ஜனாதிபதியின் அக்கறையின்மையே தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு பிரதான காரணம் – சிறிநேசன்

பாதுகாப்பு விடயத்தில் ஜனாதிபதியின் போதிய அக்கறையின்மையே தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு பிரதான காரணம் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்டூரில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘இன்று ஊடகங்களில் பேசுபொருளாக இருக்கின்ற மரணதண்டனை விடயத்திற்கு ஜனாதிபதி அனுமதியளித்திருக்கிறார். அதேவேளை மரணதண்டனை இடம்பெறக்கூடாதென்று 12 சிவில் வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன.

மரணதண்டனை போதுமானதா அல்லது சீர்திருத்த தண்டனை தேவையா, ஆயுள்தண்டனையாகத்தான் அமையவேண்டுமா என்ற கேள்வி எழுகின்றது. ஜனாதிபதியின் இந்தப்பரீட்சையில் யார்வெல்லப்போகின்றார்கள் என்பது நீதிமன்ற தீர்ப்பில்தான் இருக்கின்றது.

கடந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பின் பொலிஸ்மா அதிபர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரை உடனடியாக பதவி விலக பணித்திருந்தார். இதன்பின் கட்டாய விடுப்பு கைதும் இடம்பெற்று சிறையிலடைக்கப்பட்டனர்.

கடந்தகாலத்தில் பாதுகாப்பில் காணப்பட்ட பாரிய ஓட்டை காரணமாக மனித குண்டுவெடிப்பில் 250 இற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இதில் யார் குற்றம்செய்திருக்கிறார் என்ற விடயம் தொடர்பாக ஜனாதிபதிக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும், ஜனாதிபதிக்கும் பொலிஸ்மா அதிபருக்கும் பலத்த போட்டிகள் நிலவுகின்றன.

இதனைத்தொடர்ந்து நாடாளுமன்ற தெரிவிக்குழு முன்னிலையில் பிரசன்னமாகியிருந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் நாங்கள் பாதுகாப்பு விடயங்கள் சம்பந்தமாக ஜனாதிபதியிடம் எடுத்துக்கூறியிருக்கிறோம்.

பிரதமர், பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் பாதுகாப்பு சம்பந்தமான கூட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாது என பல தடவை ஜனாதிபதி கூறியதன் காரணமாகவே இந்த கோரச் சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.

பாதுகாப்பு விடயத்தில் ஜனாதிபதிக்கு போதிய அக்கறையின்மையே தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு பிரதானகாரணம். ஜனாதிபதி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், பிரதமர், பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இல்லாது இடம்பெறும் பாதுகாப்பு சம்பந்தமான கூட்டத்தொடரே நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதான காரணியாக கருதவேண்டியுள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.

Share the Post

You May Also Like