ஆளுமை ஆப்ரஹாம் சுமந்திரன் ஐயாவுடன் ஓர் மனந்திறந்த மன்னிப்பு உரையாடல்!

=================================

கல்முனை மக்களின் பிரதேச செயலகப் பிரச்சினை ஏதோ ஒரு வகையில் தற்காலிகமாக முடிந்திருக்கின்றது.

பல வருடங்களாக இரு சமூகமும் ஆறுதலாக அமர்ந்து இருந்து பேசித் தீர்க்கத் தயாராக இருந்த பிரச்சினையை சர்ச்சைக்குரிய பிக்குவும், பின் நின்றோரும் சட்டியிலிருந்து அடுப்பினுள் தள்ளி இரு சமூகங்களினதும் முகங்களில் கரியைப் பூசி விட்டுக் கலைந்து விட்டனர்.

ஆனாலும் இந்நிலையில் குறித்த போராட்டத்தின்போது நிகழ்ந்த ஒரு உருக்கமான நிகழ்வைப் பற்றிய பதிவே இதுவாகும்.

சத்தியாக்கிரக வாதிகளுடனான சந்திப்பு
==================================

கல்முனை பிரதேச செயலகப் பிரச்சினையைத் தீர்க்க அரச மட்டத்தின் சார்பில் கல்முனைக்கு வந்தவர்கள் மூவர்.

அதில் அமைச்சர் தயா கமகே, அமைச்சர் மனோ கணேசன், கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. சுமந்திரன் ஆகியோராகும்.

குறித்த பிரதிநிதிகளில் அமைச்சர் தயா கமகே முஸ்லிம் தரப்புடன் பேச்சு நடாத்த சத்தியாக்கிரகக் கூடாரத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்களுடன் வந்திருந்தார். அவரது உரை பிரச்சினைக்கான தீர்வைத் தெளிவாகச் சொல்லவில்லை. ஆயினும் ஹரீஸ் அவர்கள் அதனை ஒழுங்காக நெறிப்படுத்தினார்.
அங்கு கூடியிருந்த முஸ்லிம் மக்கள் வந்தவரைக் கண்ணியப்படுத்தி அனுப்பினர்.

உண்ணாவிரதிகளின் கூடாரத்தில்…
==============================

குறித்த இக்கூடாரத்திற்கு தமிழர் தரப்பு உண்ணாவிரதிகளைச் சந்தித்து சமரசம் பேசவென அமைச்சர் மனோவும், சுமந்திரன் ஐயாவும் சென்றிருந்தனர்.

அங்கு அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் வழமை போலவே உணர்ச்சி வசப்பட்டு தனது உரையில் முஸ்லிம்களைக் கண்டித்தார்.

அதேபோல மதகுருமாருடனும் மிக நெருக்கமாக இரகசியமாக உரையாடினார்.

ஆனால் மிக அமைதியாகவும், நிதானமாகவும் குறித்த கூடார சூழலை சுமந்திரன் அவர்கள் அவதானித்துக் கொண்டிருந்தார்.

சுமந்திரன் ஐயாவின் உரை
======================

அவர் உரையாற்றியபோது யாரையும் தாக்காது குறித்த பிரச்சினையைத் தெளிவுபடுத்தி அதற்காக இதுவரை அரச மட்டத்தில் எட்டப்பட்ட தீர்வை விளக்கமாக எடுத்துச் சொன்னபோது முஸ்லிம்கள் தொடர்பான விடயங்களில் சகோதரர்கள் என்றும்; சகோதர சமூத்துடன் பேச வேண்டும் எனவும் மிகவும் கண்ணியமாக முஸ்லிம் சமூகத்தைப் பற்றிய கருத்துக்களை முன்வைத்தாா்.

அவரது இவ்வுரையானது இவ்வுண்ணாவிரதத்தை ஏற்பாடு செய்தவர்களுக்கு ஏற்க முடியாது போனதால் அதன் பின்னர் அங்கு பல துரதிஷ்டமான நிகழ்வுகள் இடம்பெற்றன.

எனினும் அவரதது வெளிப்படையான பேச்சு எம்போன்ற பல நடு நிலையாளர்களைக் கவர்ந்திருந்தது. இக்கட்டான அந்நேரத்திலும் இனவாதம் பேசாத அவரது அரசியல் ஆளுமை அத்துறைசார் பலருக்கும் ஓர் முன்னுதாரணமான ஒரு வரலாற்றுப் பதிவு எனின் மிகையாகாது.

கல்முனை முஸ்லிம்களின் வருத்தமும் வரவேற்பும்
===========

மதிப்புக்குரிய சுமந்திரன் எம்.பி. அவர்களே..!

ஒரு சமூகம் என்ற வகையில் முஸ்லிம்கள் 21/4 உயிர்த்தெழு தாக்குதல்களால் மிகவும் மனம் நொந்து போயிருந்த அந்த நேரத்தில் எங்களுக்காக வாதிட்டுக் காத்த கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களைப் போல் அதே கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த நீங்கள். தமிழ் பேசும் உங்கள் கிறிஸ்தவ சமூகத்துடனான இன மத நல்லுறவை விரும்பி நிலைநிறுத்துவதற்கு இலங்கை முஸ்லிம்களான நாம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு பிரதேசத்திற்கு நீங்கள் வந்தபோது குறித்த மோசமான நிகழ்வு இடம்பெற்றதானது, முஸ்லீம்களான எங்களுக்கும் மிகையான மன வேதனையைத் தருகின்றது. அதற்காக நாமும் மிகவும் மனம் வருந்துகின்றோம்.

அது மட்டுமல்ல, தமிழர் தரப்பின் ஆயுதப் போராட்டத்தின் இழப்பு, தமிழ் மக்களின் நிரந்தர உரிமைக்கான தீர்வுக்காக ஜனநாயக வழியில் அயராதுழைக்கும் நீங்கள் இலங்கையில் மட்டுமன்றி சர்வதேச ரீதியாகவும் நன்கறியப்பட்ட மிகவும் பிரபலமான ஓர் இராஜதந்திரி.

மட்டுமல்ல உங்களது கல்வித்தகமைகள் தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் என்ற வகையில் நாங்களும் பெருமைப்படும் ஒன்று.

எங்களாலும், எங்கள் சமூகத் தலைவர்களாலும் செல்லவும் முடியாத பல இடங்களுக்குச் சென்று தமிழ் பேசும் இலஙகை மக்கள் சமூகத்திற்காக நீங்கள் குரல் கொடுத்துள்ளீர்கள். இதை எமது நாடாளுமன்றத்திலும் நாம் பலமுறை பார்த்திருக்கின்றோம்,

அந்த வகையில் கல்முனையில் நடந்தேறிய துரதிஷ்டமான அந்நிகழ்வானது அப்பிரதேச வாழ் மக்கள் என்ற வகையில் எங்களையும் வெகுவாகப் பாதித்திருக்கின்றது. அதற்காக எமது முஸ்லிம் சமூகத்தின் ஆழமான மன வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஆனால் இப்போது உங்களுக்கும் விளங்கி இருக்கும், குறித்த கூடாத கூடாரவாதிகளுடன் இன உறவைப் பேண முஸ்லிம் சமூகம் எவ்வளவு முட்டுக் கட்டைகளை எதிர்கொண்டிருக்கும் என்று.

இனவாத தேரர்களுக்கு காவிப் பந்தல் அமைத்து விரித்து வரவேற்ற இவர்கள், தமக்காக தமிழ் பேசும் இனத்திற்காக வாழ் நாள் பூராகப் போராடும் உங்களையொத்த உயர் தமிழர் தலைவர்களை வாய்க்கு வந்தபடி எல்லாம் திட்டித் தீர்த்திருக்கின்றனர்.

இறுதியாக ஐயா…!

உங்கள் ஆளுமையை அறிந்தவர்கள் நாங்கள். உங்களைப்போன்ற தலைவர்கள் எங்களுக்குள் இல்லை என ஏங்குபவர்கள் நாங்கள். அன்றைய நாளில் முஸ்லிம்களின் சத்தியாக்கிரகக் கூடாரப் பக்கம் நீங்கள் வந்திருந்தால் உங்களுக்கு எமது மக்கள் வழங்கும் ஆதரவைக் கண்டு வியந்திருப்பீர்கள்.

உங்களோடு பேசவும், உங்களை நேரில் பார்க்கவும் நிறையப் பேர் எதிர்பார்த்திருந்தோம். ஆனால் உங்கள் சமூகம் மீது உங்களுக்கிருந்த அதீத அக்கறை காரணமாக அதைத் தவிர்ந்து விட்டீர்கள்.

ஆனாலும் ஐயா, என்றோ அரும்பிய தமிழர் முஸ்லிம் உறவின் இணைப்பினால் “அண்ணன் அமிர்தலிங்கம் ஈழம் பெற்றுத் தராவிட்டாலும் தம்பி அஷ்ரஃப் பெற்றுத் தருவான் …….” என தமிழரசுக் கட்சியில் மறைந்த எம் மாதலைவர் அஷ்ரஃப் அவர்கள் சங்கமித்திருந்தபோது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டை மாநாட்டு மேடையில் ஏறி நின்று முழங்கிய அந்த வார்த்தைக்கு மதிப்பளிக்கும் எத்தனையோ பேர் எங்கள் மத்தியில் இன்னமும் இருக்கின்றனர் என்பதை நீங்கள் மறந்து விட வேண்டாம் எனவும் வினயமாக வேண்டுகின்றோம்.

எனவேதான் உண்மையான இன உறவை விரும்பும் நாம் இன்றும் உங்களை கண்ணியத்துடன் மதிக்கின்றோம்.

ஒரு சில கூலிக்கு மாரடிக்கும் உணர்ச்சிப் போராளிகள் கூக்குரலிட்டதற்காக கல்முனை மண்ணில் நம்பிக்கையுடன் கால் பதித்த நீங்கள் கவலை கொள்ளாதீர்கள்.

இன்னுமொரு தருணத்தில் எங்களிடம் மீண்டும் வாருங்கள் ஐயா! எங்கள் முஸ்லிம் சமூக மக்கள் எப்போதும் உங்களை அன்புடன் ஆரத்தழுவி வரவேற்பதற்காய் என்றென்றும் காத்திருக்கின்றோம்,

காலம் நிச்சயம் கனியும்; நம் கனவுகளும் நிதர்சனமாய் நிறைவேறும்
………………………………
மூலக்கருத்தாக்கம்… நன்றியுடன்
MUFIZAL ABOOBUCKER
Department of Philosophy
University of Peradeniya
23:06:2019

Share the Post

You May Also Like