யுத்தம் பாதித்த மண்ணில் உருவான மற்றொரு சிக்கல்!

வடக்கு, கிழக்கில் முப்பது வருட காலமாக நீடித்த யுத்தத்தினால் சீரழிந்து போன தமிழ்ப் பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்வை இன்று நாசம் செய்கின்ற காரணிகளில் ஒன்றாக நுண்கடன் திட்டம் உருவாகியிருக்கின்றது.

வடக்கு, கிழக்கில் வன்னிப் பிரதேசத்திலும் கிழக்கிலுமே நுண்கடன் வழங்கும் நிதி நிறுவனங்களின் ஆதிக்கம் பெரிதாக வியாபித்திருக்கின்றது. கடந்த கால யுத்தப் பாதிப்புகளின் விளைவாகப் பாதிக்கப்பட்ட மக்கள் எங்கெங்கு வாழ்கின்றனரோ அங்கெல்லாம் நுண்கடன் வழங்கும் நிதி நிறுவனங்களும் தங்களது கால்களைப் பதித்திருக்கின்றன.

நுண்கடன் திட்டங்களால் மக்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகள் தொடர்பாக பல்வேறு ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள், தற்கொலைகள் போன்றவற்றுக்கெல்லாம் நுண்கடன் திட்டங்கள் வழிவகுப்பதாகவும் ஊடகங்கள் எடுத்துக் காட்டியிருக்கின்றன. ஆனாலும் இதனால் உண்டாகின்ற சமூக சீர்கேட்டை இன்னுமே தடுத்து நிறுத்த முடியாதிருக்கின்றது.

சிறு தொகையிலான கடன் வழங்குவதே இந்நிறுவனங்களின் நோக்கமாக இருக்கின்றது.இதற்காக வடக்கு, கிழக்கின் பிரதான நகரங்களிலும் உபநகரங்களிலும் இந்த நிதிநிறுவனங்கள் தமது அலுவலகங்களைத் திறந்து வைத்துள்ளன. எங்கெல்லாம் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் ஏழை மக்கள் வசிக்கின்றனரோ அவர்களை இந்நிறுவனங்கள் இலகுவாகவே இலக்கு வைத்து வளைத்துப் பிடித்து விடுகின்றன.

கோழி வளர்ப்பு, வீட்டுத் தோட்டம், ஆடு வளர்ப்பு என்றெல்லாம் சுயதொழில் முயற்சிகளின் பேரில் வறியவர்களுக்கு இந்நிறுவனங்கள் நுண்கடன் (சிறிய தொகைக் கடன்) வழங்குகின்றன.

வடக்கு, கிழக்கிலுள்ள வறிய மக்களைப் பொறுத்தவரை அவர்கள் யுத்தத்தின் விளைவாக அனைத்தையும் இழந்த கையறு நிலையிலேயே உள்ளனர். கடலில் தத்தளிப்பவனுக்கு சிறு மரக்கலம் கிடைத்தது போன்று, எந்தவொரு உதவியையும் தட்டிக் கழிக்கின்ற மனோநிலையில் அவர்கள் இப்போதைக்கு இல்லை. இந்தவொரு உதவி கிடைத்தாலும் அதனைப் பயன்படுத்திக் கொள்கின்ற வறிய நிலையிலேயே அம்மக்கள் உள்ளனர்.

இம்மக்களின் பலவீனத்தை நுண்கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கின்றன. கடனாளிகளை தேடிப் பிடிப்பதற்காக கிராமங்கள் தோறும் இந்நிறுவனங்கள் முகவர்களை வைத்திருக்கின்றன. நுண்கடன் வலையில் விழுந்து விடும் ஒரு வறிய குடும்பம் பின்னர் மீண்டெழுவதற்கே வழியே இல்லை. கடன் நடைமுறைகளை ஏற்றுக் கொண்டு, படிவங்களில் அத்தாட்சிக் கையெடுத்து இட்டு பணத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர் தவணை முறையில் அதனை மீளச் செலுத்தியே ஆக வேண்டும். அவ்வாறு செலுத்தத் தவறுகின்ற போதுதான் பிரச்சினைகளும் ஆரம்பமாகின்றன. நுண்கடன் பெற்றுக் கொண்டவர்களில் கூடுதலானோர் கடனை மீளச் செலுத்தத் தவறுகின்றனர். அவர்களிடம் அதற்கான பணமோ, வருமானமோ இல்லாத நிலையில் கடனை மீளச் செலுத்துவது எவ்வாறு?

ஓரிரு மாதங்கள் மாத்திரம் நிதி நிறுவனங்களை ஏமாற்றி காலத்தைக் கடத்த முடியும். அதன் பிறகு நிறுவனத்தை ஏமாற்றுவது சாத்தியமில்லை. நிதிநிறுவன ஊழியர்கள் வீடு தேடி வருவதற்கு ஆரம்பித்து விடுவார்கள். முதலில் அறிவித்தல் விடுத்துப் போவார்கள்; பின்னர் வந்து மிரட்டுவார்கள்; நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப் போவதாகப் பயமுறுத்துவர்.

கடனைப் பெற்றுக் கொண்ட நபர் வட்டியுடன் சேர்த்து பெரும் தொகையொன்றை மீளச் செலுத்த வேண்டியிருக்கும். அதற்காக தனது காணியையோ அல்லது வேறேதும் உடைமையையோ விற்க வேண்டியுமிருக்கும். எதுவுமே முடியாத பட்சத்தில் சிலர் தற்கொலை முடிவுக்கும் சென்றிருக்கின்றனர்.

சுயதொழில் முயற்சிக்காக நுண்கடன் பெற்றுக் கொண்ட பெண்கள் சிலரிடம் பாலியல் ரீதியான அத்துமீறலில் ஈடுபடுவதற்கும் நுண்கடன் நிதி நிறுவன ஊழியர்கள் சிலர் முயற்சிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. வறுமையைப் பயன்படுத்தி பெண்களை தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் சீர்கேடான நிலைமைக்கு நுண்கடன் திட்டங்கள் வழியேற்படுத்திக் கொடுப்பது தெளிவாகத் தெரிகின்றது.

“நுண்கடன் பெற்றுக் கொண்ட குடும்பங்களின் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது.கடன் செலுத்த முடியாததாலும், நெருக்குதல்களாலும் அக்குடும்பத்தினர் உளரீதியில் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். யுத்தம் பாதித்த மண்ணில் இன்று இதுவொரு பாரிய பிரச்சினை” என்கிறார் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிண்ணையடி கிராமத்தில் இயங்கும் விவசாய அமைப்பின் தலைவர் இரத்தினசிங்கம் யோகேஸ்வரன்.

அக்கிராமத்தின் வேறு சில சமூகநல அமைப்புகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் அவர்.

ஆலய நிருவாகங்கள், சமூகநல நிறுவனங்கள், தொண்டர் அமைப்புகளெல்லாம் ஒன்றிணைந்து கிராமங்களில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வர வேண்டும் என யோகேஸ்வரன் கூறுகின்றார்.

வறிய மக்கள் சுயதொழில் ஊடாக வருமானத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம்தான். ஆனால் அம்மக்களுக்கு வலிந்து கடனை வழங்கி அவர்களை கடனாளிகளாக்கி, மன உளைச்சலை ஏற்படுத்துவது முறையல்ல.

கடனை மீளச் செலுத்துவதற்கான திராணி அம்மக்களிடம் உள்ளதா என்பதையிட்டு நிதி நிறுவனங்கள் முதலில் முடிவுக்கு வர வேண்டும். அதன் பின்னரே அக்குடும்பங்களுக்கு கடன் வழங்க வேண்டும்.

இவை எவற்றையுமே கவனத்தில் கொள்ளாது, வறிய மக்களுக்கு வலிந்து சென்று கடனை வழங்கி விட்டு, அம்மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்குவது முறையல்ல.சமூக சீர்கேட்டுக்கு வழிவகுக்கும் இவ்விடயத்தில் சமூக ஆர்வலர்கள் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

Share the Post

You May Also Like