சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில்  வீழ்ந்தாயடா விக்கி…!

வடக்கு மாகாண அவையின் முதலாவதும் இறுதியுமான முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பதவியில் இருந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய சகலதையும் உதறித்தள்ளி, பன்றியுடன் சேர்ந்த பசுவாகி, தீயனவற்றை மட்டுமே பதவிமோகத்தால் சிந்திக்கலானவராகி, தன் கூடவே தீயவர்களையும், துஷ்டர்களையும், கெட்டவர்களையும் கொண்டு செயற்பட்டார்.

இன்றைக்கு டெனீஸ் வழக்கில் மூக்குடைபட்டு குப்புற வீழ்ந்து கிடக்கின்றார். இவர் கூடவே இவரை தீய பாதையில் கொண்டுசென்ற துஷ்டர்களான கஜேந்திரகுமாரோ, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். போன்ற அமைப்புகளைச் சேர்ந்த முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களோ, இவரால் புத்திஜீவிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையோ எவையும் இன்று இவருடன் இல்லை. பாவம் ஐயா!

இவர் முழுக்கமுழுக்க நம்பி, குற்றவாளி என முதல்வரால் நியமிக்கப்பட்ட குழு தீர்ப்பளித்த முன்னாள் விவசாய அமைச்சர் ஐங்கரநேசனை, அவரை குற்றவாளி என்று சொல்லக்கூட முதல்வரின் மனம் ஏவவில்லை. முன்னாள் நீதியரசர் – நீறணிந்த சைவப்பழம் – போலி மாயையில் மூழ்கியதால் ஒரு முத்திரை குத்தப்பட்ட குற்றவாளியாகிய ஐங்கரநேசனை பதவியைத் தியாகம் செய்யும்படி கூறினார். இந்தத் தீயவர்களை நம்பி நல்லவர்களான – சத்தியத்தின்வழிநின்ற சத்தியலிங்கத்தையும், நேர்மை நெறிநின்ற டெனீஸையும் – வேண்டுமென்றே கட்டாய லீவில் அனுப்பினார்.

விக்கி ஐயா, யார் யாரை காப்பாற்ற நினைத்தாரோ, எந்தத் தகுதியுமில்லாமல் தனக்குப் பிடித்தவரை அமைச்சராக்கினாரோ இன்று அநத ஐங்கரத்தாரும், அனந்தியும் தனித்தனிக் கட்சி ஆரம்பித்து பதவி மோகத்தில் உளறுகின்றார்கள்.

இன்று தீர்ப்பு! தீர்ப்பு வரும்போது ஐயா பதவியில் வேறு இல்லை. தர்மத்தின் வாழ்வை சூது கவ்வினாலும் தர்மம் மறுபடியும் வென்று ஓர் வரலாற்றுத் தீர்ப்பு வரையப்பட்டுள்ளது. பாவம் ஐயா! வழக்குச் செலவையும் டெனீஸூக்குச் செலுத்தவேண்டுமாம். இதைவிட பல சட்டச் சிக்கல்களும் தீர்பில் கூறப்பட்டுள்ளன.

கட்டாய லீவில் அனுப்பப்பட்ட டெனீஸ், சத்தியலிங்கம் இருவரையும் அவ்வாறு அனுப்பும் அதிகாரம் முதல்வருக்கு இல்லை. அவர்கள் லீவில் அனுப்பப்பட்ட உடனேயே அவர்களின் பதவிகளுக்கு முதல்வரின் அல்லக்கைகள் நியமிக்கப்பட்டனர். தற்போது அந்த அதிகாரம் முதல்வருக்கு இல்லை என்று தீர்ப்பு எழுதப்பட்டதால் – அந்த அதிகாரம் முதல்வருக்கு இல்லை என்று மன்று உத்தரவிட்டதால் – அவர்கள் நீக்கப்பட்டது முறையற்றது என்பதால் – மாகாணசபையின் இறுதிக்காலம்வரை சட்டதிட்டங்களுக்கு அமைவாக அவர்களே அமைச்சர்கள். அதை நீதிமன்றமே தெரிவித்துவிட்டது.

அது அவ்வாறிருக்க, இறுதி 14 மாதங்கள் சட்டப்படி அமைச்சர்களாயுள்ள சத்தியலிங்கமும், டெனீஸூம் சாதாரண உறுப்பினர்களின் கொடுப்பனவையே பெற்றார்கள். அவர்கள் அமைச்சர்களுக்குரிய எந்தச் சலுகைகளையும் முதல்வர் லீவில் அனுப்பிய காலம் முதல் அனுபவிக்கவில்லை. அமைச்சர்களுக்குரிய உத்தியோகத்தர்கள் எவரும் – கிட்டத்தட்ட 15 உத்தியோகத்தர்கள் என எண்ணுகின்றேன் – அந்தச் சம்பளத்தைப் பெறவில்லை. இவை அனைத்தும் முதல்வர் ஊடாக – அவர் பதவியிழந்து, மீண்டும் வருவதற்காக ஒரு கட்சி ஆரம்பித்து, கடும் தேசியம் முழங்கிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் – ஈடுசெய்யப்படுமா?

சரி, முதல்வரால் முறையற்ற விதத்தில் – சட்டத்துக்கு முரனாக – விளையாட்டுக்கு – அமைச்சர்கள் ஆக்கப்பட்டவர்கள் சர்வேஸ், அனந்தி, குணசீலன். இவர்கள் அனுபவித்த அத்தனை சலுகைகள், பெற்ற அமைச்சுச் சம்பளங்கள், அவர்கள் தமது கடமைகளுக்கென நியமித்த அத்தனை ஆளணியினர் அனைத்தும் போலியானதும் பொய்யானதுமே. அதற்காக மாகாண சபை ஊடாக செலுத்தப்பட்ட மக்கள் வரிப்பணத்ம் என்பவற்றுக்கு முதல்வர் விடை பகர்வாரா?

பாவம் ஐயா! கிடைத்ததை சரியாக நடத்தமாட்டாமல் கூத்தாடி, கூத்தாடி போட்டுடைத்துவிட்டு, இப்ப மீண்டும் ஓர் எழுக தமிழுக்கு ஆயத்தமாகிறார்! இதுக்குவேறை சுரேஸர் ஆதரவுக் கூக்குரலிடுகிறார். அவர் உண்மையில் நல்லவர். தம்பியை அமைச்சராக்கின நன்றிக்காக ஐயாவோடை கிடந்து செருப்பாய் தேய்கிறார். மக்கள் இந்த மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காவிட்டால் சரி…..!

தெல்லியூர் சி.ஹரிகரன்

Share the Post

You May Also Like