கலாநிதி ஆறு.திருமுருகனால் நாய்களுக்கு சரணாலயம்!

கிளிநொச்சி பளை பிரதேச செயலக பிரிவில் இயக்கச்சி பகுதியில்  சிவபூமி  அமைப்பினரால்  நாய்கள் காப்பகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இன்று 12-04-2019 பிற்பகல்  நான்கு  மணியளவில்  சிவபூமி நாய்கள் சரணாலயம் வீடற்ற நாய்களின் காப்பகம்  திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அநாதரவாக தெருக்கள் மற்றும் ஏனைய இடங்களில் காணப்படுகின்ற நாய்கள் குறித்த காப்பகத்தில் பராமரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
 சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நல்லூர் ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ ஞானசம்பந்த சோமசுந்தர தேசிக பரமாசார்ய ஸ்வாமிகள், , அமெரிக்கா கவாய் அதீனம் தொண்டுநாத சுவாமிகள், பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், பளை பிரதேச செயலாளர் ஜெயராணி, பிரதேச சபை தவிசாளர் சுரேன், வடக்கு மாகாண ஆளுநரின் மக்கள் தொடர்பு அதிகாரி ஆகியோர் கலந்துகொண்டு திறந்து வைத்துள்ளனர்.
சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் புகழ்பூத்த அதிபராகவும் கல்லூரியை நன்நிலைக்கு இட்டுச் சென்றவருமான கலாநிதி ஆறு.திருமுருகன், தனது அரச பதவியில் ஓய்வுநிலையை அடையுமுன்னரே, ஆன்மீகப் பணியிலும் அறப்பணியிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தும் பொருட்டு, தனது 50 ஆவது அகவையில் அதிபர் பதவியைத் துறந்து, சமூகத்துக்காகத் தன்னை அர்ப்பணித்து, தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவராகவும் சிவபூமி அறக்கட்டளை நிலையத்தின் தலைவராகவும் இருந்து பல்வேறு அறப்பணிகளை ஆற்றிவருகின்றார். சிவபூமி அறக்கட்டளை முதியோர் இல்லம், மாற்றுத் திறனாளிகளுக்கான கல்விக் கூடம், யோகா பயிற்சி நிலையம் மற்றும் ஆதி சங்கராச்சாரியார் போன்று கலாநிதி ஆறு.திருமுருகனும் வடக்கே கீரிமவையிலும் கிழக்கில் மட்டக்களப்பு, திருகோணமலை ஆகியவற்றிலும் மடங்களை நிறுவி அதனூடாக சைவத்தையும் தமிழையும் வளர்த்து மாபெரும் அறப்பணிகளை ஆற்றி வருகின்றமை குறிப்பிடத் தக்கது.
Share the Post

You May Also Like