இன, மத, மொழி பேதமின்றி அனைவரும் தீவிரவாதத்திற்கு எதிராக செயற்பட முன்வரவேண்டும்! சிவமோகன் எம்.பி

இன, மத, மொழி பேதமின்றி அனைவரும் தீவிரவாதத்திற்கு எதிராக செயற்பட முன்வரவேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமை தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா நகரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகமாகவுள்ளது. இராணுவத்தினரும், பொலிசாரும் இணைந்து வைத்தியசாலை சுற்று வட்டாரத்தில் தமது பாதுகாப்பை பலப்படுத்தி இருந்தமையை பார்க்க முடிகிறது. உண்மையில் ஒரு இனம் அடக்கு முறைக்கு உட்பட்டிருந்தால் அந்த இனம் தனக்கு நடந்த அநீதிகளை சுட்டிகாட்டி அகிம்சைவழியில் போராட வேண்டிய காலம் இது.

எனவே இந்தக் காலத்தில் அதற்கான உரித்துக்கள் உண்டு. அதை வைத்து அகிம்சை வழியில் போராடுவதே சிறந்தது. அதைவிடுத்து தீவிரவாதம் என்ற போர்வையில் அப்பாவி பொது மக்களை குறி வைத்தல், வைத்தியசாலைகளை குறி வைத்தல், மதத் தலங்களை குறிவைத்தல் என்பவற்றை ஏற்றுக் கொள்ளக் கூடியதொன்றாக நான் கருதவில்லை. அதேநேரம் இந்த அரசு பாதுகாப்பு நடைமுறைகள் என்ற ரீதியில் வீதிக்கு வீதி சோதனை சாவடிகளை அமைத்து இந்த நடவடிக்கைகளை எடுப்பது எவ்வளவு தூரத்திற்கு வெற்றியளிக்கும் என்பது கூற முடியாது. அவர்கள் மக்களுடன் மக்களாக அனைத்து மக்களையும் இந்த நாட்டின் சொந்த பிரஜைகள் என்ற ரீதியில் நடத்த முற்படுவார்களேயானால் இந்த பாதுகாப்பு பிரச்சனைகள் தானாகவே அகன்று போகும்.

இன, மத, மொழி பேதமின்றி அனைவரும் தீவிரவாதத்திற்கு எதிராக செயற்பட முன்வரவேண்டும். இந்த நாட்டில் ஒரு மதத்திற்கு என தனியான ஒரு இடத்தைக் கொடுத்து ஏனைய மதங்களை அதற்கு கீழே செயற்பட திணிப்பை ஏற்படுத்த முயல்வதை இன்றைய சூழலில் முழுமையாக உணர முடிகிறது. ஆனால் அனைத்து மதங்களுக்கும், அனைத்து மொழிகளுக்கும், அனைத்து மக்களுக்கும் சமவுரித்து வழங்கக் கூடிய விதத்தில் இந்த அரசு செயற்பட்டு ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு அரசியல் யாப்பில் சகல மக்களுக்குமான உரித்துக்களை வழங்கி கடந்த காலத்தில் நடந்த கசப்புணர்வுகளுக்கு உரிய நியாங்களை வழங்கி, அவர்களுக்கான ஒரு சரியான தீர்வை வழங்கி மீள நிகழாமையை உறுதிப்படுத்தி ஒரு பொறுப்புக் கூறலை செய்ய வேண்டும். இதன் மூலம் அனைத்து இன மக்களும் இந்த தீவில் ஒற்றுமையாகவும், சந்தோசமாகவும் வாழ முடியும் எனத் தெரிவித்தார்.

Share the Post

You May Also Like