பெயரளவில் நல்லாட்சி. நடைமுறையில் கொல்லாட்சி -ரவிகரன் காட்டம்

முல்லைத்தீவில் அறுபதாயிரத்திற்கு மேற்பட்ட படைகள் இருக்கின்றன. இந்த படைகள் எல்லாம் எதனை பார்க்கின்றன? பிரச்சனைகள் உருவாக்குவதை பாக்கின்றார்களா? அல்லது எங்களுக்கு தொல்லைகள் கொடுப்பதை பாக்கின்றார்களா? அல்லது தொல்லைகள் கொடுத்துக்கொண்டிருக்கின்றார்களா? என ரவிகரன் காட்டமாக கேள்வியெழுப்பியுள்ளார்..

கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதி வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட முல்லைத்தீவு முறுகண்டி வசந்தபுரம் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய கறுப்பையா நித்தியகலா என்ற பெண்ணின் படுகொலைக்கு நீதிகோரி முறுகண்டி மற்றும் இந்துபுரம் கிராம மட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் முறுகண்டிப்பகுதியில் நேற்று காலை பத்து மணிக்கு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும் போதே ரவிகரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

மக்கள் அழுகுரல்களுடன் ஆதங்கத்துடன் முறுகண்டி பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து நீதிகேட்டு கூடியுள்ளது மிக வேதனையான விடயம், ஒரு நல்லாட்சி நடைபெறுகின்றது என்றால் இப்படியான சம்பவம் நடைபெற வாய்ப்பில்லை இந்த ஆட்சி பெயரளவில் நல்லாட்சி. நடைமுறையில் கொல்லாட்சி என்று தான் சொல்ல வேண்டும் இப்படியான நிலைமையில்தான் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

மேலும் 2009 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் இப்படியான சம்பவங்கள் இல்லை, ஆகவே எது நல்லாட்சி, இப்போது நடைபெறுவது நல்லாட்சியா? 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் நடைபெற்றது நல்லாட்சியா? என்று கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். பெண்கள் தனியாக நள்ளிரவில் சென்றுவரக்கூடிய ஒரு ஆட்சி 2009 க்கு முன்னர் இருந்தது. ஆனால் இப்போது பட்டப்பகலில் பெண்களுக்கு உத்தரவாதம் இல்லாத ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது எனவும் தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.

இதனை கதைத்தால் நாங்கள் இனவாதாம் பேசுவதாக சொல்லிக்கொள்கின்றார்கள் நாங்கள் இனவாதம் பேசவில்லை, நீங்கள்தான் சொல்கின்றீர்கள் நாங்கள் எல்லோரும் இலங்கையின் பிரஜைகள் என்று, அவ்வாறு நீங்களே சொல்லிக்கொண்டு நீங்களே எங்களை ஒடுக்குகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளீர்கள்.

இதுவரை மக்களின் பல போராட்டங்களுக்கு தீர்வில்லை நல்லாட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தால் மக்கள் ஏன் வீதியில் இறங்கி போராட வேண்டும்?

அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட படைகள் முல்லைத்தீவு மண்ணில் இருப்பதாக பல புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த படைகள் எல்லாம் எதனை பார்க்கின்றார்கள்.

எங்களுடைய மக்கள் நிம்மதியாக தங்களை வாழவிடுங்கள் என்றுதான் கேட்கின்றார்கள். இன்று நித்தியாவிற்கு பாதுகாப்பு இல்லை. எத்தனை பெண்களுக்கு நீங்கள் பாதுகாப்பு தருகின்றீர்கள்? இதனைத்தான் நாங்கள் தட்டிக்கேட்கின்றோம்.

நாங்கள் சட்டம் ஒழுங்கை சீராகத்தான் செய்கின்றோம் சட்டம் ஒழுங்கினை மீறி நடப்பது அரசாங்கத்தில் உள்ள சிலதலைமைகள்தான் என்பதை நான் சுட்டிக்காட்டுகின்றேன் எனத் தெரிவித்தார்.

சட்டம் ஒழுங்கை பற்றி இங்குள்ள மக்களுக்கு நன்றாக தெரியும். கடந்த 30 ஆண்டுகளாக எங்கள் மக்கள் சட்டம் ஒழுங்கை நன்றாக கற்றுள்ளார்கள் மரியாதை கொடுத்துள்ளார்கள் இதனை மீறி செயற்படுவது யார்?

நாங்கள் பாதுகாப்பாக வாழவேண்டும். பாதுகாப்பாக வாழவேண்டிய சூழ்நிலையினை நல்லாட்சி ஏற்படுத்தவேண்டும் சர்வதேசமே இவற்றை வெறுமனவே பார்த்துக்கொண்டிருக்கின்றீர்களா?

எத்தனை கொலைகள், எத்தனை போராட்டங்கள் இங்கு நடக்கின்றது. மக்கள் தங்கள் நிம்மதியினை நாடி வீதிவீதியாக அலைகின்றார்கள். சர்வதேசம் சரியாக இருந்தால் எங்களுக்கான நியாயம் கிடைக்காதா? எங்கள் மக்களை பாதுகாப்பதற்கு சர்வதேசம் கண்மூடிக்கொண்டிருக்காமல், வாய்மூடிக்கொண்டிருக்காமல் எங்கள் பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தாருங்கள். இதனைவிடுத்து நீங்கள் கண்களை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்காதீர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share the Post

You May Also Like