ஐ.தே.கட்சி – சுதந்திரக் கட்சி புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்

அரசாங்கத்தில் தொடர்ந்தும் இணைந்து செயற்படுவது குறித்து நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தை களைத் தொடர்ந்து லங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.

தேசிய அரசாங்கத்துக்கு எஞ்சியிருக்கும் 18 மாதங்களிலும் பொதுவான வேலைத்திட்டமொன்றின் அடிப்படையில் இணைந்து செயற்படுவது தொடர்பில் முடிவொன்றை எடுப்பதற்கு இரண்டு கட்சிகளையும் சேர்ந்த அமைச்சரவை குழுக்கள் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதி கூடவிருக்கும் பாராளுமன்ற அமர்வில் இப்புதிய வேலைத் திட்டம் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“இத்திட்டமானது விரிவானதாகவும், பலமானதாகவும், நாட்டுக்கு நன்மையளிக்கக் கூடியதுடன், சகலராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கும். இந்தத் திட்டத்தை தயாரிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தலைமையில் ஐவர் அடங்கிய குழுவை நியமித்துள்ளோம். இது தொடர்பான பணிகள் நிறைவடை ந்தவுடன் இரு கட்சிகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும்” எனவும் அமைச்சர் துமிந்த திசரநாயக்க தெரிவித்தார்.

அமைச்சரவை மறுசீரமைப்பின் போது அமைச்சுக்களின் விடயதானங்கள் அறிவார்ந்த வகையில் மீளமைக்கப்படவிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு சு.க அமைச்சர்கள் சிலர் ஆதரவாக வாக்களித்ததையடுத்து தேசிய அரசாங்கத்தினுள் குழப்பம் ஏற்பட்டதோடு 16 சு.க அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்திருந்தார்கள்.

இதனையடுத்து, தேசிய அரசாங்கம் தொடர்ந்து செயற்படுவது தொடர்பில் ஆராய அமைச்சர் சரத் அமுனுகம தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது. தேசிய அரசாங்கத்தின் எதிர்கால செயற் பாடுகள் குறித்தும் இரு கட்சிகளுக்குமிடையில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடுவது குறித்தும் இந்தக் குழு ஆராய்ந்து வருகிறது.

இலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் இந்த குழு தனது அறிக்கையை ஜனா திபதிக்கு சமர்ப்பிக்க இருப்பதாக அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் புதிய அமைச்சரவையும் நியமிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share the Post

You May Also Like