தமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ!

ஒரு தரம்கெட்ட நாளேட்டின் தரம் கெட்ட தலையங்கத்தின் தலைப்பு இது.

தமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ! என்று தலையங்கம் கேட்கிறது.

தமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ! என்ற கேள்விக்கு இல்லை என பதில் வைத்து கொள்வோம்.

ஒரு தமிழனை அமைச்சர் பதவியில் இருந்து எந்த முகாந்திரமும் இல்லாமல் நீக்கியது நீதியோ? என்று நாம் கேட்டால் அதற்குப் பதில் என்ன?

விக்னேஸ்வரன் அரசியலுக்குப் புதியவர். ஏன் அரசியலில் ஒரு அற்பன் (political upstart) என்று கூடச் சொல்லலாம். அதனால்தான் அறபத்தனமாக நடந்து கொள்கிறார்!

வட மாகாண சபை அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிராகவே சில ஊழல் குற்றச்சாட்டுக்கள் சபையில் முன்வைக்கப்பட்டன. சுன்னாகம் குடிநீர் சிக்கலில் பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டது.

இந்த ஐங்கரநேசன் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் எடுபிடி. எனவே அவருக்கு எதிராக மட்டுமல்ல மேலும் 3 அமைச்சர்கள் மீது விசாரணை நடத்த அவர் ஒரு ஆணைக் குழுவை நியமித்தார்.

அந்த ஆணைக் குழு அறிக்கையின் படி ஐங்கரநேசன் மீதான குற்றச்சாட்டுக்கள் எண்பிக்கப்பட்ட காரணமாக அவர் பதவி விலக வேண்டும் எனப் பரிந்துரைத்தது.

ஆனால் ஐங்கரநேசனிடம் இருந்து விலகல் கடிதத்தை வாங்கிக் கொண்ட விக்னேஸ்வரன் விசாரணைக் குழுவால் சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் இருவரும் குற்றமற்றவர்கள் அவர்கள் பதவியில் தொடரலாம் என்ற ஆணைக் குழுவின் பரிந்துரையை மீறி அவர்கள் பதவி விலக வேண்டும் என அடம் பிடித்தார். இதில் அமைச்சர் டெனீஸ்வரன் விலகல் கடிதத்தைத் தரமுடியாது எனச் சொல்லிவிட்டார்.

இதனைத் தொடர்ந்து விக்னேஸ்வரன் அவர் வகித்த பதவிக்கு இன்னொருவரை நியமனம் செய்தார். டெனீஸ்வரன் நீதிமன்றம் சென்றார்.

மேன்முறையீட்டு நீதிமன்றம் இப்போது டெனீஸ்வரன் தனது அமைச்சர் பதவியில் தொடரலாம் அவரது பதவி நீக்கம் செல்லாது என இடைக்கால உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

விக்னேஸ்வரன் சார்பாக தோன்றிய சனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரன் முன்வைத்த வாதங்களை மேல் முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஒரு அமைச்சரை முதலமைச்சரின் ஆலோசனையின் படி ஆளுநர்தான் நியமிக்கிறார். எனவே டெனீஸ்வரன் அவர்களை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றால் முதலமைச்சர் அதனை ஆளுநருக்கு ஆலோசனை வடிவத்தில் முன்வைத்திருக்க வேண்டும்.

இதை நீதியரசராக இருந்த விக்னேஸ்வரன் தெரிந்திருக்கவில்லை. தான் பெரிய கெட்டிக்காரன், சட்ட மேதை, உச்ச நீதிமன்ற நீதிபதி என்ற ஆணவம் காரணமாக ஆளுநரிடம் இருக்கும் அதிகாரத்தை விக்னேஸ்வரன் தான்தோன்றித்தனமாக தனது கையில் எடுத்துக் கொண்டார்.

அதுதான் அவரது இன்றைய மொக்கேனத்துக்கு அடிப்படைக் காரணம்.

ஆனால் அவரது அடிவருடிகள், அவருக்கு பட்டுக் குடை பிடிப்பவர்கள், அவரைப் பல்லக்கில் தூக்கிக் கொண்டு திரிபவர்கள் “ஒரு ஆளுநருக்கு இருக்கிற அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லையா? எனப் பாமரத்தனமாகக் கேள்வி கேட்கிறார்கள். முதலமைச்சருக்கு அந்த அதிகாரம் இல்லை என்றுதான் சட்டம் சொல்கிறது. முதலமைச்சர் ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் ஆனால் அவரே ஒரு அமைச்சரை விலத்த முடியாது.

எல்லோருக்கும் (பலன்) சொல்லுகிற பல்லி தான் மட்டும் கூழ்ப்பானைக்குள் விழுந்ததாம்.

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு இதுதான் நடந்தது.

அதிகார வெறி அவரது கண்ணை மறைத்துவிட்டது. அதற்கான தண்டனையே மேல் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு.

வெட்கத்தை கக்கத்தில் வைத்துக் கொண்டு தன்மானத்தை விழுங்கிவிட்டு டெனீஸ்வரன் அமைச்சராகத் தொடர விக்னேஸ்வரன் இடையூறு செய்யக் கூடாது. செய்தால் நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த குற்றச்சாட்டு அவர் மீது பாயும்!

நக்கீரன்

Share the Post

You May Also Like