தீவக பட்மின்டன் கழகத்துக்கு உபகரணங்கள்!

தீவுப்பகுதியில் பட்மின்டன் ( Badminton ) விளையாட்டினை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை தீவக பட்மின்டன் கழகத்தினர் மேற்கொண்டுவருகின்றனர் . அதனை முன்னிட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் உபதலைவரும் கட்சியின் தீவக செயற்பாட்டாளருமாகிய கருணாகரன் குணாளனின் பங்களிப்பாக ரூபாய் இருபதினாயிரம் பெறுமதிமிக்க பட்மின்டன் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இதுதொடர்பில் கருத்துத் தெரிவித்த கருணாகரன் குணாளன் –

தீவகத்தில் பெண்கள் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி செயற்பாடுகளில் பங்குபற்றுவது மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது. சாதாரண தரத்தோடு இடையில் கல்வியை நிறுத்திய பெண்களுக்கோ அல்லது வேலைவாய்ப்பு இன்றி காணப்படுகின்ற பெண்களுக்கான வழிகாட்டும் செயற்பாடுகளோ , பொழுதுபோக்கு ஊக்குவிப்புக்களோ பெரிதும் நடைமுறையிலில்லை . இதன் காரணமாக கலாசார , சமூக ரீதியிலான முறைகேடுகள் கூட அதிகளவில் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் பெரிதும் காணப்படுகின்றன . இந்நிலை மாற்றப்படுவது காலத்தின் கட்டாயம் .

பெண்களுக்கு மாத்திரமல்ல நடுத்தர வயது மதிக்கத்தக்க ஆண்களுக்கும் , பாடசாலை மாணவர்களுக்கும் உத்வேகம் அளிக்கக்கூடிய ஓர் சிறப்பான விளையாட்டே பட்மின்டன் !! குறைந்த செலவில் , குறைந்த நிலப்பரப்பில் இவ்விளையாட்டுக்கான மைதானங்களை அமைத்திடமுடியும் . தீவுப்பகுதியெங்கும் பட்மின்டன் மைதானங்களை அமைக்கும் பணிகளை தீவக பட்மின்டன் கழகம் ( Islands Badminton Club ) ஆரம்பித்துள்ளது .

இதன் முதல்கட்டமாக வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் அவர்களின் நிதியுதவியில் புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தில் மைதானமொன்று அமைக்கப்பட்டுள்ளது . சமூக நலன் விரும்பிகள் தீவக பட்மின்டன் கழகத்தினரோடு கைகோர்த்து செயற்பட்டால் தீவகத்தில் சிறந்த பட்மின்டன் விளையாட்டு வீர, வீராங்கனைகளை உருவாக்கிடலாம் – – என்றார்.

Share the Post

You May Also Like