கேள்விக்குறியாகியுள்ள நல்லாட்சி!

நல்லிணக்கம், சகவாழ்வு, சமாதானம் என நாட்டில் பல்வேறுபட்ட முயற்சிகளும், வேலைத்திட்டங்களும்  முன்னெடுக்கப்படுவதாக அரசாங்கத்திலுள்ளவர்கள் பெருமைபாராட்டிக்கொள்கின்றபோதிலும் வரும் அதேவேள நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளுக்குமிடையில் நல்லிணக்கம் என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது. பிரதான அரசியல் கட்சிகள் உள்ளேயும், வெளியேயும் மோதிக் கொண்டிருக்கின்றன. சில கட்சிகள் மறைமுகமாக மோதுகின்றன. மற்றும் சில வெளிப்படையாக தமக்குத் தாமே சேறு பூசிக்கொள்வதை அவதானிக்க முடிகிறது. ஜனநாயக அரசியல் என்பது இன்று பகட்டுத்தன்மையுடையதாகவே பார்க்க வேண்டியுள்ளது. இந்த ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் விமர்சிப்பு என்பது யதார்த்தபூர்வமாக இருப்பினும் கூட இன்று அது கேலிக்கூத்தாகவே காணப்படுகின்றது.

தேசத்தை வளமுடனும், ஒற்றுமையுடனும் கட்டியெழுப்புவதற்காகவே ஜனநாயக அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட்டது. சர்வாதிகாரம் நாட்டை அடக்குமுறைக்கு இட்டுச் செல்லும் கலாச்சாரம் என்பதால் தான் உலகம் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் பயணிக்க தொடங்கியது. ஆனால் நாட்டு மக்கள் இன்று ஜனநாயக அரசியல் மீதும், கட்சி அரசியல் மீதும் நம்பிக்கை இழந்து காணப்படுகின்றனர். உண்மையான ஜனநாயக அரசியலை எந்தவொரு தரப்பும் உள்வாங்கிச் செயற்படுவதாகத் தெரியவில்லை. ஜனநாயகம் என்பது ஏமாற்று அரசியல் என்ற அடைப்புக்குள்ளான தொனிப்பொருளாக மாறிப்போயுள்ளது.

நாடு சுதந்திரத்தைப் பெற்று 70 ஆண்டுகளை கடந்து நாம் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். ஆரம்பத்தில் இன, மத, மொழி பேதமின்றி ஒன்றாகப் பயணிக்க முடிந்தது. அப்போது எல்லோரிடத்திலும் நாட்டுப் பற்றுறுதி காணப்பட்டது. காலப்போக்கில் இனங்களுக்கிடையே பிரித்தாளும் ஒரு சூழ்ச்சி மறைமுகமாக முன்னெடுக்கப்பட்டது. இன்று அது பலமாக வேரூன்றி முழு நாட்டையுமே சீர்குலைத்து சின்னாபின்னப்படுத்தியுள்ளது. இனத்தாலும், மதத்தாலும் மட்டுமல்ல கட்சியாலும் நாடு பிளவுண்டு போயுள்ளது. காலத்துக்கு காலம் சமாதான சகவாழ்வு, நல்லிணக்கம் பற்றி குரல் ஓங்குகின்றது. அதுகூட சாணேற முழம் சறுக்கும் நிலையிலே பயணித்துக்கொண்டிருப்பதைத்தான் நோக்கமுடிகிறது.

நல்லாட்சி அரசுக்குள் அண்மைக் காலமாக கருத்தொற்றுமை சீராகக் காணப்படவில்லை. ஆளுக்கு ஆள் சுட்டுவிரல் நீட்டிக்கொண்டிருப்பதையே காண முடிகிறது. மிகமுக்கியமாக ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையில் மனக்கசப்பு அதிகரித்துள்ளது. இந்த நல்லாட்சியைக் கொண்டு வர நாட்டு மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதை தலைவர்கள் மறந்துவிடக்கூடாது. நாட்டில் மீண்டுமொரு தடவை சர்வாதிகாரப் போக்குடையவர்கள் ஆட்சிபீடமேற வழிசமைத்துவிடக்கூடாது.

ஜனாதிபதி ஊடகப் பிரதானிகளுடனான சந்திப்புக்களின்போது, ஊடகத்துறை சார்ந்தோர் சந்தேக நிவர்த்திக்காக கேள்விகளைக் கேட்கும் போது அளிக்கும் பதில்கள் அவருடைய பதவி நிலைக்குப் பொருத்தமானதாகக் காணப்படவில்லை. “எனக்குத் தெரி யாது, அப்படியா? நான் காணவில்லை, நீங்கள் கூறும் விடயத்தை பத்திரிகையில் படித்துத்தான் தெரிந்துகொண்டேன்” இதுபோன்ற பதில்களை நாட்டின் தலைவர் கூறுவது ஏற்புடையதாக அமையமாட்டாது. இந்த நாடும், நாட்டு மக்களும் ஜனாதிபதியின் ஆளுகைக்குள் இருக்கும்போது சாட்டுப்போக்கு கூறி நழுவிச் செல்ல முனைவது ஆரோக்கியமானதல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

இன்று தனது தேர்தல் வாக்குறுதியை மறந்த நிலையிலும் கருத்துக்களை கூறி வருகிறார் ஜனாதிபதி. இரு தினங்களுக்கு முன்னர் நல்லாட்சி அரசுக்கு அடித்தளமிட்ட மறைந்த மாதுளுவாவே சோபித்த தேரோவின் பிறந்த தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது, 2015 தொடக்கம் ஆட்சியில் நடந்தவை எதுவுமே தனக்குத் தெரியாமலேயே நடப்பதாக கூறியுள்ளார். மகிந்த ஆட்சியை துடைத்தெறிய வேண்டுமென்று களத்தில் இறங்கிய முதலாமவர்தான் இந்த சோபித தேரோ. இவர் முயற்சியின் பயனாகவே மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அன்று தேர்தல் பிரசாரத்துக்கான ஆரம்பப் பணிகளை தொடக்கிவைத்த சோபித்த தேரோ தான் 100 நாள் வேலைத்திட்டத்தை தயாரித்தவர். இப்போது ஜனாதிபதி இந்த வேலைத்திட்டத்தை விமர்சிப்பது மட்டுமன்றி அது பற்றி தனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை எனக்கூறுகிறார்.

ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற மகிந்த ராஜபக்ஷவுக்கு தங்காலைக்குச் செல்ல இரண்டு ஹெலிகளைப் பெற்றுக்கொடுத்ததாகக் கூறிய ஜனாதிபதி இன்று வேறுவிதமாக கூறிவருகிறார். தன்னுடைய உத்தரவோ, அனுமதியோ இன்றி ஹெலிகொப்டர்கள் வழங்கப்பட்டதாகவும் அதில் தொடர்புபட்டவர்கள் விசாரிக்கப்படவிருப்பதாகவும் சொல்கிறார்.

ஜனாதிபதியின் இந்த முரண்பட்ட கருத்துக்கள் மறைமுகமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சாடுவதாகவே பார்க்க முடிகிறது. ஜனாதிபதி அண்மைக் காலமாக தவறான எடுகோலை கையில் எடுத்திருப்பதாகவே நோக்க வேண்டியுள்ளது. இது ஆரோக்கியமானதொரு காரியமாகக் கருத முடியாதுள்ளது. ஜனாதிபதியின் மனநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பின் விளைவுகளையிட்டு அரசு எச்சரிக்கையாக செயற்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

தேர்தலொன்றுக்கு இன்னும் 17 மாதங்களே இருக்கும் நிலையில் ஜனாதிபதி அரசியல் நோக்குடன் கூடிய நிகழ்ச்சி நிரலுக்குள் செல்ல முற்படுகின்றாரா என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. தன்னுடன் இருக்கும் சுந்திரக்கட்சி உறுப்பினர்கள் மஹிந்த பக்கம் தாவுவதை தடுத்து நிறுத்தும் ஒரு முயற்சியாகவும் இதனை நோக்க முடிகிறது. எனினும் ஜனாதிபதியின் இந்த திடீர் மாறுதல்கள் விபரீத விளைவுகளுக்கு வழி வகுக்கலாம். இந்த நேரத்தில் முரண்பாடுகளுக்கு இடமளிக்காமல் இரு தலைவர்களும் பேசி கருத்து முரண்பாடுகளை நிவர்த்திசெய்துகொள்ள வேண்டுமென்பதே ஜனநாயகத்தை நேசிக்கும் சக்திகளின் எதிர்பார்ப்பாகும்.

Share the Post

You May Also Like