ஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை நோக்கி.

– வின் மகாலிங்கம் –
சரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம்.  சுயநல வல்லூறுகளை விரட்டியடிப்போம். ஈழத்தமிழர் என்றால் – சிந்தனையாளர், ஒற்றுமையானவர்கள், கட்டுப்பாடானவர்கள், கௌரவமானவர்கள் என்று உலகம் வியக்க வைப்போம். கௌரவமாய் உரிமைகளோடு, உயர்வாய், உலகுக்கு ஓர் உதாரண இனமாக வாழ்ந்து காட்டுவோம்.
எமக்குத் தேவையான பலம் எம்மிடம் உண்டா?. 
இப்பூமிப் பந்தில் பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழுகின்றன. ஆனால் மனித இனம்தான் ஏனைய அனைத்து உயிரினங்களையும் தமது தேவைக்காகக் கையாளுகின்றார்கள். பூமியில் பல நாடுகள், பல இனங்கள், பல சமூகங்கள் வாழுகின்றன. அதில் புத்திக்கூர்மையான சிந்தனையாளர் மேதாவிகள் அதிகம் உள்ள நாடுகள் இனங்கள் சமூகங்கள் தான் முன்னணியில் நின்று ஏனைய நாடுகளையும் இனங்களையும் சமூகங்களையும் கட்டுப்படுத்தி தமது நன்மைகளுக்காக ஏனையவர்களையும் பயன்படுத்து கின்றார்கள். இவற்றிலிருந்து நாம் எதனைக் கற்றுக்கொள்ளப் போகின்றோம்?.
உயிர்களுக்கு, மனிதர்களுக்கு இருக்கக்கூடிய உடற்பலமோ,ஆயுதபலமோ வேறு எந்தப் பலமோ அவற்றின் மூளை பலத்திற்கு இணையாக மாட்டாது. மூளைத் திறனால், மூளை பலத்தால் மற்றய அனைத்துப் பலங்களையும்   வெல்லலாம். இவ்வுலகில் அறிவிற் சிறந்த சிந்தனைத் திறன் மிக்க மேதாவிகளால் தான் ஏனைய உயிர்களை, சமூகங்களை, இனங்களை, நாடுகளை வெற்றிகொள்ள முடியும். தமக்குத் தேவையானபடி ஏனைய தரப்பாரைக் கையாள முடியும்.
அறிவுத்திறனால்  நாம் பலமானவர்களாக மாறலாம். தமிழ் மொழி பேசுபவர் மட்டும் தான் எமக்குப் பலமாக இருப்பார்கள் என்றில்லை.  நாட்டிலும் உலகிலும் உள்ள எத்தனையோ தரப்பினரை எமக்கு ஆதரவாகத் திருப்பி நாம் இவ்வுலகிலே பலமானவர்களாக மாறலாம். பலமுள்ள அமெரிக்காவில் எத்தனையோ மொழிகள் நிறங்கள் மதங்கள் உள்ளவர்கள் வாழ்கின்றார்கள். ஆயினும் அவர்கள் தத்தம் பிராந்திய, மொழி, இன, மத, பண்பாடுகளைப் பேணக்கூடிய அதே நேரம் அமெரிக்கர்கள் என்ற மிகப் பலம் பொருந்தியவர்களாக  உள்ளார்கள். கறுப்பினத்தைச் சேர்ந்த ஒபாமா  அமெரிக்க அதிபராக வரலாம். கனடாவில் அதையும்விட மிகக் கூடிய இனக்குழுமங்கள் வாழ்கிறார்கள். பல்கலாச்சாரம் கனடாவின்  பலவீனமாக அல்லாமல் அதுவே நாட்டின் பலமாக உள்ளது.  அங்கு வாழும் தமிழர் இலங்கையில் உள்ள தமிழரைவிட அரசியல் உரிமைகளும் தமது மொழி பண்பாடு கலாச்சாரத்தை வளர்க்க கூடிய நிலையிலும் பொருளாதாரத்தில் உயர்ந்தவர்களாகவும் வாழ்கிறார்கள். அவர்கள் கனடாவின் சனத்தொகையில் ஒரு வீதம் தான்.
எமது இன்றய தோல்வி நிலைக்கு காரணம் என்ன?. 
ஈழத் தமிழரின் தோல்விக்கு அவர்களின் கோணலான வெறும் உணர்ச்சிவசப்பட்ட   தன்பக்கம் மட்டும் சார்பான சிந்தனைகளே காரணம். சிங்களவர்களை குறிப்பாக சிங்கள அரசியல் தலைவர்களை தூக்கில் போடவேண்டும் அழிக்க வேண்டும் என்ற வெறும் துவேஷ அடிப்படையில் பழிவாங்கும் நோக்கில் சிந்திக்கிறோமே தவிர அதனால் எமக்கு என்ன நன்மை எமது மக்களுக்கான தேவைகள் அதனால் பூர்த்தியாகுமா?. என்று சிந்திப்பதில்லை. ஏன்?. சரியாகச் சொன்னால் எமக்கானதை எப்படிப் பெறலாம் என்பதையே சிந்திக்காமல் எமது ஆவேசத்தால் எதிரியை எப்படி பழிவாங்கலாம் அழிக்கலாம் என்று மட்டுமே சிந்திக்கின்றோம். அதற்கான உணர்ச்சிவசமான ஆவேசப் பேச்சுக்களால் உந்தப்பட்டு எம்மை நாமே அழித்துக் கொள்கின்றோம். அதுதான் ஈழத் தமிழரின் தோல்விக்கு காரணம். 
சிறுபான்மை என்பது பிரச்சனையல்ல. முறையான சிந்தனையாளர் ஆழமாக விசாலமாக கூர்மையாக சிந்திக்காமைதான் தோல்விக்குக் காரணம். ஈழத்  தமிழரின் எதிர்காலச் சிந்தனையாளர் (THINK TANK) என்று கூறும்போது அது பெரும்பாலும் ஈழத்தமிழரின் பல்கலைக் கழக மாணவர்கள் மத்தியில் தான் இருப்பார்கள். ஈழத் தமிழரின் தலைவிதியை எதிர்காலத்தை வெற்றியை மேம்பாட்டைத் தீர்மானிப்பவர்கள் அவர்கள்தான். ஈழத்தமிழினம் இன்று தோற்றுவிட்ட  இனமாக இருப்பதற்குக்  காரணம் இப்போது விளங்கி இருக்கும். தமது மூளைத் திறனைப் பயன்படுத்தாமல் வெறும் உணர்ச்சி வசப்பட்ட  செயற்பாடுகளில் ஈடுபடுவதுதான் காரணம். எண்ணுக்கணக்கில் சிறுபான்மையாக  இருப்பதுதான் தோல்விக்கு காரணம் அல்ல என்பதை நாம் உலகில் எத்தனையோ உதாரணங்களால் உறுதிப்படுத்தலாம்.
இலங்கையில் தமிழ் பேசுபவர்களாக இருந்தாலும் தம்மை மத அடிப்படையில் முஸ்லிம்களாக வேறுபடுத்திக்காட்டி வாழுகின்றவர்கள் ஏனைய தமிழ் பேசுகின்றவர்களை விட இன்று பலமானவர்களாக உள்ளார்கள் என்பது ஒரு கசப்பான உண்மை. அவர்கள் தமக்குள் எந்தக் கட்சியாக இருந்தாலும் மத்திய அரசில் அரசாங்கக் கட்சியாகவே இருக்கின்றார்கள். அவர்களைத் திட்டிப் பயனில்லை. அவர்களிடமிருந்தும் சிலவற்றை நாம் கற்கவேண்டி உள்ளது.
ஈழத்தமிழர்களே,பல்கலைக்கழக மாணவர்களே,எம்மினத்தின் எதிர்கால வாழ்வில் உங்கள் பொறுப்பை,கடமையை  உணருங்கள். சிந்தனையின் முதல் எதிரி அறிவுபூர்வமற்ற உணர்ச்சிகள்தான். எனவே முதலில் உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி உள்ளுணர்வாக விவேகமாக அமைதியாக பொறுமையாகச் சிந்தியுங்கள். உணர்ச்சி பூர்வமாகக் கத்திப் பேசுவதால் எந்தப் பயனும் இல்லை. உயர்ந்த நிலையிலுள்ள தலைவர்களை விமர்சித்தால்தான்  தம்மையும்   உயர்ந்தவர்களாகக் காட்டிக்கொள்ளலாம் என்பது விபரீதமான சிந்தனைதான்.
நாம் விடை காணவேண்டிய வினாக்கள். 
1. எமது தேவை அரசியல் உரிமையா, அபிவிருத்தியா, இரண்டுமா?.
2. எமது அரசியல் உரிமைகளை யாரிடமிருந்து பெறுவது?.
3. அதை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம்?.
4. இன்றய தமிழர் தலைமையின் அணுகுமுறை சரியானதா, தவறானதா?.
5. மாற்று வழிமுறைகள் சாத்தியமா?.
6. எமது உண்மையான எதிரிகள் யார்?. நண்பர்கள் யார்?. 
7. எமது போராட்டப் பாதை விவேகமான  ஜனநாயக வழிமுறைகளா,அல்லது வீராப்பான                       கோஷங்களும்    வெறும் உணர்ச்சிகளை மட்டும் தூண்டி விடும் அமைதியற்ற கொதிநிலை             வீதியோர ஆரவாரங்களா?.
8. ஐநா மனித உரிமைச் சபையை நாம் எப்படிப் பயன்படுத்தலாம். காலஅவகாசம்                                  தேவைதானா?.        வேறு    உலக அமைப்புகளை பயன்படுத்த வாய்ப்புகள் உண்டா?.
9. எமது அரசியற் தலைமை த.தே. கூட்டமைப்பா மாற்றுத் தலைமையா?.
10. அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும்?.
விபரங்கள் தெரிந்தால் விடை தானாகக் கிடைக்கும்.
இவ்வுலக இயக்கத்திற்கு அச்சாணியாக அடிப்படையாக உள்ள சில யதார்த்த பூர்வமான விடயங்களை, அடிப்படை உண்மைகளை நாம் விளங்கிக்கொண்டு அதன் அடிப்படையில் சிந்தித்து இவற்றுக்கு நாம் விடைகளைக் காண வேண்டும். இயற்கையாகவே எந்தவொரு உயிரும் ,மனிதனும் தன் சுய தேவைக்காகவே செயற்படுகின்றது,செயற்படுகின்றான். மற்றவர்களுக்கு தான் உதவினால்த்தான் மற்றவர்கள் தனக்கு உதவுவார்கள்  என்பதற்காகவே ஒருவர் மற்றவருக்கு உதவுகின்றார். கணவன் மனைவி என்றாலும் அதுதான் உண்மை. (அப்படியின்றி தன் சுயத்தைக் கடந்தநிலையில் ஒருவன் சிந்திப்பானாகில் அவன் மனித நிலையைக் கடந்த தெய்வ நிலைக்கு சென்று விட்டவனாவான். ஆனால் எம்முன்னுள்ள உலகம் அப்படியல்ல.  தாய் சேய் உறவு போன்ற சில இயற்கை கொடுத்த விதிவிலக்குகள் உண்டு) நாம் நீதி, நியாயம், தர்மம், சரியான வழி என்று சிலவற்றை வகுத்து அதை அனைவரும் சுயம் சாராமல் (சுயநலமின்றி) செயற்படுத்துவார்கள்,செயற்படுத்த வேண்டுமென்று நினைப்பதெல்லாம் வெறும் கற்பனைதான். தமிழரின் தேவைகள் கோரிக்கைகள் தர்மமானது, நீதியானது,சரியானது என்பதற்காக யாராவது அதை தருவார்கள் அல்லது பெற்றுத்தர முன்வருவார்கள் என்று எதிர்பார்ப்பது எம்மை நாமே ஏமாற்றுவதாகும். குறித்த செயற்பாட்டால் தமக்கு எந்தவிதத்திலும் லாப நாட்டம் இல்லை என்றால் அதை எதிர்க்க மாட்டார்கள். தமக்கும் அதனால் ஏதாவது நன்மை உண்டென்றால்தான் அதற்கான செயற்பாடுகளில் பங்கெடுப்பார்கள். இதுதான் உலக நியதி. இந்த யதார்த்த அடிப்படையில்தான் திறமையான சிந்தனையாளர் சிந்திக்க வேண்டும். எமக்கு கிடைக்கும் நன்மையான விடயத்தால் எமக்கு  உதவ முன்வருவோருக்கும் நன்மை இருப்பது அத்தியாவசியம்.
ஆனால் நாம் விடுகின்ற பிழை என்னவென்றால் அனைத்தையுமே சுயநலமாக மட்டும், தன்னை, தங்களை  மையமாகக் கொண்டு மட்டும் எமது பக்க நன்மைக்காக மட்டும் சிந்திப்பதுதான். அதனால் நமக்கு யாருமே துணையாக இல்லாமல் தனிமைப் படுத்தப்பட்டு அழிவைச் சந்திக்கின்றோம். நாம் நமக்காகச் சிந்திக்கும்போது எமது மறுபக்கத்தில் உள்ளவனைப் பற்றியும் அவனது அபிலாசைகள் தேவைகள் பற்றியும் சிந்திக்கத் தவறினால் நாம் (THINK TANK) சிறப்பான சிந்தனையாளர் அல்ல. அப்படியான எமது சிந்தனை அழிவைத்தான் தரும். சுருங்கச் சொன்னால் “வாழ்வோம், வாழ விடுவோம்” என்ற அடிப்படையில் சிந்திப்பவனே சிறந்த சிந்தனையாளனாக இருக்க முடியும். தமிழரின் தேவைகள், உரிமைகள்,நியாயப்பாடுகள் பற்றி நாம் சிந்திக்கும்போது சிங்கள மக்களின் தேவைகள் அபிலாசைகள் பற்றியும் நாம் சிந்தித்தால்தான் இருதரப்பாரும் வெல்லமுடியும். நாம் மட்டும் வெல்வதோடு அவர்கள் கட்டாயம்  தோற்கவேண்டும் என்று சிந்தித்தால்  நிட்சயமாக நாம் எக்காலத்திலும் வெல்லவே முடியாது.
சரியான விவேகமான ஆழமான சிந்தனைகளை உடையவர்கள் இருந்தாலும்கூட அவர்களது அந்தச் சிந்தனைகளை மக்களுக்கு எடுத்துச் செல்ல முடியாதபடி அவற்றை முற்றாக மறைத்து தமது பொய்யான வெறும் உணர்ச்சி வசமான விடயங்களை மட்டுமே மிகப் பெருமளவில் ஊடகங்கள் மூலம் மக்களுக்கு திணித்துக் கொண்டிருக்கும் ஒரு நிலையை நம்மில் சிலரே ( புலம்பெயர் நாட்டில்  இருக்கும் சிலரின் வழிநடத்தலில்) உருவாக்கியுள்ளமைதான் எமது இனத்தின் சாபக்கேடாக உள்ளது.
ஈழமக்களின் விடுதலைக்காக வழமான  வாழ்வுக்காக முன்னர் புலம்பெயர் மக்களால் வாரிவழங்கப்பட்ட நிதி இப்போது அதே மக்களின் அழிவுக்காக, மனஉளைச்சலுக்காக ஒரு சிலரது பேராசைக்காக பயன்படுத்தப்படுவதை யாரால்த்தான் சகித்துக்கொள்ளலாம். மக்களை சிந்திக்க விடாமல் ஒரு உணர்ச்சிவச  மாயையில் கொதிநிலையில் வைத்திருப்பதால் தமது சுயநலன்களை, ஆதிக்கம் மற்றும் நிதி  நன்மைகளை இன்னும் சில காலத்திற்காவது தக்கவைக்கலாம் என்பது அவர்கள் கணிப்பாக உள்ளது. அதனால் தமது நிதிபலத்தால் ஊடக பலத்தால் ஏனைய மிகப்பெரும்பாலான  ஊடகங்களையும்கூட தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு தமிழினத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றார்கள்.  சிங்கள அரசைவிட சிங்கள மக்களைவிட உலகநாடுகளை விட உண்மையில் இவர்கள்தான் எமது முதல் எதிரிகளாவர். உண்மையை மக்களுக்கு உணர்த்தி; நிதிபலம் மிக்க இவர்கள் பிடியிலிருந்து மக்களை விடுவிப்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல. ஆனாலும் அதைத்தான் நாம் செய்தாக வேண்டியுள்ளது. சமூகத்தின் சிந்தனையாளர் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களால்தான் இதைச் செய்ய  முடியும்.
 
உரிமைகளா, அபிவிருத்தியா?.  
எமது தேவை என்ன?. உடல் ஆரோக்கியத்திற்கான பொருள் வழம், உளஆரோக்கியத்திற்கான கல்வி, சமயம், கலை கலாச்சார விடயங்கள். இவற்றை நாம் பெறுவதற்கான வழிகளாகவே  அரசியல் உரிமைகள், அபிவிருத்திகள் என்றெல்லாம் கேட்கின்றோம். உரிமைகளா, அபிவிருத்தியா ?. உணவில்லாமல் ஒரு நாள் கூட நாம் பலத்தோடு வாழ முடியாது. சிலநாளில் இறந்து விடுவோம்.நாம் பலத்தோடு வாழாமல் உரிமைகளைப் பெற போராட முடியாது. ஆனால் உரிமைகள் இல்லாவிட்டால் எமக்குத் தேவையான அபிவிருத்திகளை எமக்குத் தேவையானபடி திட்டமிட்டு செயற்படுத்தி, கிடைக்கும் பயனை நாமே முழுமையாகப்  பெற்றுக்கொள்ள முடியாது. அதிகாரம் இல்லாவிட்டால் எமது உழைப்பு அரச அதிகாரம் உள்ளவர்களால் சூறையாடப்படும். எமக்குத் தேவையான அபிவிருத்திகள் முடக்கப்பட்டு அதிகாரம் உள்ளவர்களுக்குத் தேவையான  அபிவிருத்திகளே மேற்கொள்ளப்படும்.  அதனால் எமக்கு இரண்டுமே தேவைதான்.
உடனடியாகக் கிடைக்கும் அனைத்து  வழிகளையும் (அபிவிருத்தி) பயன்படுத்தி எடுக்கக் கூடியளவு பொருளாதார நன்மைகளை எடுத்து முடிந்தளவு பலமாக வாழ்ந்துகொண்டு அதேநேரம் அந்தப் பலத்தில் அரசியல் உரிமைகளுக்காகப் போராடி அதையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே   உயர்ந்த தெளிந்த சிந்தனையாகும். அதை விடுத்து அரசிடமிருந்து கிடைக்கும் எதையுமே எடுக்காதீர்,  உரிமையைத்தான் முதலில் எடுக்க வேண்டும்  என்று சிலரும்; உரிமைகளே தேவையில்லை,தேசிய அரசியற் கட்சிகளோடு சேர்ந்திருந்து கொண்டு  அபிவிருத்தியைச் செய்வோம் என்று  சிலரும் தத்தம் தேவைக்காக கூச்சல் போட்டு மக்களைக் குழப்பி அவர்களின் வேதனையில்  தமது சொந்த அபிவிருத்திகளைக் கவனித்துக் கொள்கின்றார்கள்.
எமது உரிமைகளையோ அபிவிருத்தியையோ யாரிடமிருந்து பெறுவது?. 
அரசியல் உரிமைகளையோ அல்லது அபிவிருத்தியையோ எங்கிருந்து யாரிடமிருந்து பெறுவது?. இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா அல்லது உலகிடமிருந்து எமது உரிமைகளைப் பெறலாமா?. அது அவர்களிடம்   இருந்தால்த்தானே அவர்கள் தரலாம். எம்மிடமிருந்து அதை பறித்து வைத்திருப்பது இலங்கை அரசுதான். அதனால் அதை இலங்கை அரசிடமிருந்துதானே பெறவேண்டும்.  உதவிக்கு வரும் யாரென்றாலும் அவர்களும் அதை சிங்கள அரசுடன் பேசி சிங்கள அரசிடமிருந்துதான் பெற்றுத்  தரவேண்டும். இந்த அடிப்படை உண்மையியிலிருந்துதான் எமது செயற்பாடுகள் இருக்கவேண்டும். மஹிந்தவும், ரணிலும் சமமான எதிரிகள், இலங்கை அரசு பக்கம் தலையும் வைக்கக் கூடாது, பேசக்கூடாது, பார்க்கவே கூடாது வெறுத்தொதுக்க வேண்டும் என்று மக்களை ஏமாற்றுபவர்கள் தாம் பின்கதவால் அவர்களுடன் கைகோர்த்து இரகசியமாக தமது ஒப்பந்தங்களை செய்துகொள்கிறார்கள். மறுபக்கத்தில் சிங்கள கட்சிகளில் சேர்ந்து கொண்டிருப்பவர்கள் அரசு தனது தேவைக்காக விரும்பிக் கொடுப்பதை மட்டுமே பெறலாம்.  இருசாராரும் மக்களை ஏமாற்றி தம்மை வளர்த்துக் கொள்கிறார்கள்.
சிங்கள அரசிடம் இருந்துதான் பெறவேண்டும் என்றால் எமது முதற்செயற்பாடாக சிங்கள அரசை எமக்கு பாதகம் குறைந்ததாக, முடிந்தால் எமக்குச் சாதகமாக மாற்றவேண்டும். அது எங்களில் எல்லோருக்கும் எல்லாச் சந்தர்ப்பத்திலும் சாத்தியமான காரியம் அல்ல. பழுத்த அரசியல் ஞானமும் அனுபவமும் இராசதந்திரமும் ஆளுமையும் சாணக்கியமும் தேவை. பத்துப் பதினைந்து பேர் 225 பேரோடு போராடித்தான் அதைச் செய்யவேண்டியுள்ளது. அது வெறும் நேரடிக் கூட்டல்  கழித்தல் அல்ல. அதை சாதாரண மக்கள் இலகுவில் புரிந்துகொள்ளவும் முடியாது. பயன்கள் கிடைக்கும் போதுதான் மக்கள் அதை உணரமுடியும். மக்களின் கைதட்டலையும் உடனடி ஆதரவையும் பெற்று தமது தற்காலிக சுயநன்மைகளைப் பெற விரும்புவோர் அதைச் செய்ய முடியாது. அர்ப்பணிப்போடு மக்களின் நிலையான நன்மைகளை முன்னிறுத்தி;  மக்கள் வாழ்ந்தால்த்தான் அவர்களோடு நாமும் எமது சந்ததியும் வாழலாம் என்று சிந்திப்போர்தான் அதைச் செய்யலாம். அரசின் பங்காளிகளாக மாறாமல், அதேநேரம் தமக்குப் பாதகமான அரசை வீழ்த்தி சாதகமான அரசை நிலைநிறுத்துவதில் பங்காளராய் இருந்து கொண்டு சந்தர்ப்ப சூழ்நிலைகளை மிகக் கவனமாக, தவற விடாமல் பயன்படுத்தி  யாரையும் நிரந்தர நண்பராகவோ அல்லது பகைவராகவோ கொள்ளாமல் அந்தந்தச் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப உதவிவழங்கியும் அழுத்தங்களைக் கொடுத்தும் அவர்களைக் கையாண்டு (கைகோர்த்துக் கொள்ளக் கூடாது)  சாணக்கியமாக தமது தேவைகளை அடைவதே அரசியற் தலைமைகளின் திறமை. அப்படியான தலைமையை (இல்லாவிட்டால் இருப்பதற்குள் சிறந்ததை) மக்கள் இனம்கண்டு தமது முழு ஆதரவையும் கொடுக்க வேண்டும்.
எமக்கு உதவும் நண்பர்கள்.
இலங்கை அரசைக் கையாள்வதைவிட நமக்கு வேறு வழி இல்லை என்று கண்டோம். ஆனால்  எமது முயற்சிக்கு சாதகமான உலக நாடுகளின் உதவியை நாம் பெறலாம். அதனால் நாம் நன்மை அடைவதோடு அவர்களுக்கும் நன்மை இருக்கவேண்டும். இல்லையென்றால் அவர்களின் உதவி கிடைக்காது. ஆனால் நாங்கள் அவர்களின் கட்டுப் பாட்டிற்குள் அகப்படக்கூடாது. ஒவ்வொரு நாட்டு அரசியலிலும் அவ்வவ்போது ஆதிக்கம் செலுத்தும் அந்நாட்டு அனைத்துத் தரப்பு சக்திகளைப் பற்றிய சரியான அறிவு இருந்தால்த்தான் நாம் அவர்களைக் கையாள முடியும். இலங்கையைப் பொறுத்த வரையில் அது இந்துசமுத்திர கேந்திர இடத்தில் இருப்பதே உலக நாடுகள் நாட்டம் கொள்வதற்குக் காரணமாகும். அது ஒன்றேதான் எமது மூலதனம். இந்துசமுத்திரப் பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு இந்தியாவும் அமெரிக்காவும் சீனாவும் போட்டா போட்டி போடுகின்றன.
மகிந்த நாட்டையே சீனாவிடம் மீளமுடியா உயர்வட்டிக் கடனுக்கு அடைவு வைத்து விட்டார். கடனைத் திருப்பிக் கட்ட முடியாமல் அதற்காக ரணில் அம்பாந்தோட்டையை சீனாவுக்கு  கொடுத்துவிட்டார். இலங்கையைப் பணியவைத்து சீனாவிடமிருந்து இலங்கையை விடுவிக்கவே அமெரிக்கா தலைமையிலான நாடுகள் (இந்தியாவும்) தமிழர் பிரச்சனையை கையில் எடுத்துள்ளார்கள். ஜனநாயகம், மனித உரிமைகள், போர்க்குற்றங்கள் எல்லாம் இலங்கையைப் பணியவைக்கும் உபாயங்கள்தான். ஆனாலும் இலங்கையில் நிலையான அமைதியான இன நல்லிணக்க ஆட்சி அமையவேண்டியது அவர்களுக்கும் தேவைதான். அதன்மூலம் இலங்கையில் ஏற்படும் பொருளாதார அபிவிருத்தியால் அவர்களுக்கும்  பொருளாதார நலன்கள்   ஏற்படுவதோடு அனாவசியமான வெளிநாட்டுத் தலையீடுகள் தவிர்க்கப்படுவதும் அவர்களின் தேவையாகும்.  இவற்றால் தமிழர் தேவைகளும் நிறைவேறுகின்றன. ஏதோ  உலகநாடுகள் இரட்ஷகர்கள்   ஜனநாயகத்தைக் காப்பாற்ற மானிடத்தைக் காப்பாற்ற தமிழரைக் காப்பாற்றச் செயற்படுகிறார்கள் என்று சிலர் (தமிழ் ஊடகங்கள்) எமது மக்களை நம்பவைத்து அவர்களை ஏமாற்றி  கொதிநிலையில் வைத்துக் கொள்வதால் தமது நலன்களை கச்சிதமாகக் காப்பாற்றிக் கொள்கின்றார்கள்.
உலக நிறுவனங்கள்.
உலக நாடுகள் ஒன்றுசேர்ந்து ஐநா சபையையும் அதன் உபஅமைப்புகளாக  பாதுகாப்புச்சபை, மனித உரிமைப்பேரவை என்பவற்றையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ICC என்றும் உருவாக்கி யுள்ளார்கள். ஒரு நாடு இந்த உலக அமைப்புகளில் விரும்பினால் விரும்பிய நேரம் சேரலாம், இல்லாவிடில் விலகலாம். யாரும் தடுக்க முடியாது. அமெரிக்கா சென்ற வருடம் மனித உரிமைப் பேரவையில் இருந்து விலகிக்கொண்டது. அவற்றின் தீர்மானங்களுக்கு ஒரு நாடு கட்டுப்படலாம் அல்லது விடலாம். உண்மையில் அதற்கு அப்பால் ஒரு நாட்டிற்கு எதிராக படைபலம் பயன்படுத்துவதாயின் அது ஒரு வல்லாதிக்க நாட்டைப் பொறுத்ததாகவே  இருக்குமன்றி இந்த உலகப் பொது அமைப்புகளால் நடவாது.. பாதுகாப்புச் சபையில் தீர்மானம் எடுத்தால் சாத்தியமாக்கலாம். ஆனால் அதில் வீட்டோ அதிகாரம் கொண்ட அமெரிக்காவும்  சீனாவும் எதிரெதிர் அணிகளாக இருக்கும்வரை அது சாத்தியமேயில்லை.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும் ICC  இந்த உலக அமைப்புகளின் குழந்தைதான். ஐக்கிய நாடுகள் சபை அல்லது பாதுகாப்புச் சபை கேட்டுக்கொண்டால் வழக்கை நடத்தலாம். அமெரிக்கா மனித உரிமைச் சபையில் இலங்கைக்கு வெறும் வேண்டுகோள் விடுவது போன்று கொண்டு வரப்பட்ட  தனது பிரேரணை தோற்றுவிடக்கூடாதென்பதற்காக தனது முழுச்சக்தியையும் பயன்படுத்தி 47 நாடுகளில் வெறும் 24 நாடுகளின் ஆதரவைத்தான் பெறமுடிந்தது. அப்படியென்றால் இலங்கையத்
தண்டிப்பதற்கான ஒரு பிரேரணைக்கு எத்தனை நாடுகள் ஒத்துழைப்பார்கள். மனிதஉரிமைப் பேரவை வேண்டாம், ICC க்குக் கொண்டுபோவோம் என்று கூப்பாடு போடுவோர் இதுவரை அதற்கு ஆதரவாக ஒரு  நாட்டையாவது தயார் செய்துள்ளார்களா?. அப்படித்தான் கொண்டுசென்றாலும் வழக்கு முடிய தசாப்தம் கூட ஆகலாம். 2 வருடம் வேண்டாம் என்போர் அவ்வளவு காலம் பொறுப்பார்களா?. சரி அப்படித்தான் மகிந்தவுக்கும் கோத்தாவுக்கும் மரண தண்டனை நிறைவேற்றினாலும் அதை நடைமுறைப்படுத்துவது யார், எப்படி,எங்கே ?. அப்படித்தான் தூக்கில் போட்டாலும் அதனால் தமிழரின் பிரச்சனை எப்படித் தீரும்?. அதற்கு மீண்டும் நாம் இலங்கை அரசிடம்தானே போகவேண்டும். மக்களை எவ்வளவு தூரம் முட்டாள்கள் ஆக்குகின்றார்கள்?.
கால அவகாசம் கொடுத்து விட்டதாக ஒப்பாரி வைக்கிறார்கள். எமக்கிருந்த தெரிவுகள் என்ன?.    அத்தீர்மானத்தின் மூலம் இலங்கையை தொடர்ந்தும் சர்வதேசம் தமது மேற்பார்வையில் வைத்திருந்து அழுத்தங்கள் மூலம் முடிந்தளவு விடயங்களையாவது செய்விக்கலாம், அல்லது முற்றாகத் தீர்மானத்தை விலக்கி இலங்கை அரசைச் சுதந்திரமாக விட்டிருக்கலாம். இரண்டாவது தெரிவுக்காகத்தான் மகிந்த -மைத்திரி  கூட்டு இறுதிவரை போராடினார்கள். ஆனால் அதை சுமந்திரன் ரணில் தரப்பு முறியடித்தது. ஆனால் அதே தெரிவுக்காகத்தான் இந்த கால அவகாசம் வேண்டாம் என்போரும்  போராடுகின்றார்கள். ????. நாங்கள் ICC க்குப் போய் உங்கள் கௌரவத்தை உலக அரங்கில் கெடுக்கமுடியும் என்றும்; உலக நாடுகளின் உதவிகளைக் கிடைக்காமற் செய்வோம் என்றும்  உலக நாடுகளின் ஆதரவோடு  அவ்வாறான பல அழுத்தங்களைக் கொடுப்பதன்மூலமும் முடியுமானளவு உள்நாட்டு அரசியல் அழுத்தங்களைக்  கொடுப்பதன் மூலமும் இலங்கை அரசிடமிருந்துதான் தமிழர் உரிமைகளைப் பெற்று  பிரச்சனைகளைத் தீர்க்கவேண்டும். வேறு வழியேயில்லை. வேறுவழி இருப்பதாகக் கூறி மக்களை  ஏமாற்றி அவர்களை வதைக்கக் கூடாது. இஸ்ரேல்  நாட்டிற் கெதிராக இதே மனித உரிமைப் பேரவையால் 5,6 டசின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்தநாடு அதில் ஒன்றைக்கூடக் கவனத்தில் எடுக்கவில்லை. அதற்கெதிராக இதுவரை யாரும் ICC க்கோ வேறு எங்குமோ போகவில்லை. வேறு எந்த நடவடிக்கையும் யாரும் எடுக்கவில்லை. எடுக்க முடியாது என்பதுதான் உண்மை. மேலும் நாம் கேட்டபடி கேட்ட  அளவு உடனே கிடைக்கவில்லை யென்று  கிடைப்பதை அல்லது கையில் இருப்பதை வேண்டாம் என்று ஒதுக்குவது முழுமுட்டாள்த்தனம். கிடைப்பதைப் பெறுவதால் பின்னர் அதற்கு மேல் கேட்கக் கூடாதென்றோ பெறக்கூடாதென்றோ இல்லையே. கிடைப்பதையும்  பெறாவிட்டால் மேலும் கேட்பதற்கு யாரும் இருக்கமாட்டோம்.  கிடைக்கும் அரசியல் அமைப்புத் திட்டத்தை ஏற்பதால்  அதை இனிமேல் மாற்றக்கூடாதென்றோ வேறொன்று கொண்டுவர முடியாதென்றோ நியதி இல்லையே. அரசின் கையை முடியுமானவரை நசுக்கி எமக்கு அதிகூடிய நன்மைகளைப் பெறவும் வேண்டும், அதேநேரம் அதைத் தருகின்ற சிங்களத் தரப்பு தோற்றுவிடாமற் பாதுகாக்கவும் வேண்டும். தோற்றுவிட்டால் வென்றுவரும் மறுதரப்பு நமக்குக் கிடைத்ததை மீண்டும் இல்லாமற் செய்துவிடும்.
 
இணக்க அரசியலும் எதிர்ப்பு அரசியலும்.    
நாம் இலங்கையர், இலங்கையில் அரசியற் கட்சி வித்தியாசத்தைத் தவிர ஏனைய வேறுபாடுகள் தேவையில்லை. தமிழர் சிங்களவர் என்ற வேறுபாடு தேவையில்லை. நாங்கள் பெரும்பான்மைத் தேசியக் கட்சிகளோடு சேர்ந்துதான் செயற்பட வேண்டும் என்று செயற்படுவோர் இணக்க அரசியல் செய்கிறார்கள். சிங்கள அரசியற் கட்சிகள், தலைவர்கள் அனைவருமே சரிசமமான எதிரிகள். சிங்கள மக்களே எதிரிகள்தான். எவருடனும் எந்தவிதப் பேச்சுவார்த்தையோ தொடர்போ கொள்ளவே கூடாது. நாம் முற்றாக எதிர்த்து போராட்டம்தான் செய்ய வேண்டும் என்று கூறுவோர் எதிர்ப்பு அரசியல் செய்கிறார்கள்.  இந்த இரண்டுமே வெறும் பாமர மக்களை ஏமாற்றி உணர்ச்சிவசப்படுத்தி தம் சுயநன்மைக்காக சொந்தப் பதவிக்காக அதிகாரத்திற்காக வாக்குகளைப் பெறும் தந்திரமே தவிர இனத்திற்கான தீர்வையோ வேறு எவ்வித நன்மைகளையோ தரக்கூடிய அரசியற் செயற்பாடு அல்லவே  அல்ல. பணபலம் கொண்ட இந்த துரோகிகளின் ஊடகப் பரப்புரை மூலம் மக்கள் ஏமாந்து விடக்கூடாது.  அரசியல் என்பது அவ்வளவு எளிதான விடயமல்ல. அந்த விடயத்தை சாதுரியமாக சாணக்கியமாக விவேகமாக இராசதந்திரமாக அந்தந்தச் சந்தர்ப்பங்களுக்கேற்பக் கையாளக்கூடிய சாமர்த்திய சாலிகளிடம் விட்டுவிட வேண்டும்.
சர்வசன வாக்கெடுப்பு.
புலம்பெயர் தமிழரையும் சேர்த்து சர்வசன வாக்கெடுப்பு மூலம் எமது முடிவைத் தீர்மானிக்க வேண்டும் என்று சிலர் புலம்புகின்றார்கள். பூனைக்கு மணி கட்டுபவர் யார்?. இந்த வாக்கெடுப்பை இலங்கை அரசு நடத்துமா?. அல்லது இலங்கை அரசையும் அங்குள்ள அனைத்துப் படையினரையும் பிடித்து சிறையில் அடைத்துவிட்டு அங்கு தமிழரை மட்டும் தெரிந்தெடுத்து அவர்களிடையே சர்வசன வாக்கெடுப்பு நடத்தவும் அந்த முடிவை அமுல்படுத்தவும் கூடிய அதிகாரமுடைய ஏதாவது சக்திமையம் இந்த உலகில் எங்காவது இருக்கிறதா?. சர்வசன வாக்கெடுப்பு கோருவோர் இதுவரை அதற்கு ஆதரவாக உலக நாடுகளில் ஒரு நாட்டையாவது தயார்படுத்தி உள்ளார்களா?. எந்தவொரு உலக அமைப்புக்கும்  சட்டங்களை இயற்றி அவற்றை நடைமுறைப்படுத்த அதிகாரமோ, படையணியோ எதுவும் கிடையாது. அறிக்கைகளைத் தயாரிக்கலாம், வேண்டுகோள் விடலாம்,கனவான் ஒப்பந்தங்களை ஏற்படுத்தலாம், அழுத்தங்களைக் கொடுக்கலாம். கூடியபட்ஷம்  சில பல நாடுகள் சேர்ந்து தமது சக்திக்கேற்ப பொருளாதாரத் தடைகளை விதிக்கலாம். அதற்குமேல் எதுவும் செய்ய முடியாது. பெரும்பாலான விடயங்கள் வல்லரசுகளின் நிலைப்பாட்டைப் பொறுத்தும் அந்தந்தச் சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பொறுத்தும்தான் முடிவாகும். இந்த உலக அரங்க விடயங்களை சாதாரண மக்களால் முழுமையாக விளங்கிக்கொள்வது மிகக்கடினம். அதை வைத்துக்கொண்டே எமது நாசகார அரசியல் வாதிகள் தத்தமக்கு வேண்டியவாறு  மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் இது ஜனநாயக  உலகம். மக்களிடம்தான் அரசை உருவாக்கும் பலம் உள்ளது. அதனால் மக்கள் ஆழமாகச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டியுள்ளது. இல்லாவிட்டால் எல்லோருக்குமே தாழ்வுதான். நமக்கு உள்நாட்டில் நீதி கிடைக்கவில்லையே என்ற தவிப்பில் நாம் இந்த உலக அமைப்புகளிடம் உதவிக்கு ஓடுகின்றோம். ஆனால் அவர்களின் பலம் என்ன? அவர்களால் எப்படி என்ன உதவி செய்ய முடியும், அவர்கள் எதைச் செய்ய விரும்புவார்கள்,அதனால் அவர்களுக்கு என்ன லாபம் என்பனவற்றை நாம் முழுமையாக  அறிந்தால்த்தான் நாம் அவர்களைக் கையாளலாம். அல்லாவிடில் எம்மைக் கைவிட்டு விட் டார்கள் என்று ஏமாற்றம் அடைவதோடு எதிர்விளைவுகளைக்கூட சந்திக்க நேரிடலாம். உலகில் நாம் சாதிக்க வேண்டிய, அடையவேண்டியவை உள்ளன. அவற்றை சாதிக்க அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடுவதே வாழ்க்கை. அடையமுடியாதவற்றை மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக  இருப்பதே வாழ்க்கையின் இரகசியம். சாதிக்க வேண்டியவை, மாற்றியமைக்க வேண்டிவை எவை, இருப்பதை அவ்விதமே ஏற்றுக்கொள்ள வேண்டியவை எவை என்பதைப் பிரித்தறியக்  கூடியவனே உண்மையான புத்திசாலி, சிந்தனையாளன்.
முடிவாக 
இப்போது இங்கு ஆரம்பத்தில் தரப்பட்ட  பத்து வினாக்களுக்கும் விடை கண்டுகொள்ளலாம். மற்றும் எந்த வினாக்களுக்கும் இப்போ எம்மால் விடைகாண முடியும். எனவே ஈழத்துப் பல்கலைக் கழக தமிழ் மாணவர்களே, சிந்தனையாளர்களே,  பொதுமக்களே  சிந்திப்போமா?. அனைவரும் சரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம்.  சுயநல வல்லூறுகளை விரட்டியடிப்போம். ஈழத்தமிழர்- என்றால் சிந்தனையாளர், ஒற்றுமையானவர்கள், கட்டுப்பாடானவர்கள், கௌரவமானவர்கள் என்று உலகம் வியக்க வைப்போம். கௌரவமாய் உரிமைகளோடு, உயர்வாய், உலகுக்கோர் உதாரண இனமாக வாழ்ந்து காட்டுவோம்.
Share the Post

You May Also Like