அரசாங்கத்திற்கு எதிரான பிரேரணை – கூட்டமைப்பு உறுப்பினர்கள் கலந்துரையாடல்

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு கூட்டத்தில் இந்த விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளன.

மக்கள் விடுதலை முன்னணியினால் (ஜே.வி.பி.) கொண்டுவரப்பட்ட அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து நாளை மற்றும் நாளை மறுதினம் விவாதங்களை நடத்துவதற்கு கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே இந்த விடயம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக கூட்டமைப்பு ஒன்றுகூடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான புலனாய்வு தகவல்களைக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தவறியமை மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட இன வன்முறையை தடுக்க தவறியமை என்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 6 பேரின் கையொப்பத்துடன் மே மாதம் அக்கட்சி சார்பாக நம்பிக்கையில்லா தீர்மானம் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share the Post

You May Also Like