சமுர்த்தி கொடுப்பனவில் இனப்பாகுபாடு – நிகழ்வை புறக்கணித்தது தமிழ் கூட்டமைப்பு

மட்டக்களப்பில் நடைபெற்ற சமுர்த்தி பயனாளிகளுக்கான கொடுப்பனவு வழங்கும் நிகழ்வினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர்.

சமுர்த்தி கொடுப்பனவில் இனப்பாகுபாடு உள்ளதாக தெரிவித்து இந்நிகழ்வு புறக்கணிக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு தாமரைக்கேணியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “அமைச்சர் தயாகமகே தலைமையில் சமுர்த்திக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு ஏறாவூர் நகரில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 74வீதம் தமிழ் மக்கள் உள்ளனர். 24 வீதம் முஸ்லிம் மக்கள் உள்ளனர். சமுர்த்தி என்பது வறிய மக்களுக்கு வழங்கப்படுகின்ற ஒரு கொடுப்பனவு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகள் இருக்கின்றன. இவற்றில் 10 பிரதேச செயலாளர் பிரிவுகள் வறுமை கூடிய பிரதேசமாகவுள்ளது. அந்த 10 பிரதேச செயலாளர் பிரிவுகளும் தமிழ் பிரதேச செயலக பிரிவுகளாகவே உள்ளன.

இந்த சமுர்த்திக்கான கொடுப்பனவு என்பது குறித்த 10 பிரதேச செயலக பிரிவினையும் அடைப்படையாகக் கொண்டே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இங்கு அரசியலை மையப்படுத்தியும் தங்களது இனம் சார்ந்தும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

தெரிவுசெய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு இஸ்லாமிய பாடசாலையொன்றில் வைத்து கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றது. இந்த நிகழ்வினை பொதுவான இடத்தில் செய்யுங்கள் என சமுர்த்தி அமைச்சர் கூறியிருக்கவேண்டும். சமுர்த்தி பெறுபவர்களின் பெயர் பட்டியலிலும் சில குளறுபடிகள் இருக்கின்றன.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிசாகிர் மௌலானாவிடம் தெரிவுசெய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளின் பெயர்ப் பட்டியலை கோரியபோதிலும் அது எங்களுக்கு வழங்கப்படவில்லை.

இந்நிலையில் திடீரென சமுர்த்திக்கான அமைச்சர் தயாகமகேயை அழைத்து இந்த சமுர்த்தி கொடுப்பனவு வழங்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளார். இந்த நிகழ்வினை நாம் புறக்கணித்துள்ளோம்.

இது குறித்து பிரதமருடனும் பேசவுள்ளோம். அமைச்சர் தயாகமகேவிடமும் பேசவுள்ளோம். தமிழ் பகுதிகளில் இவ்வாறான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படும்போது எங்கள் ஊடாகவே இவ்வாறான நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

நாங்கள் எமது மக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே இந்த அரசாங்கத்திற்கு ஆதரவினை வழங்கியுள்ளோம்” என்று தெரிவித்தார்.

Share the Post

You May Also Like