தந்தை செல்வாவின் கடைசிப் பேச்சு

எஸ். ஜே. வி.: 120ஆவது பிறந்த தினம்

கடைசிப் பேச்சு

“நேற்று நான் பேசும்போது நீர் இருந்தீரா?’’
பெரியவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் கேட்டார்.
“ஓம், சேர்’’ என்றேன்.
“நான் பேசியது துலாம்பரமாக கேட்டதா?’’
“ஓம், சேர். தெளிவாக கேட்டது.’’ – நான் சொன்னேன்.
“சிலவேளைகளில் நான் பேசுவது தெளிவாக கேட்காது.’’ – அவர் சொன்னார்.
“இது தெளிவாக கேட்டது. எல்லோரும் உங்கள் பேச்சை உன்னிப்பாக கேட்டார்கள்.’’ – நான் சொன்னேன்.
“நானும் கவனித்தனான்; நான் பேசும்போது ஜே. ஆர். எல்லோரும் ‘இயர் போனை’ எடுத்து நான் பேசுவதைக் கேட்டார்கள்.’’ – அவர் சொன்னார்.
– எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது, இவற்றையெல்லாம் அவர் அவதானித்திருக்கிறாரே என்பதை நினைக்க.

“நான் பேசியது சரிதானே, நான் இரண்டு பிரதமர்களுடனும் ஒப்பந்தம் செய்திருக்கிறேன்; அப்படியிருக்க, டயஸ் பண்டாரநாயக்க நான் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்று கூறுவது பிழை’’ என்றார் தந்தை செல்வநாயகம்.
அவருடைய பேச்சிலும் கிரகிப்பிலும் அவர்கொண்டிருந்த நிதானத்தை உணர்ந்துகொள்ளமுடிந்தது.

1976 நவம்பர் 19ஆம் தேதி பாராளுமன்றத்தில் அவருடைய கடைசி உரையை அவர் ஆற்றியிருந்த மறுநாள், கொள்ளுப்பிட்டி, அல்பிரட் ஹவுஸ் கார்டனில் அவருடைய இல்லத்தில் என்னைக் கண்டதும் என்னை அழைத்து ஒரு ‘குழந்தை’போல பேசினார் தந்தை எஸ். ஜே. வி. செல்வநாயகம்.

தேசிய அரசுப் பேரவை விவாதங்களின்போது கிரமமாக – தவறாது பங்குபற்றுவார்; அதில் மிகுந்த அக்கறைகொண்டவர் தந்தை செல்வநாயகம். உரிய நேரத்தே, பிந்தாமல் சென்றுவிடவேண்டும் என்பதிலும் அக்கறையுள்ளவர்.
ஒருமுறை, காரை அவருடைய மகன் கொண்டுசென்றுவிட்டார். பிற்பகல் 2 மணியாகிவிட்டது; கார் வந்துசேரவில்லை. அன்று பேரவை அமர்வு பி.ப. 2 மணிக்கு. கையில் ‘பைலு’டன் காருக்காக காத்திருந்தார் தந்தை.
‘கார் வந்ததும் போவோம்’ என்று கூறிவிட்டு, அவரின் காரியதரிசி ஏதோ அலுவலில் உள்ளே இருந்துவிட்டார். சிறிதுநேரம் கழிந்துவிட்டபோது, பெரியவரை அங்கு காணவில்லை. பதற்றத்தோடு சென்று பார்த்ததில், கையில் ‘பைலு’டன் வீதியில் மெள்ளமெள்ள நடந்துகொண்டிருந்தார்.
ஓடிச்சென்று கேட்டபோது, ‘பஸ்’ஸில் போகப்போகிறேன்’ என்று கூறினாராம். காரியதரிசி திரு. இராஜேந்திரம் ஒருமுறை கூறினார்.

எதிர்க்கட்சி ‘லொபி’ பக்கமுள்ள பலமான அந்தக் கதவுகளை தன்னுடைய நலிந்த கைகளால் தள்ளி திறந்து, பேரவையினுள் நுழைவார் தந்தை செல்வநாயகம். நுழைந்ததும், வாசலருகிலேயே நின்று சிறிதுநேரம் வலது, இடது பக்கங்களுக்கு திரும்பி, வந்திருப்பவர்கள்மீது ஒரு நோட்டம் விடுவார்.
பின்னர், இடதுகையில் ‘பைலை’ உடம்போடு அணைத்துக்கொண்டு, வலதுகையால் ஆசனங்களைப் பிடித்தபடி, படிக்கட்டுகளாக அமைந்த பேரவை மண்டபத்தினுள் ஒவ்வொரு படியாக தாண்டி, ஒவ்வொரு படிக்கட்டுகளைத் தாண்டும்போதும், அந்தந்த வரிசையில் இருப்பவர்களை இருபுறமும் திரும்பி அவதானித்தபடி, முன்வரிசையிலுள்ள தனது ஆசனத்தை அடைவார்.
சில சமயங்களில் தமிழரசுக் கட்சி எம். பிக்கள் மாத்திரமல்ல, எக் கட்சியைச் சார்ந்தவருமே அவரைப் பிடித்துச் சென்று, அவருக்கு உதவுவார்கள். ஆனால், இதை அவர் அவ்வளவாக விரும்புவதில்லை.
ஆசனத்தில் அவர் அமர்ந்ததும் பேரவைச் சேவகர்கள் ஆசனத்திலுள்ள ‘இயர்போனை’ அவரது காதுகளில் இணைத்துச் செல்வார்கள். இத்தனைக்கும், 10 நிமிடங்களுக்குமேல் ஆகிவிடும். பார்வையாளர் கலரியில் அத்தனை கண்களும் இமைகொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கும்.

ஆசனத்தில் அமர்ந்ததும் அங்கு வைக்கப்பட்டுள்ள அறிக்கைகளையெல்லாம் அவதானமாக வாசிப்பார். பேச்சுக்களை உன்னிப்பாக கேட்பார்.
பேரவைச் செயலாளர்களோடு எதாவது பேசுவதற்காக எழுந்து அவர்களை நோக்கிச் சென்றால், அவர்கள் தாங்களே உடனே எழுந்துசென்று அவரிடம் விடயத்தைக் கேட்பார்கள்.
அமரர் திருச்செல்வத்தின் அநுதாபத் தீர்மானம்மீது பேசிய பேச்சுத்தான் பேரவையில் தந்தை செல்வநாயகத்தின் கடைசிப் பேச்சு. ஆனால், பேரவையில் அவரது கடைசி அரசியல் பேச்சு அதற்கு முன்னதாக கடந்த நவம்பர் 19ஆம் தேதி இடம்பெற்றது. இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட விவாதம் பேரவையில் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, அந்த விவாதத்தில் அன்று அவர் பேசினார்.
அவர் பேசவில்லை; முழங்கினார்!

தந்தை செல்வநாயகம் ‘முழங்கினார்’ என்று சொன்னால் பலருக்கு அது ஒருமாதிரியாகவே இருக்கும். அவர் பேசுவதே கேட்காதே; அப்படியிருக்க, அவர் ‘முழங்கினார்’ என்றால்…? என்று எண்ணவே தோற்றும்.
அன்றும் அவர் மெதுவாகத்தான் பேசினார். ஆனால், அந்தப் பேச்சு அரசுக்கு ஒரு கலக்கமாக-இடியாக-முழக்கமாகத்தான் இருந்தது.
தமிழரசுக் கட்சியின் தரப்பில் கடைசி உரையை, விவாதத்தின் இரண்டாவது வாசிப்பின் வாக்கெடுப்புத் தினமான அன்று, சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக, தந்தை செல்வநாயகம் நிகழ்த்தினார்.
தந்தை செல்வநாயகம் பேச எழுந்ததுமே அரசு, எதிர்க்கட்சி இருதரப்பிலும் அனைவருமே தங்கள் ‘இயர்போன்’களை மாட்டிக்கொண்டு, அவதானமாக கேட்க ஆயத்தமானார்கள்.
கைகள் இரண்டையும் இடுப்பில்வைத்தபடி, சபாநாயகரை நோக்கி மிகுந்த உசாராகவே அன்று பேசினார். அவருடைய நிலை; பேச்சு இரண்டுமே அன்று மிடுக்காகத்தான் இருந்தன.

‘இந்த நாட்டில் மக்களின் ஆதரவைப் பெற்றிருந்த இரண்டு பிரதமர்களுடனும் தமிழர் பிரச்னைகுறித்து ஒப்பந்தம் செய்தேன்; ஆனால், அவர்கள் இருவருமே பின்னர் சிங்கள மக்களுக்குப் பயந்து அவ்வொப்பந்தங்களை நிறைவேற்றவில்லை. இந்நிலையில், சமஷ்டி கோரிய நாம், அக் கொள்கையினைக் கைவிட்டு, அடுத்த நிலைபற்றி நிதானமாக யோசித்தோம். தனிநாடு ஒன்றுதான் எமக்குள்ள ஒரேவழி என்ற முடிவுக்கு வந்தோம். தனிநாடு அமைப்பதென்பது சுலபமானதொன்றல்ல என்பது எமக்குத் தெரியும். எனினும், இந்த நாட்டில் நாம் சிங்கள மக்களின் பிடியிலிருந்து விடுபடவேண்டும்; அல்லது, அழிந்துபோகவேண்டும்.

‘நமது மூதாதையர் புத்திசாலிகளாக இருந்தனர். தமக்கென்று ஒரு நாட்டை அவர்கள் வைத்திருந்தார்கள்.

‘நாம் பிரிந்துபோவதை இந்த அரசாங்கம் ஏன் மறுக்கிறது என்பது தெரியவில்லை. இந்த அரசாங்கம் மறுத்தாலும் இனி வரப்போகின்ற ஒரு சிங்கள அரசாங்கம் எமது நாட்டைப் பிரித்துத் தரும். அயர்லாந்து நூறு வருடங்களுக்குமேல் போராடி பிரிந்துசென்றது. நாம் எமது முடிவை உலகநாடுகளுக்கு அறிவித்துவிட்டோம். எமது கோரிக்கைகளை அவை ஏற்றுக்கொள்ளும்.

‘சாத்வீகமான முறையிலேயே போராடுவோம். இந்த நாட்டில் நாம் உரிமைபெறுவோம்; அல்லது, அழிந்துபோவோம். இந்தப் பின்னணியில்தான் எமது கொள்கை இருக்கின்றது. எங்கள் எதிர்காலம் எங்கள் சிந்தனையிலேயே தங்கியிருக்கிறது.’
– தந்தை செல்வநாயகத்தின் பேச்சின் சாரம் இப்படித்தான் இருந்தது.

தந்தை செல்வநாயகத்துக்குப் பின்னர் அக்குரணைத் தொகுதி உறுப்பினர் ஏ. சி. எஸ். ஹமீடை (ஐ. தே. க.) அடுத்து, உப சபாநாயகர் ஜனாப் ஐ. ஏ. காதர் பேசினார்.
திரு செல்வநாயகம் நாட்டைப் பிரிக்கும் ஓர் அறைகூவலைப் பேரவையில் விடுத்துவிட்டபின்னர், அவரையடுத்துப் பேசிய அக்குரணை உறுப்பினர் அதுபற்றிக் கண்டிக்காதது கண்டிக்கப்படவேண்டிய விடயம் என்றும், நாட்டைப் பிரிக்க ஒருபோதும் நாம் விடப்போவதில்லை என்று உப சபாநாயகர் ஆவேசத்தோடு பேசினார்.

தந்தை செல்வநாயகம் பேரவையில் இப்படிப் பேசிவிட்டாரென்பதை அறிந்ததும் அவருக்கு அரசாங்கம் என்ன பதில் அளிக்கப்போகிறது என்பதை அறிவதற்காக சகல உள்நாட்டு, வெளிநாட்டு பத்திரிகையாளர்களும் பத்திரிகை நிருபர்கள் கலரியை ஆக்கிரமித்துக்கொண்டார்கள்.

எனினும், அன்றுதான் யப்பான் சென்று திரும்பிய பிரதமருக்கு (திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க) பேராதனை வளாகச் சம்பவம்தொடர்பான பொலீஸ் அட்டூழியங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்குமுகமாக அவர் சபையுள் பிரவேசித்ததும், எதிர்க்கட்சியினர் அனைவரும் வெளிநடப்புச் செய்தனர். கிரியல்ல எம். பி. திரு. வாசுதேவ நாணயக்கார மலர் வளையம் ஒன்றைச் சபையினுள் வைத்துவிட்டு வெளியேறினார்.

– இந்த அமளிதுமளிகளில் அரசாங்கம் தந்தை செல்வநாயகத்தின் பேச்சுக்கு அன்று பதிலளிக்கவில்லை. ‘நாட்டில் மொழிப் பிரச்னை இருக்கிறது’ என்றுமாத்திரம் சொன்ன நிதி அமைச்சர் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க, அதற்கு தமிழ்த் தலைவர்களையும் குற்றம்சொன்னார்.

‘நான் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்று டயஸ் பண்டாரநாயக்க கூறுவது பிழை’ என்று, மறுநாள் தந்தை செல்வநாயகம் என்னிடம் சொன்னது இதைத்தான்.

– மாலி
‘ஈழநாடு’ – வாரமலர்
22.05.1977

Share the Post

You May Also Like