்வர் அவர்கள் பிரான்ஸ் அரசின் மூலமாக நடைமுறைப்படுத்தவிருக்கின்ற பாதாள சாக்கடைத்திட்டம் மிக விரைவாக செயற்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன். குறித்த திட்டத்திற்கான முன்னேற்பாடுகள் மற்றும் திட்டமிடல்கள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். அதற்கு தூதுவர் அதற்கான பூர்வாங்கப் பணிகளை ஆகஸ்ட் மாதளவில் ஆரம்பித்து கட்டுமானப்பணிகள் 2020 ஆம் ஆண்டு முற்பகுதியில் ஆரம்பிக்கப்படும் என்ற நம்பிக்கையை தூதுவர் தனது உரையில் வழங்கியிருக்கின்றார்.

மேலும் உலகவங்கியின் திட்டங்கள், பாரிய நகர அபிவிருத்தி அமைச்சின் திட்டங்கள், மாநகரத்தின் நிரந்தரக் கட்டடத்தின் கட்டுமானத்திற்கான திட்டங்கள், உள்ளிட்ட மாநகரின் புதிய திண்மக்கழிவகற்றல் பொறிமுறை உள்ளிட்ட யாழ்ப்பாணத்தின் போக்குவரத்திலுள்ள பிரச்சினைகள் குறித்து விளக்கினார். வேலைவாய்ப்பு இல்லாப் பிரச்சினை தொடர்பிலும் முதல்வர் குறிப்பிட்டிருந்தார். புதிய தொழில் முயற்சிகளை ஊக்கிவித்து தொழிற்சாலைகளை நிறுவ வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இவ்வாறாக சுமார் ஒரு மணிநேரம் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் தூதுவரின் தொழில் நுட்ப அதிகாரியும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share the Post

You May Also Like