முகவரியை இழக்கும் நிலையில் பிரதான அரசியல் கட்சிகள்

நாட்டில் இன்று ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலை உருவெடுத்துள்ளது. நல்லாட்சி அரசில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தரப்பு தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கின்றது. உள்ளூராட்சித் தேர்தலில் சுதந்திரக் கட்சி மிக மோசமாக பாதிக்கப்பட்டது. அக்கட்சியை தோல்வி காணச் செய்வதற்கு உள்ளிருந்தே பல சதி நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. ஐக்கிய தேசியக் கட்சியின் தோல்விக்கு கட்சியின் அமைப்பாளர்களும், முக்கிய அமைச்சர்களுமே காரணமாக காணப்பட்டனர். ஐ.தே.க. பயணிக்கும் பாதை தவறானது என்பதை கட்சியை நேசிக்கும் மக்கள் அறிவுறுத்தும் விதத்திலேயே தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

ஆனால், சுதந்திரக் கட்சியை பொறுத்த மட்டில் அக்கட்சியிலுள்ளவர்களில் பெரும் எண்ணிக்கை யானோர் கட்சித் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காலை வாரிவிடும் மறைமுகமான திட்டத்தை கையாண்டு வருகின்றனர். காலையில் ஜனாதிபதிக்கு தமது முகங்களை காட்டிவிட்டு பின்னேரத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் குதூகலிக்கின்றனர். அப்பம் சாப்பிட்டு தேநீர் அருந்துகின்றனர். மீண்டும் மஹிந்தவை அரியணையில் ஏற்றுவதே அவர்களின் ஒரு திட்டமாகும். கட்சியில் மைத்திரிபால சிறிசேனவை பலவீனப்படுத்தும் ஒரு மறைமுக சதித்திட்டம் வியாபித்துக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

அதேபோன்று ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் மறைமுக சதித்திட்டங்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக இடம்பெற்றுக் கொண்டிருப்பதை மறுதலிக்க முடியாது. இரண்டு பிரதான கட்சிகளுக்கும் இன்று ஜனநாயக அரசியலுக்குப் பதிலாக இனவாத அரசியல் புகுந்திருப்பதை நன்றாக அவதானிக்க முடிகிறது. தேசிய அரசியல் என்பது இனவாதத்தின் மூலம் மேலோங்கச் செய்வதே என்ற மாயை தலைதூக்கியிருப்பதை வெளிப்படையாகவே நோக்க முடிகிறது. இது ஜனநாயக அரசியலுக்கு மிகப் பெரிய ஆபத்தானது என்பதை அரசியல் வல்லுநர்கள் சுட்டிக் காட்டியிருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் இனவாதம் வென்றதை வெளிப்படையாகவே காண முடிகிறது. மொட்டுக் கட்சியின் வெற்றிக்கு மத வழிபாட்டுத் தலங்கள் தாராளமாக பங்களிப்புச் செய்தமை பகிரங்க இரகசியமாகும். கிராமிய மட்டத்திலிருந்து மக்கள் மூளைச் சலவை செய்யப்பட்டதை தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டி நிற்பதை பார்க்க முடிகிறது. கிராம இராஜ்ஜியங்களை தம்வசப்படுத்துவதன் மூலம் தமது அடுத்த கட்ட நகர்வுக்குகள் நுழைவதே மொட்டுத் தரப்பினரின் இலக்காகும்.

அதற்கான பாதையை சீர்படுத்துவதில் அக்கட்சி முழுமூச்சாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. மொட்டுக் கட்சியைக் கேடயமாக வைத்துக் கொண்டு சுதந்திரக் கட்சியை தமதாக்கிக் கொள்ளும் திட்டத்தில் இன்று கணிசமான தூரம் மொட்டுத் தரப்பு பயணித்துள்ளது. அங்கத்துவம் பெறாமல் மொட்டுக் கட்சியின் தளபதியாக மஹிந்த ராஜபக்ஷ இயங்கிக் கொண்டிருக்கிறார். ஆனால், சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகவும், கட்சி உறுப்பினராகவுமே அவர் காணப்படுகிறார். அதேபோன்று சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் மொட்டுக் கட்சி உறுப்பினர்களாவார்கள்.

சமகாலத்தில் இரண்டு கட்சிகளில் அங்கம் வகிப்பதானது ஜனநாயக அரசியலில் ஏற்றுக் கொள்ள முடியுமா? என்பது கேள்விக் குறியானதாகும். அத்தகையவர்கள் மீது சுதந்திரக் கட்சி இன்று வரையில் எந்தவிதமான ஒழுக்காற்று நடவடிக்கையையும் எடுக்க முடியாத நிலைக்கு தள்ளப் பட்டுள்ளது. சட்ட யாப்பில் காணப்படும் ஓட்டைகளைப் பயன்படுத்தி தப்பித்துக் கொள்வதையே இது காட்டி நிற்கின்றது. சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இரண்டுக்குள்ளும் அங்கம் வகிக்கும் பலர் மொட்டுத் தரப்புடன் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். கட்சித் தலைமை மௌனியாக்கப்பட்டிருப்பதாகவே காண முடிகிறது.

நீண்ட வரலாற்றைக் கொண்ட இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் தேய ஆரம்பித்திருப்பது கவலையளிக்கக் கூடிய விடயமாகும். கட்சிக் கட்டுப்பாடுகள், கொள்கை, கோட்பாடு என்பன சீராக பின்பற்றப்படாததன் பிரதிபலன்களாகவே இதனை நோக்க வேண்டியுள்ளது. பலம் பொருந்திய கட்சிகள் படிப்படியாக பலவீனப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதன் பின்னணியில் சர்வதேச சக்திகளும் இருப்பதை மறுக்க முடியாது. கடந்த கால தேர்தல்களில் கூட வெளிநாட்டுச் சக்திகளின் ஆதிக்கம் மேலோங்கி இருந்ததை வெளிப்படையாகவே காண முடிந்தது.

இன்று எமது நாட்டின் அரசியல் கலாசாரம் திசைமாறிப் போய்க் கொண்டிருக்கின்றது. ஒரு பெரும் சூறாவளிக்குள் சிக்கி அல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றது. பல்லின மக்கள் வாழும் நாட்டில் அரசியலில் கூட பெரும்பான்மை, சிறுபான்மை எனவும் மத வேறுபாடுகளும் தலை விரித்தாடிக் கொண்டிருக்கின்றன. தேசிய அரசியல் நீரோட்டத்திலிருந்து விலகி இனவாத அரசியலில் அள்ளுப்பட்டுச் சென்று கொண்டிருப்பதுதான் யதார்த்தமானதொன்றாகும்.

நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளை கடந்து செல்லும் நிலை யில் இன்று தேசிய அரசியல் நீரோட்டத்திலிருந்து இனவாத மதவாத அரசியலுக்குள் தேசம் மூழ்க்கிக் கொண்டிருக்கின்றது. இதிலிருந்து மீட்சி பெறுவதற்கான வழிவகைகளை கண்டறிய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

தேசத்தின் அரசியல் வரலாற்றில் முத்திரை பதித்திருக்கும் பிரதான இரண்டு கட்சிகளும் அவற்றின் முகவரியை இழக்கக் கூடியதான ஒரு நிலை உருவாகியுள்ளது. தீய சக்திகள் உள்ளிருந்து வேரறுக்கும் திட்டத்தை சூட்சுமமாக மேற்கொண்டுள்ளனர். இந்தப் பேராபத்திலிருந்து தப்புவதற்கான வழியை தேடிக் கொள்வது ஜனநாயக சக்திகள் மீதான பெரும் கடப்பாடாகும் என்பதை மறந்துவிடக் கூடாது.

அதிகார வெறி பிடித்தலையும் ஜனநாயக விரோத சக்திகளிடமிருந்து ஜனநாயக, தேசிய அரசியலமை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் மீதான பொறுப்பாகும். சர்வாதிகாரத்தின் பக்கம் நாட்டை திசை திருப்பும் சக்திகள் விடயத்தில் விழிப்படைய வேண்டும் என்பதை மீண்டுமொரு தடவை நினைவூட்டிக் கொள்கின்றோம்.

நன்றி :தினகரன்

Share the Post

You May Also Like