தமிழ்த் தேசியப் பற்றாளன் அமரர் குகராஜா!

கிளிநொச்சி மண்ணோடும், இந்த மாவட்ட மக்களின் வாழ்வியலோடும்; இரண்டறக்கலந்து இறுதிவரை மண்ணுக்காகவும், மக்களுக்காகவுமே வாழ்ந்திருந்த ஒரு தமிழ்த்தேசியப் பற்றாளனை இன்று நாம் இழந்து நிற்கிறோம்.

– இவ்வாறு கரைச்சி பிரதேசசபை முன்னாள் தவிசாளராக இருந்து அமரத்துவமடைந்த வைத்திலிங்கம் குகராஜாவின் மறைவு குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளை தனது இரங்கலைத் தெரிவித்து ஊடகங்களுக்கு இரங்கல் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-

யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு மண்ணைத் தன் பூர்வீகமாகவும், கிளிநொச்சி மாவட்டத்தின் உருத்திரபுரம்  கிராமத்தை வாழ்விடமாகவும் கொண்டு இளவயது முதலே சமூகப் பணிக்காக தன்னையும் தன் வாழ்நாள் முழுமையையும் அர்ப்பணித்து மறைந்த அமரர்.வைத்திலிங்கம் குகராஜா அவர்களின் வாழ்க்கைப் பாங்கு பலருக்கும் முன்னுதாரணமானது.
கிளிநொச்சி மாவட்டத்தில் குடியேற்றத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டபோது கதிரவேலு அப்புவுடன் இணைந்து பல கிராமங்களின் உருவாக்கத்திற்கு காரணமாக இருந்த இவரை ஒட்டுமொத்த உருத்திரபுரம் மண்ணைப் பிரதிபலிக்கக்கூடிய ஒரு தனி அடையாளம் என்றே கூறலாம். கூட்டுறவாளனாக, கரைச்சி தெற்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவனாக, கிளிநொச்சி மாவட்ட அகதிகள் புனர்வாழ்வு கழகத்தின் செயல் இயக்குனராக, இலக்கியவாதியாக, மேடைப் பேச்சாளனாக, ஆன்மீகவாதியாக, கல்வியாளனாக, சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதியாக அறியப்பட்ட இவர் இறுதியுத்தத்தின் பின்னர் இந்த மண்ணில் அடக்குமுறைகளும், அடாவடித்தனங்களும் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த, உரத்துப் பேசுவதற்கே உரிமை மறுக்கப்பட்டிருந்த 2010 களில் தமிழர்களின் உரிமை சார்ந்தும், உணர்வு சார்ந்தும், இன விடுதலை சார்ந்தும், தமிழ்த்தேசியம் சார்ந்தும், கொள்கைத் திடத்துடன் பயணித்திருந்தது வரலாறு.
அப்படிப்பட்டதொரு அடக்குமுறை நிறைந்திருந்த சூழலில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூர் அதிகார சபைத் தேர்தலில் கரைச்சி பிரதேசசபையின் வேட்பாளராக போட்டியிட்டு, பல தசாப்த காலங்களுக்கு பின்னர் கட்டமைக்கப்பட்ட கரைச்சி பிரதேசசபையின் கௌரவ தவிசாளராக ஒட்டுமொத்த மக்களாலும் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். சபை வலுவிலிருந்த நான்கு வருட காலமும் மக்களுக்கு ஆற்றியிருந்த தன்னலமற்ற பணியும், அரசாங்கத்தின் அடிவருடிக் கட்சிகளின் கொள்கையற்ற செயற்பாடுகளை எல்லாம் முறியடித்து சபையை நடாத்திச்சென்ற நிர்வாகத் திறனும், பொதுமக்களுடனும், உத்தியோகத்தர்களுடனும் அவர் கொண்டிருந்த நல்லுறவும், எதிர்த்தரப்பினர் மீது கூட கடுமை காட்டத் தெரியாத பண்பும், அக்காலப்பகுதியில் கட்சியின் மாவட்டக் கிளை அலுவலகம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை எதிர்கொண்டும், எதிர்த்தும் அவர் செயற்பட்ட விதமும், கட்சி மீதும், கட்சியின் கொள்கை மீதும் அவர் கொண்டிருந்த தீராக்காதலுமே பதவிநிலைகளைக் கடந்து, அவரை அறிந்த அத்தனைபேர் மனங்களிலும் ‘மணியண்ணையாய்’ அவர் நிலைகொள்ளக் காரணம்.
எப்போதும் சிரித்த முகம், மனைதைப் போலவே தோற்றத்திலும் பேணிவந்த வெண்மை, மனதாலும் பிறர்க்கு தீங்கு நினைக்காத கருணை உள்ளம், நேரிய சிந்தனையாற்றல், செயற்றிறன், இலக்கிய ஆர்வம், பேச்சுவன்மை, பணிவு, நிர்வாகத்திறன், இன, மொழிப்பற்று, சேவைநோக்கு, தன்னலமற்ற அரசியற் பார்வை என தனக்குத்தானே வரித்துக் கொண்ட வாழ்க்கைப் பாதையிலிருந்து சற்றும் பிறழாது வாழும் காலமெல்லாம் வாழ்வாங்கு வாழ்ந்திருந்த இவரது இழப்பு ஒரு தனிமனிதனின் இழப்பல்ல. ஒரு மாவட்டத்தினதும், ஒட்டுமொத்த மக்களினதும் உணர்வுகளோடு ஒன்றிக் கலந்திருந்த ஒரு தமிழ்த்தேசியப் பற்றாளனின் இழப்பு.
மறைந்தாலும் மக்கள் மனங்களிலெல்லாம் தன் சிந்தனையாலும், ஆற்றிச்சென்ற செயல்களாலும் என்றென்றும் நிறைந்திருக்கக்கூடிய அண்ணன் குகராஜா அவர்களின் ஆத்மா இறைபாதம் சென்றடைய பிரார்த்திப்பதோடு, அவரது இழப்பின் துயர்சுமந்து துடித்து நிற்கும் மனைவி, பிள்ளைகள், உறவினர், நண்பர்கள், சுற்றத்தாரின் துயரில் நாமும் பங்குகொள்கிறோம்.
கிளிநொச்சி மாவட்டக் கிளை,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (இலங்கை தமிழ் அரசுக்கட்சி)  – என்றுள்ளது.
Share the Post

You May Also Like