எதிர்வரும் தேர்தல் இடைக்கால அறிக்கை பற்றிய கருத்துக் கணிப்பாகும்

விடிய விடிய இராமர் கதை விடிந்த பின் இராமனுக்கு சீதை என்னமுறை கேட்டவன் கதைபோல இடைக்கால அறிக்கை வெளிவந்த பின்னர் அது ஒற்றையாட்சியைத்தான் பரிந்துரைக்கிறது என்று சிலர் வாதிடுகிறார்கள். உண்மை என்னவென்றால் இடைக்கால அறிக்கை சிறிலங்காவுக்குப் பொருந்தாது என அந்த இடைக்கால அறிக்கையே கூறுகிறது. அதே சமயம் அது முழுமையான இணைப்பாட்சி அரசியலையும் பரிந்துரைக்கவில்லை.

இடைக்கால அறிக்கை மத்திய அரசுக்கும் மாகாணத்துக்கும் இடையில் எவ்வாறு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதைச் சொல்கிறது. இணைப்பாட்சி என்ற சொல் பயன்படுத்தப்படா விட்டாலும் அத்தகையை அரசியல் முறைமையை இடைக்கால அறிக்கை பரிந்துரை செய்கிறது. அதாவது இணைப்பாட்சிக்குரிய குணாம்சங்கங்களை அல்லது சுபாவங்களை இடைக்கால அறிக்கையில் காணக் கூடியதாக இருக்கிறது.

ஒரு யாப்பில் இரண்டு அதிகார மையங்கள் காணப்பட்டால் அது இணைப்பாட்சியைக் குறிப்பதாக இருக்கும். இடைக்கால அறிக்கையில் சட்டம் இயற்றும் அதிகாரம் தேசிய அளவிலும் மாகாண அளிவிலும் இருக்கின்றது. மாகாண நிரலிலுள்ள விடயங்கள் தொடர்பாக மாகாண சபையினால் சட்டமாக்கப்பட்ட நியதிச் சட்டங்களை மத்திய அரசு அலட்சியம் செய்ய முடியாது.

ஐக்கய நாடுகள் அவையில் 193 நாடுகள் உறுப்புரிமை வகிக்கின்றன. அவற்றில் பெரும்பான்மை நாடுகள் (முடியாட்சி நாடுகள் உட்பட 162 ) ஒற்றையாட்சி நாடுகளே. இருபத்தேழு நாடுகள் (ஒக்தோபர், 2013 வரை) இணைப்பாட்சி நாடுகள். ஐந்து நாடுகள் மட்டுமே (அமெரிக்கா, கனடா, சோவியத் குடியரசு, ஐரோப்பிய ஒன்றியம், பெல்ஜியம்) கூட்டாச்சி அரசியலமைப்பைக் கொண்ட நாடுகள்.

பெரிய நாடுகளான இந்தியா (29 மாநில அரசுகள் 7 யூனியன் பிரதேசங்கள்) ஐக்கிய அமெரிக்கா (50 மாநில அரசுகள்) கனடா (10 மாகாணங்கள் 3 பிரதேசங்கள்) நைசீரியா (36 மாநில அரசுகள் ஒரு இணைத் தலைப் பிரதேசம்) உருசியா (22 குடியரசுகள் 46 மாகாணங்கள்) ஆர்ஜெந்தீனா (23 மாகாணங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்கங்கள்) பிரேசில் 26 மாநில அரசுகள் ஒரு இணை மாவட்டம்) மலேசியா ( 13 மாநில அரசுகள் 3 இணை பிரதேசங்கள்) ஆகும். இவைகள் இணைப்பாட்சி அல்லது கூட்டாச்சி நாடுகள் ஆகும்.

ஒரு நாட்டின் அரசியல்யாப்பு இன்னொரு நாட்டின் அரசியல்யாப்புப் போல இருப்பதில்லை. ஒவ்வொன்றும் அந்த நாட்டு மக்களது அரசியல் வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்றவற்றுக்கு அமைய வேறுபடுகின்றன.

ஒற்றையாட்சி முறைமையில் இணைப்பாட்சிக்குரிய அம்சங்களும் இணைப்பாட்சி முறைமையில் ஒற்றையாடசிக்குரிய அம்சங்களும் காணப்படுகின்றன. அப்படியான நாட்டுக்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்தியக் குடியரசு.பொதுவாக ஒரு நாட்டின் அரசியல் அமைப்பை ஒற்றையாட்சி, இணைப்பாட்சி, கூட்டாச்சி என மூன்றாகப் பட்டியல் இடலாம்.இரண்டின் வரைவிலக்கணத்துக்குள் அடங்காது சில நாடுகளது அரசியல் முறைமை கூட்டாச்சியாகவும் காணப்படுகின்றன. இதற்கு நல்ல எடுத்துக்காட்டு அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள்.

ஏற்கனவே சுதந்திரநாடாக உள்ள நாடுகள் பொருளாதாரம், பாதுகாப்புக் காரணமாக ஒன்று சேருகின்றன. கீழ்க்கண்ட வரைபடம் ஒற்றையாட்சி, இணைப்பாட்சி மற்றும் கூட்டாச்சிக்கு இடையயே உள்ள அடிப்படை வேற்றுமையைக் காட்டுகிறது.

ஒற்றையாட்சி, இணைப்பாட்சி, கூட்டாச்சி ஆகிய மூன்றையும் பிரித்துக் காட்டுவது ஒரு நாட்டின் மத்திய அரசின் பங்கே. ஒற்றையாட்சியில் முழு அல்லது கூடுதல் அதிகாரத்தை மத்திய அரசாங்கம் தனது கையில் வைத்திருக்கும். ஒற்றையாட்சியில் மத்திய அரசு எல்லா அதிகாரங்களையும் தனது கையில் வைத்திருக்கும். ஒரே சட்டம் நாடு முழுதும் நடைமுறைப்படுத்தப்படும். இன, மொழி வேறுபாட்டை அது கணக்கில் எடுப்பதில்லை. இலங்கையில் 1987 வரை ஒற்றையாட்சி அரசியல்முறைமையே இருந்தது.

யூலை 1987 இல் இலங்கை அரசு கொண்டுவந்த 13 ஆவது சட்ட திருத்தம் நடைமுறையில் இருந்த ஒற்றையாட்சி அரசியல் யாப்பை கேள்விக்கு உட்படுத்தியது. ஒன்பது நீதியரசர்களை கொண்ட உச்ச நீதிமன்றம் 13 ஆவது சட்ட திருத்தம் ஒற்றையாட்சி அரசியல்யாப்பை மீறவில்லை எனவே பொதுவாக்கெடுப்பு தேவையில்லை என 5 நீதியரசர்கள் தீர்ப்பளித்தார்கள். நால்வர் மீறுகிறதாகவும் பொது வாக்கெடுப்பு தேவையென்றும் தீர்ப்பளித்தார்கள் (http://inioru.com/13%E0%AE%B5). இப்போது உருவாகிக் கொண்டிருக்கும் அரசியல்யாப்பு செல்லுபடியாவதற்கு பொதுமக்கள் வாக்கெடுப்புக்கு மத்திய அரசு விட இருக்கிறது. அதாவது புதிய அரசியல்யாப்பு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகளோடும் பொது வாக்கெடுப்பில் சாதாரண பெரும்பான்மையோடும் நிறைவேற்றப்பட வேண்டும்.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையே நடந்து வந்த உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வந்து இனப்பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக 1987ஆம் ஆண்டு யூலை மாதம், அப்போதைய பிரதமர் இராஜீவ் காந்திக்கும் இலங்கை அதிபர் ஜேஆர் ஜெயவர்த்தனேவுக்கும் இடையே ஒரு உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி, தமிழர்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வகிக்க ஏற்ற வகையில், இலங்கை அரசியல் சட்டத்தில் திருத்தம் (13ஏ) செய்யப்பட்டது.

மே 19, 2009 இல் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்த போது இலங்கை வந்த ஐநா அவை செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்களிடம் இனச் சிக்கலுக்கு தீர்வுகாண தமிழ்மக்களுக்கு கூடிய ஆட்சி அதிகாரம் கொடுக்கப்படும் படும் பொருட்டு13 ஏ + சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும் என மகிந்த இராசபக்சா உறுதிமொழி கூறினார். ஆனால் அவர் கூறியபடி எதையும் செய்யவில்லை. தான் 13ஏ + என்று சொன்னது மேல்சபை ஒன்றைக் குறிப்பிட்டது என விளக்கம் அளித்தார்.

வரலாற்றை திரும்பிப் பார்த்தால் இலங்கைத் தீவு முழுவதையும் ஒரு குடையின் கீழ் ஆண்ட மன்னர்கள் இரண்டொருவர்தான். அதில் முதலாம் பராக்கிரமபாகு ஒருவன். பழங்காலம் தொட்டு இலங்கை இராசரட்டை, மாயரட்டை, உருகுணரட்டை என்ற பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. போர்த்துக்கேயர் கிபி 1505 இல் இலங்கையில் காலடி எடுத்து வைத்தபோது வடக்கே யாழ்ப்பாண இராச்சியம், தென்மேற்கே கோட்டை இராச்சியம் மத்தியில் கண்டி இராச்சியம் என மூன்று இராச்சியங்கள் இலங்கையில் இருந்தன. கண்டி இராச்சியத்தைத் தவிர யாழ்ப்பாணம் மற்றும் கோட்டை இராச்சியங்களைக் கைப்பற்றிய போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் அவற்றை தனித்தனியே ஆண்டார்கள். ஒன்றாக்கவில்லை. பிரித்தானியர்கள்தான் நிருவாக வசதிக்காக மூன்று இராச்சியங்களையும் கிபி 1833 இல் ஒன்றாக இணைத்தார்கள்.

டொனமூர் ஆணைக்குழுவின் பரிந்துரைப்படி நடைமுறையில் இருந்த இன அடிப்படையிலான பிரதிநித்துவம் ஒழிக்கப்பட்டு ஒருவருக்கு ஒரு வாக்கு என்ற அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டது. 1931 இல் சட்ட சபைக்கான தேர்தல் நடந்தபோது குடித்தொயில் பெரும்பான்மை பலத்தைக் கொண்டிருந்த சிங்களவர் கைக்கு ஆட்சி அதிகாரம் சென்று சேர்ந்தது. அதுவரை காலமும் சிங்களவர் – தமிழர்கள் என இருசாராரும் தங்களை இலங்கையர் என அடையாளம் வைத்துக் கொண்டிருந்தனர். சோல்பரி ஆணைக்குழு ஒரு ஆள் ஒரு வாக்கு என்ற கோட்பாட்டை உறுதி செய்தது. ஜிஜி பொன்னம்பலத்தின் 50:50 கோரிக்கை செயற்கையான பெரும்பான்மையை உருவாக்குகிறது அது சனநாயகத்துக்கு மாறானது என சோல்பரி ஆணைக் குழு அதனை நிராகரித்தது.

1947 இல் நடந்த தேர்தலில் 95 இருக்கைகளில் சிங்களவர்களுக்கு 68 இருக்கைகள் கிடைத்தன. இலங்கைத் தமிழர்களுக்கு 13, இந்தியத் தமிழர்களுக்கு 8, முஸ்லிம்களுக்கு 6 கிடைத்தன. இதன் மூலம் அதிகார பலத்தில் சிங்கள – பவுத்தர்களின் கையோங்கியது. 1965 இல் நாடற்ற 525,000 மலையகத் தமிழர்கள் இந்தியாவுக்கு நாடு கடத்தப் பட்ட போது சிங்களவரின் குடித்தொகை 69.41 விழுக்காட்டில் (1946) இருந்து 74.90 விழுக்காடாக (2012) அதிகரித்தது. அதே சமயம் மலைநாட்டுத் தமிழர்களின் குடித்தொகை 11.73 விழுக்காட்டில் இருந்து 4.12 விழுக்காடாகக் குறைந்தது. சுதந்திரத்தின் போது 22.75 விழுக்காடாக இருந்த தமிழர் விழுக்காடு (மலைநாடு, வடக்கு, கிழக்கு) இப்போது (2012) 15.27 விழுக்காடாக் குறைந்துவிட்டது. கிழக்கு மகாணத்தில் உள்ள 3 மாவட்டங்களில் ஒன்றில் (மட்டக்களப்பு 74.68 விழுக்காடு) மட்டுமே தமிழர்கள் பெரும்பான்மை. எஞ்சிய இரண்டு மாவட்டங்களிலும் தமிழர்கள் சிறுபான்மை ஆகும்.

1931 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை பெரும்பான்மை சிங்கள-பவுத்தர்களால் ஆளப்படுகிறது. முழுநாடும் தங்களுக்கே சொந்தம் என்கிறார்கள். இந்தச் மகாவம்ச சிந்தனையே இனச் சிக்கலுக்கு தீர்வு காண இடையூறாக இருக்கிறது.

மாகாணசபைகளுக்கான அதிகாரங்களைக் கூட்டினால் மட்டுமே தமிழர்கள் தங்களது வரலாற்று வாழ்விடத்தில் பேரளவு சுதந்திரத்தோடு வாழலாம். எதிர்வரும் தேர்தல் இடைக்கால அறிக்கை பற்றிய கருத்துக் கணிப்பாகும். தமிழ்மக்கள் ததேகூ க்கு வாக்களித்து அதன் கைகளைப் பலப்படுத்த வேண்டும். அப்போதுதான் புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் வெற்றிபெறும்.

Share the Post

You May Also Like