ஜனாதிபதியின் செல்லப்பிள்ளையான ஹிஸ்புல்லாஹ் கைது செய்யப்படவும் மாட்டார்,விசாரிக்கப்படவும் மாட்டார்!

உயிர்த்த ஞாயிறுதினமான ஏப்பிரல் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தீவீரவாதத்தாக்குதல் தமிழ் மக்களை மையமாக வைத்தே தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவராகச் சொல்லப்படும் சூத்திரதாரி சஹ்ரான் அவர்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இந்தத் தாக்குதல் நாட்டில் இருக்கின்ற அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்

மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவர்களது பன்முப்படுத்தப்பட்ட நிதியில் துறை நீலாவணைக் கிராமத்தில் ரூபா 45 இலட்சம் நிதியில் மூன்று வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.இந்நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்

கிறிஸ்தவ வழிபாடானது தமிழ் மொழியிலும் சிங்களமொழியிலும் கொழும்பில் நடாத்தப்படுவது வழமை. இதில் தமிழ் மொழியில் வழிபாடு நடாத்தப்படுகின்ற போதுதான் தாக்குதல் நடாத்தப்பட்டு இருக்கின்றது. அதிலும் முக்கிய பங்கு எமது மாவட்டத்தில் இருக்கின்றது. ஐ.எஸ் ஐ.எஸ். அமைப்பின் முக்கிய பிரமுகர்களில் ஒருவர் தௌஹீத் ஜமா அத் அமைப்பை வைத்துக்கொண்டு காத்தான்குடியில் இருந்து சஹ்ரான் என்பவர் எமது சமூகத்துக்கு பாரிய அச்சுறுத்தலாக இருந்துள்ளார்.

இவரைப்பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. குறிப்பாக தௌஹீத் ஜமா அத் அமைப்பு 2011 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த அமைப்பு ஏனைய சமூகத்துக்கும் ஏனைய சமயங்களுக்கும் அச்சுறுத்தல் கொடுப்பதாகவும் அத்தோடு இஸ்லாத்துக்குள்ளும் அச்சுறுத்தல் விடுத்ததன் காரணமாக 2017.3.13 ஆம் திகதி தௌஹீத் ஜமா அத் அமைப்புக்கும் சஹ்ரான் அவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளதாக அறிகிறோம். அதாவது இவர் தீவிரவாதச் செயற்பாடுகளை மேற்கொள்வதாகத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு இருக்கின்றது.

அதேவேளை காத்தான்குடிப் பொலிஸ் மற்றும் காத்தான்குடிப் பிரதேசசெயலாளரிடமும் மகஜர் கையளித்து இருப்பதாகவும் உயர் மட்த்தில் இருக்கும் முக்கியஸ்தர்களுக்கும் மகஜர் அனுப்பியதாக செய்திகளில் அறிகின்றோம்.

நாட்டினுடைய தலைவர்கள் யாரும் இத்தீவிரவாதச்செயற்பாடுகள் தொடர்பாக தங்களுக்குத் தெரியாது எனக் கூறமுடியாது. இவர்கள் கரிசனை காட்டியிருந்தால் இவ்வாறான தாக்குதலை தடுத்து நிறுத்தியிருக்கமுடியும் .

ஆனால் இத்தீவிரவாதி வசித்த இடத்தில் ஒரு அமைச்சர் இருந்திருக்கின்றார் அவர் தோற்றாலும் அமைச்சர் வென்றாலும் அமைச்சர். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ அவர்களை ஆதரித்து மைத்திரிபாலசிறிசேன அவர்களுக்கு எதிராக செயற்பட்டவர். இவரை ஜனாதிபதி தனக்கு ஆதரவு குறைவாக இருந்தமையால் அவருக்குத் தேசியப்பட்டியல் வழங்கி இராஜாங்க அமைச்சராகவும் நியமித்து இன்று ஜனாதிபதியினால் ஆளுநராக நியமிக்கப்பட்டு இருக்கின்றார்

இவரது ஊரான காத்தான்குடியில் இந்த தீவிரவாதி சஹ்ரான் மற்றும் தௌஹீத் ஜமா அத் அமைப்பும் இருந்துள்ளது. இவர்களது நடவடிக்கை தொடர்பாக ஏன் பாதுகாப்பு அமைச்சின் கவனத்துக்குக் கொண்டுபோயிருக்கமுடியாமல் போனது? அவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் கவனத்துக்குக் கொண்டுசென்றிருப்பாரானால் இந்தப் பாரிய அழிவைத் தடுத்திருக்க முடிந்திருக்கும்.

இன்று மாவட்டத்தில் என்ன நடக்கிறது? கடந்த காலத்தில் மகிந்தராஜபக்ஷ காலத்தில் தமிழ் மக்கள் பிரதிநிதியாக இருக்கட்டும் சாதாரண பொதுமக்களாக இருக்கட்டும் யாருடைய வீட்டுக்கும் செல்லமுடியாத அளவுக்கு தமிழர்கள் மத்தியில் பாரிய சோதனைகளும் பாதுகாப்புக் கெடுபிடிகளுமாகவே இருந்தது. எங்கள் பின்னால் புலனாய்வுப்பிரிவினர்பின்தொடர்வார்கள் .

அண்மையில் வவுணதீவில் பொலிஸாரைச் சுட்டது புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் எனக் கூறி அப்பாவிகளைக் கைதுசெய்து அடைத்தார்கள்.

ஆனால் என்ன நடந்தது குண்டு வெடிப்பின் பின்னர் தீவிர விசாரணையின் பின்னர் அவர்களை சுட்டவர் சஹ்ரான் குழுவைச் சேர்ந்தவர் காத்தான்குடியில் இருந்துள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றது. அதுமட்டுமா எங்களது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்கள் குற்றப்புலனாய்வாளர்களால் விசாரணை செய்யப்பட்டார். இவ்வாறு அப்பாவிகளை விசாரித்தும் அப்பாவிகளை கூட்டில் அடைத்தும் இருக்கின்றார்கள் புலனாய்வுப்பிரிவினர்.

2012 ஆம் ஆண்டு பல்கலைக்கழகம் புனானை ரெஜிதென்னயில் ஆரம்பிப்பதனை நானும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன் பொன்.செல்வராசா ஆகியோர் நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்த்தோம் அவ்விடத்தில் பல்கலைக்கழகம் வேண்டாம் எனத் தெரிவித்தோம். ஆனால் அக்காணியை முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள்தான் ஒழுங்கு செய்து பெற்றுக் கொடுத்து இருக்கின்றார்.

இக்காணி மலையகத்தில் இருந்து 1959, 1979 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மயிலந்தனைக் கிராமத்தில் குடியமர்த்தப்பட்ட 42 குடும்பங்களுக்கு மகாவலி அபிவிருத்தி சபையால் வழங்கப்பட்டது அவர்களிடம் இருந்தே இக்காணி இப்பல்கலைக்கழகத்துக்குப் பறித்தெடுக்கப்பட்டு இஸ்லாமிய முறையில் பெரியதோர் பல்கலைக்கழகம் கட்டப்பட்டு இருக்கின்றது.

இதனை அரசாங்கம் பொறுப்பெடுத்து இஸ்லாமிய முறையில் இருந்து மாற்றப்படவேண்டும் . அது அனைத்து இன மக்களுக்கும் சொந்தமாக இருப்பதுடன் ஹிஸ்புல்லாஹ் தலைமையிலோ அவரது மகனது தலைமையிலோ அல்லது அவரது குழுவின் தலைமையிலோ இயங்கக் கூடாது.

தீவீரவாதத் தாக்குதலின் சூத்திரதாரி காத்தான்குடியில் இருந்தவரின் நடவடிக்கையினை அரசாங்கத்துக்குத் தெரியப்படுத்தாது மறைத்த கிழக்குமாகாண ஆளுநரை ஜனாதிபதி விசாரிக்கவும் கைதுசெய்யவும் போவதில்லை.ஏன் என்றால் ஜனாதிபதியின் செல்லப்பிள்ளையாக இருக்கின்றார். அவரை விசாரித்தால் பலரது உண்மை வெளியிலே வரும்.

அன்று தமிழர்கள் அல்லல் பட்டபோது அதனைப்பார்த்து சிரித்தார்கள். நாங்கள் அவ்வாறு இல்லை அப்பாவி முஸ்லிம் மக்களைத் துன்புறுத்தக் கூடாது உண்மையான தீவிரவாதிகளும் அவர்களுக்கு உதவியவர்களையும் கைதுசெய்து சட்டத்தின் முன்நிறுத்தவேண்டும்

எல்லைக்கிராமத்து மக்கள் அவதானமாக இருக்கவேண்டும். முஸ்லிம் கிராமங்களில் இருக்கின்ற ஆயுதங்கள் சட்டவிரோதமான பொருட்கள் தமிழ் பிரதேசங்களில் வீசப்படுகின்றன. இதனால் எல்லையில் இருக்கும் தமிழ் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும் எல்லைப் பிரதேசங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்தவேண்டும்

தமிழ் மக்களிடம் ஆயுதங்கள் இல்லை. தமிழ்மக்களை நன்றாக நோகடித்து இருக்கின்றீர்கள். இன்று ஓரளவுக்கு நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் அதனைக் குழப்பி துன்புறுத்துவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றார்.

Share the Post

You May Also Like