உயிர்த்த ஞாயிறு போன்ற தாக்குதல்கள் தடுக்கப்பட இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டியது இன்றியமையாதது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் போன்ற தாக்குதல்கள் முழுமையாக தடுக்கப்பட வேண்டுமானால் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டியது இன்றியமையாதது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்காவில் நீடித்துவரும் சிங்கள பௌத்த பேரினவாதமும் உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலுக்கு அடித்தளமாக அமைந்திருப்பதை எவரும் நிராகரித்துவிட முடியாது என்றும் சுட்டிக்காட்டிய சுமந்திரன், அதனால் சிங்கள பௌத்த பேரினவாதம் தொடர்பில் இன்னமும் விசாரிக்கப்படாதது குறித்து தனது அதிருப்தியை வெளியிட்டார்.

ஏப்ரல் 21 ஆம் திகதி 250 உயிர்களை காவுகொண்ட தற்கொலைத் தாக்குதல்களை அடுத்து நாட்டில் அவசரகாலச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதுடன், கடுமையான அவசரகால சட்ட விதிமுறைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த புதிய விதிமுறைகள் மக்களின் சுதந்திர செயற்பாடுகளை முழுமையாக தடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக குறிப்பிடும் ஜனாதிபதி சட்டத்தரணியான சுமந்திரன், இந்த சட்டவிதிகளை தொடர்ந்தும் நீடிக்க அனுமதிக்கப்போவதில்லை என்று குறிப்பிட்டார்.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை அடுத்து நாடு தழுவிய ரீதியில் பாதுகாப்பு தொடர்பில் எழுந்துள்ள அச்சுறுத்தல்களை அடிப்படையாகக் கொண்டு குறிப்பாக தமிழர் தாயகத்தில் அதிகளவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினர் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்று தமிழர் தரப்பு விரும்புவதாக கொழும்பு ஊடகங்கள் தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

இது குறித்து இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் சுமந்திரனிடம் வினவிய போது, வடக்கில் தேவைக்கு அதிகமாக குவித்துவைத்திருக்கும் இராணுவத்தை வெளியேற்றுங்கள் என்ற தமது நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என்று சுமந்திரன் மிகத் தெளிவாக குறிப்பிட்டார்.

Share the Post

You May Also Like