வைகாசித் திங்கள் 18ல் உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செய்வோம்.

இலங்கையில் தமிழினம் சுதந்திரத்திற்காகவும் தன் அரசாட்சியை மீட்டெடுக்கவும், நிலை நாட்டவும் அறுபதாண்டு இனப் போரில் குறிப்பாக இறுதிப் போரில் களப் பலியாகிய இலட்சக்கணக்கான உயிர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து ஆராதித்து அஞ்சலி செலுத்தும் நாள் நிகழ்ச்சி இவ்வாண்டிலும் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நிகழ்கின்றது.
தமிழ் இன விடுதலைக்காகத் தம்முயிரை அர்ப்பணித்த உத்தமர் தம் தியாகத்தைப் பேணிப் பாதுகாத்து ஆண்டு தோறும் நினைவு கூர்ந்து கண்ணீர் விட்டழுது ஆறுதல் பெறுவது தமிழர் பாரம்பரியம், மரபாகும்.
தெய்வ நம்பிக்கை, மத நம்பிக்கை கொண்டோர் தம் வீடுகளிலும், கோவில்களிலும் வழிபாடியற்றுவர். இந்து மக்கள் ஈமக் கடன் செய்வதற்கு ஆற்றோரம், கடலோரம் சென்று குறித்த இடங்களில் நீராடிப் பூசைகள் செய்து ஆத்ம சாந்திப் பிரார்த்தனை செய்வது ஈமக் கடன் செய்வது வழக்கம். கடந்த பத்து ஆண்டுகளிலும் அளவிடா நெருக்கடிகள் மத்தியிலும் இந் நிகழ்ச்சிகளில் ஆங்காங்கே, குறிப்பாக முல்லை முள்ளிவாய்க்கால் நினைவிடத்திலும் அணி திரண்டு, ஒன்று கூடி கண்ணீரில் நனைந்து உளமுருகிப் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவ்வாண்டும் இப் பிரார்த்தனைகள், அஞ்சலி நிகழ்ச்சிகள் ஈமக்கடனியற்றுதல் இடம்பெறவுள்ளது. அது எமது கடமை.
சென்ற காலங்களை விட இவ்வாண்டு ஏப்ரல் 21ல் இடம்பெற்ற ஐ.எஸ்.ஐ.எஸ் தற்கொலைதாரிகள் குண்டுவெடிப்பு, அப் பேரழிவு காரணமாய் நாட்டில் மீண்டும் அவசரகாலச் சட்டங்களும், பயங்கரவாதத் தடைச் சட்டங்களும் தீவிர நடைமுறையிலிருக்கின்றன. வடக்கிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு நடவடிக்கைகள் இல்லாத நிலையிலும் தமிழர் நிலமெல்லாம் இருக்கின்ற இராணுவ மயம், சோதனை சாவடிகள். மீண்டும் அச்சுறுத்தல் பாடசாலைப் பிள்ளைகளிடமும் சோதனை. ஐ.எஸ்.ஐ.எஸ் பற்றியே பதட்டம் அந்தப் பிஞ்சுகளிடமும் நிச்சயம் உளவியல் பாதிப்பு ஏற்படும் நிலை .
இந் நிலையைக் கருத்திற் கொண்டு தமிழன் விடுதலையை நெஞ்சிலிருத்தி அதற்காய் உயிர் கொடுத்த, களப் பலியாகிவிட்ட உத்தமருக்கு அஞ்சலி செய்யும் ஒரே எண்ணத்துடன் அமைதிகாத்துச் செயல்படுவோம். ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் ஈமக் கடன் செய்வதிலும் ஆழ்ந்த பற்று உறுதியுடன் அர்ப்பணித்துச் செயலாற்றுவோம்,

 

Share the Post

You May Also Like