யாழ் மாநகர முதல்வரின் விசாக திருநாள் செய்தி

வைகாசித் திங்களில்வரும் விசாகப்பூரண நன்நாள் உலகெங்கும் செறிந்து வாழும் புத்தமதத்தை சேர்ந்த அனைவர்க்கும் ஓர் நன்நாளாகும், விசாக நன்நாள் அதி உன்னத நாளாக கருதப்படுவதற்குரிய காரணம் யாதெனில் குறிப்பிட்ட இந்நாளில் தான் கௌதம புத்தர் அவதரித்த தினமாகும். அது போல் அன்றைய தினத்தில்தான் ஞானம் பெற்று போதி மாதவனானார். இதே தினத்தில்தான் ‘பரிநிபான நிலையை’ அடைந்தார் என வரலாறு எமக்கு எடுத்துக்கூறுகின்றது.
புத்தரின் போதனையில் ‘அன்பே இன்ப ஊற்று, அதுவே மனித குலத்தை வாழ வைக்கும் தாரக மந்திரமென’ எடுத்தியம்பினார். மக்கள் மத்தியில் அன்பும், பிற நேசமும் மருவியதால் உலகெங்கும் அமைதியின்மை கொலை, களவு பலவிதமான ஏற்றத்தாள்வுகள், மலிந்து கொண்டே செல்கின்றன. அரசியல் பூசல்களும் இதனால் இடம்பெற்று வருகின்றது.
அண்மையில் ஏப்ரல் மாதம் 21ஆம் நாளில் எமது தாய் நாட்டில் ஒருசிலரின் அன்பற்ற அதிமூர்க்கத்தனமான மனிதாபிமானமற்ற செயலினால் எத்தனையோ உயிர்கள் காவு கொள்ளப்பட்டதை நாம் மறந்துவிட முடியாது.
எது எவ்வாறாயினும் உலகிலுள்ள சமயங்கள் அனைத்தும் அன்பின் முக்கியத்துவத்தை போதிக்க தவறவில்லை. போதிமாதவனின் முன்மொழிவு அன்புக்கே முக்கியமாகின்றது, வறுமை, துன்பம், துயர் அற்ற சமுதாயம் உருவாகி அனைவரும் இன்பமாக வாழவேண்டும் என்பதே அவரின் போதனையாகும்.
எனவே அதிமுக்கியமான இந்த வைகாசி விசாகத்தில் நாம் அனைவரும் எமது தாய் நாட்டில் அமைதியுடன் வாழ்வதற்கு முன்னின்று உழைப்போம் என திடசித்தம் கொள்வோமாக.
‘அன்பே இன்ப ஊற்று. அதுவே எமது தாரக மந்திரம்’ இதுவே எமது விசாக தின செய்தியாகும்.
Share the Post

You May Also Like