அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாகும் என்பது தமிழர்களது ஆழமான  நம்பிக்கை

நக்கீரன்

நாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக் கொண்டிருக்கும் போது சனாதிபதி சிறிசேனா இப்போது நாடாளுமன்றத்தையும் அதிரடியாகக்  கலைத்திருக்கிறார்.

நாடாளுமன்றத்தல் பெரும்பான்மை ஆதரவோடு  பிரதமாரக இருந்த ரணில் விக்கிரமசிங்கவைவீட்டுக்கு அனுப்பிவிட்டு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக சத்தியப் பிரமாணம்  செய்து வைத்தார் ஜனாதிபதி.

இப்போது மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்பதைத்  தெரிந்து கொண்ட இன்று மஹிந்த – சிறிசேனா ஒப்புக் கொண்டுள்ளார்கள். பெரும்பான்மைக்கு வேண்டிய 113 உறுப்பினர்களுக்கு  மேலும் 8 உறுப்பினர்களது ஆதரவு வேண்டியிருந்தது. அது கிடைக்க வழியில்லை என்று கண்டவுடன் நாடாளுமன்றத்தையே திடுதிப்பெனக் கலைத்துவிட்டார் மைத்திரி.

இந்தக் கலைப்பு சட்ட விரோதம் என்பதே சட்ட நிபுணர்களின் கருத்தாகும்.

2015 இல் நிறைவேற்றப்பட்ட 19 ஆவது சட்ட திருத்தம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருந்த  நிறைவேற்று அதிகாரங்கள் பலவற்றைக் குறைத்துவிட்டது.  முக்கியமாக 1978 இல் இயற்றப்பட்ட  அரசியல் யாப்பில்  நாடாளுமன்றத்தின் ஆயுள் காலத்தில் ஓர் ஆண்டு முடிந்த பின்னர் ஜனாதிபதி அதனைக் கலைக்கலாம்  என இருந்தது. ஆனால் 19 ஆவது சட்ட திருத்தத்தின் பின்னர் அந்த அதிகாரம் ஜனாதிபதியிடம் இருந்து புடுங்கப்பட்டு விட்டது.

 உறுப்புரை 33(2)(இ)  ஜனாதிபதி பிரகடனத்தின் மூலம் நாடாளுமன்றத்தைக் கூடுமாறு அழைக்கலாம். அமர்வு நிறுத்தலாம், அத்துடன் கலைக்கலாம் எனக் சூறுகிறது.

 ஆயினும், னாதிபதி, நாடாளுமன்றம் அதன் முதல் கூட்டத்திற்கு நியமித்த திகதியிலிருந்து நான்கு ஆண்டுகள் ஆறு மாதங்களுக்கு குறையாத ஒரு காலப் பகுதி முடிவுறும் வரை, நாடாளுமன்றத்தின் மொத்த எண்ணிக்கையின்     (சமுகமளிக்காதோர் உட்பட)  மூன்றிலிரண்டுக்குக் குறையாத  உறுப்பினர்களால் அதன் சார்பில் வாக்களித்து நிறைவேற்றப்படும் தீர்மானமொன்றினால் அவ்வாறு செய்யுமாறு நாடாளுமன்றம் னாதிபதியை வேண்டினாலொளிய அதனைக் கலைத்தலாகாது.  ஆனால்  நாடாளுமன்றத்தை னாதிபதி நான்கு ஆண்டுகள் ஆறு மாதங்களுக்குக் குறையாத ஒரு காலப் பகுதி முடிவுறும் முன்னர் கலைக்க வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தில் 150 உறுப்பினர்கள் அந்த நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும் சாத்தியமாகும். 

    Article 70.(1) of the amended Constitution restricted the power of the President to dissolve Parliament. It now provides that “the President shall not dissolve Parliament until the expiration of a period of not less than four years and six months from the date appointed for its first meeting, unless Parliament requests the President to do so by a resolution passed by not less than two-thirds of the whole number of Members (including those not present), voting in its favour.” Thus, Parliament can now be dissolved by the President in the first four and a half of years of its term only if 150 Members of Parliament so request by a resolution passed in Parliament. The wording is clear and unambiguous.

ஆனால் பல சட்டவாதிகள் உறுப்புரை 33 (2)  இன் கீழ் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரத்துக்கு எந்த மட்டுப்படுத்தலும் இல்லை என வாதிடுகிறார்கள்.  இந்த உறுப்புரை  என்ன சொல்கிறது?

33(2)(இ) அரசியலமைப்பினால் அல்லது வேறேனும் எழுத்திலான சட்டத்தினால் னாதிபதிக்கு வெளிப்படையாக அளிக்கப்பட்ட அல்லது சுமத்தப்பட்ட  அல்லது குறித்தொதுக்கப்பட்ட தத்துவங்களுக்கும், கடமைகளுக்கும், பணிகளுக்கும் மேலதிகமாக னாதிபதி பின்வரும் தத்துவங்களை உடையவராதல் வேண்டும், 

(அ) …………………………………..

(ஆ)……………………………………..

 (இ)  நாடாளுமன்றத்தைக் கூட்டுதல், அமர்வு நிறுத்தல் அத்துடன் கலைத்தல்,

உறுப்புரை 33 (2) (இ) உறுப்புரை 70 யை மேவுவதாக  வாதிடுகிறார்கள். உறுப்புரை 33 னாதிபதியின் பொதுவான அதிகாரங்களை சொல்கிறது.  னாதிபதிக்கு உள்ள கலைத்தல் அதிகாரத்தை எப்படிப் பயன்படுத்தப்படலாம் என்பதை உறுப்புரை 70 சொல்கிறது. நாடாளுமன்றத்தைக் கலைப்பதாயிருந்தால்  நாலரை ஆண்டுகள் முடிய வேண்டும். அதற்கு முன் கலைக்கப்பட வேண்டும் என்றால் நாடாளுமன்றம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். உறுப்புரை 70.(1)  நாடாளுமன்றத்தைக் கலைக்கும்  னாதிபதியின் அதிகாரத்தை   மிகத்  தெளிவாகக் கட்டுப்படுத்துகிறது.

கடந்த மார்ச் 8 இல்  உள்ளூராட்சி மன்றங்களுக்கு நடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் மக்கள் பொதுசன முன்னணி (மபொமு) அமோக வெற்றி பெற்றிருந்தது. மொத்த வாக்குகளில் 40.47 விழுக்காடு அந்தக் கட்சிக்கு விழுந்துள்ளது. அதே சமயம் ஐக்கிய தேசிய முன்னணிக்கு (ஐதேமு) 29.42 விழுக்காடும்  னாதிபதி சிறிசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு (ஐமசுகூ) 12.10 வாக்குகளும் விழுந்தன. 

அதி தீவிர சிங்கள – பௌத்த தேசியவாதம் பேசும் மபொமு + ஐமசுகூ விழுந்த வாக்குகளின் விழுக்காடு 52.57 விழுக்காடாகும்.  இதனால் தென்னிலங்கையில் சிங்கள – பௌத்த தீவிரவாத சக்திகளின் கை ஓங்கிவிட்டது. இந்தச் சக்திகளே பிரிந்திருந்த  மஹிந்தாவையம் சிறிசேனாவையும்  ஒட்டி உறவாட வைத்துள்ளன. இந்தக் கைங்கரியத்தை மல்வத்தை, அஸ்கிரிய பௌத்த மகா தேரர்கள்   முதல் சாதாரண தேரர்கள் வரை செய்து முடித்துள்ளார்கள்.

இலங்கையில் புதிய அரசியலமைப்பு மாதிரி சட்ட மூலத்தை தயாரிப்பது குறித்து அது தொடர்பாக பௌத்த மகா சங்கத்தினருக்கு தெரியப்படுத்தி அவர்களின் கருத்துக்களும்  ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேனா எப்போதும்  வலியுறுத்தி வந்திருந்தார்.

புதிய அரசியலமைப்பு அல்லது தற்போதைய அரசியலமைப்பு மாற்றம் ஏதுவாயினும் தற்போதைக்குத் தேவையில்லை என பௌத்த உயர் பீடத்தினரான மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட பௌத்த மகா சங்கத்தினரால் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டிருந்தது.கடந்த ஒக்ரோபர் 25 (வியாழக்கிழமை) அன்று  மாலை கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் பௌத்த மகா சங்கத்தினருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்குமிடையில் சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய அரசியலமைப்பு தொடர்பாக எந்தவோர் இறுதி ஆவணமும் தயாரிக்கப்படவில்லை என்றும், புதிய அரசியலமைப்பு குறித்து தற்போது கலந்துரையாடல் ஒன்று நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

மேலும், ” அரசினால் அத்தகைய சட்ட மூலமொன்று தயாரிக்கப்படுமாயின் நாட்டின் எதிர்கால நன்மை மற்றும் ஸ்திரத்தன்மை தொடர்பாக ஆழமாக ஆய்வு செய்யப்பட்ட பின்னரே அது தயாரிக்கப்படும் ” என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

இந்தச்  சந்திப்பில் நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் சமயம் தொடர்பாக மகா சங்கத்தினரால் கருத்துக்களும் ஆலோசனைகளும் முன் வைக்கப்பட்டு அது தொடர்பான முன் மொழிவுகளும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டது.

“நான் தேர்தலில் தோற்றிருந்தால் நானும் எனது குடும்பமும் கொலை செய்யப்பட்டு ஆறடிக் குழியில் அடக்கம் செய்யப்பட்டிருப்போம்” என்று சொன்ன சிறிசேனா, இன்று அதே கூட்டத்தில் சேர்ந்திருக்கிறார். இதனைவிடக் கொடுமை வேறொன்றும் இருக்க முடியாது. அது மட்டுமல்ல ஜனாதிபதி நாற்காலியில் உட்கார வைத்த சக்திகளை அவர் மறந்து விட்டார். இன்று அவர்களைத் தனது தனது பரம எதிரியாகப் பார்க்கிறார். அவர்களை ஒழித்துக் கட்டிவிடத் துடிக்கிறார்.

மேலே குறிப்பிட்டவாறு கடந்த ஒக்ரோபர் மாதம் 26 ஆம் நாள் ரணில் விக்கிரமசிங்கவை வீட்டுக்கு அனுப்பி விட்டு தனது பரம எதிரியான மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக சத்தியப் பிரமாணம்  செய்து வைத்தார். அந்த நாள் ஒரு வெள்ளிக்கிழமை.

இதனை உலக நாடுகள் கண்டித்தன. அந்த நியமனம்  அரசியல் யாப்புக்கு  எதிரானது எனக் கூறி ஜனநாயக விழுமியங்களைக் காப்பாற்றுமாறு உலக நாடுகள்  ஜனாதிபதி சிறிசேனாவிடம் கேட்டுக் கொண்டன.

ஆனால் ”கெடு குடி சொல்  கேளாது” என்பது போலவும் ஒட்டக் கூத்தன்  பாட்டிற்கு இரட்டைத் தாள்ப்பாழ் என்ற பழமொழிக்கு ஒப்ப இரண்டு வாரம் கழித்து நவம்பர் 9 ஆம் நாள் இரவோடு இரவாக நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டார்.  அந்த நாளும் ஒரு வெள்ளிக்கிழமை.

ஆனால் இந்த முறை அவரது சட்ட விரோதமான கலைப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்ல  முடிவு செய்யப்பட்டுள்ளது.

”அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாகும்” என்பது தமிழர்களது ஆழமான  நம்பிக்கை.

Share the Post

You May Also Like