கூட்டமைப்பின் பெரும்பான்மையான யோசனைகளுடன் நாம் இணங்கிப் போயிருக்கின்றோம் – யாழில் ரணில்!

அதிகாரப் பகிர்வு தொடர்பாக அரசமைப்பு பேரவை தனது அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ள கொள்கைக் கோட்பாடே தமிழ் மக்களின் எதிர்பார்ப்புத் தொடர்பான ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரே நிலைப்பாடு என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ். குருநகர் பகுதியில் நவீன வசதிகளுடன் அமையவுள்ள புதிய துறைமுகத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் நேற்று(வியாழக்கிழமை) கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘அரசியல் தீர்வை நோக்கிய எமது பயணத்தில் பொருளாதார மீட்சியும் எழுச்சியும் ஒரு முக்கிய அம்சமாகும்.

புரிந்துணர்வு நடவடிக்கையில் ஓரளவு முன்னேறியிருக்கின்றோம். அதனால், இலங்கையர் என்று நம்மை நாங்கள் அனைவரும் அடையாளப்படுத்தும் ஒரு பொதுமைப்பாடு ஓரளவு மீண்டும் மேலோங்கியிருக்கின்றது என்பேன்.

அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதுவும் அதை நாம் எப்படி முன்கொண்டு செல்லப்போகின்றோம் என்பதுவும் தான் இப்போது முக்கிய விடயங்கள். காணப்படும் தீர்வு இறுதியில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இது விடயத்தில் எனது கட்யின் நிலைப்பாடு யாது என்று கேட்கப்பட்டுள்ளது. நாட்டின் இறைமை, ஒருமைப்பாடு ஆகியவை தொடர்பாக சுமந்திரனுக்கும் மாவை சேனாதிராஜாவுக்கும் உள்ள அதே சிரத்தை எமக்கும் உண்டு.

இந்த நாட்டின் தமிழினம் இலங்கை ஜனநாயகக் குடியரசு என்ற கட்டமைப்புக்குள் சமத்துவமாக, கௌரவமாக, சுயமரியாதையுடன் தங்களின் விடயங்களைத் தாங்களே தீர்மானித்து முன்னெடுக்கக்கூடியதாக வாழ வேண்டும் என்பதே எனது நம்பிக்கையாக உள்ளது.

அதற்காகத் தான் அதிகாரப் பரவலுக்கான ஏற்பாடுகளுக்குரிய அரசமைப்புப் பேரவை நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்தோம். அதில் நாங்கள் கணிசமான தூரம் முன்னேறியுள்ளோம்.

அங்கு கூட்டமைப்பு முன்வைத்த பெரும்பான்மையான யோசனைகளுடன் நாம் முழு அளவில் இணங்கிப் போயிருக்கின்றோம்.

அதிகாரப்பரவலாக்கலுக்கான கொள்கைகள், கோட்பாடுகள் இப்போது அரசமைப்புப் பேரவையில் எழுத்தில் உள்ளன. நான் தான் அந்தக் குழுவின் தலைவன். அந்தக் கொள்கைக் கோட்பாடு தான் எங்கள் நிலைப்பாடு. அதில் உறுதியாக இருக்கின்றோம்.

இப்போது எங்களுக்கு உள்ள பிரச்சனை ஒன்று தான். அதை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மையை நாங்கள் எப்படிப் பெறுவது என்பது தான் அது. அதை மக்கள் எமக்குத் தர வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

Share the Post

You May Also Like