விக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு கூட்டமைப்பு கடைசி நேரம் வரை நம்பிக்கை கயிறைக் கொடுத்து விட்டு,இறுதி நேரத்தில் காலை வாரினால் கூட, அவருக்கும் கடைசிக் கட்டத்தில் கால் வைத்துச் செயற்பட இன்னொரு படகு வெளியில் தயார் என்பது தான் கணேஷ் வேலாயுதத்தின் முயற்சி காட்டுகின்றது. (காலைக்கதிர் – மின்னல்)

முதலமைச்சர் விக்னேஸ்வரன் அடுத்த மாகாண சபைத் தேர்தலில் முதன்மை வேட்பாளராக நிறுத்த மாட்டோம் – முன்னர் விட்ட பிழையை மீண்டும் விட மாட்டோம் – என தமிழ் அரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சுமந்திரன் ஏற்கனவே கூறியுள்ளார்.

அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தமிழ் அரசுக் கட்சியில் நீண்ட காலம் உழைத்த ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணம் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர்களின் விருப்பாக இருக்கிறது.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் 2013 இல் நடந்த தேர்தலில் வென்று வந்த பின்னர் தமிழ் அரசுக் கட்சிக்கு எதிராகவே செயற்பட்டு வந்துள்ளார். 2015 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் விக்னேஸ்வரன் ஒன்றுக்கு மேற்பட்ட அறிக்கைகள் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவும் தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும் ஆதரவாகவும் நடந்து கொண்டார்.

விக்னேஸ்வரன் அவர்களே தமிழ் அரசுக் கட்சி நியமனம் கொடுக்காத பட்சத்தில் தான் வேறு அணிகளோடு சேர்ந்து தேர்தலில் நிற்கப் போவதாகச் சொல்கிறார். வேறு அணியும் சாத்தியப்படாவிட்டால் தான் தனிக் கட்சி தொடங்கி போட்டி போடப் போவதாக அறிவித்துள்ளார்.

எனவே “கூட்டமைப்பு கடைசி நேரம் வரை நம்பிக்கை கயிறைக் கொடுத்து விட்டு, இறுதி நேரத்தில் காலை வாரினால் கூட” என்று எந்த அடிப்படையில் சொல்லப்படுகிறது என்பது தெரியவில்லை.

விக்னேஸ்வரன் புத்திசாலி என்றால் அவர் தமிழ் அரசுக் கட்சி 2013 இல் விட்ட பிழையை மறுபடியும் விடும் எனக் கனவிலும் எதிர்பார்க்க மாட்டார்.

அவருக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன.

நக்கீரன்

Share the Post

You May Also Like