பாராளுமன்றம் குறையாகக் கலைக்கப்பட்டமைக்கு சுயநல அரசியல், அதிகார மோகம் என்பனவே காரணம்…

(முன்னாள் பா.உ ஞா.ஸ்ரீநேசன்)

அரசியல் சந்தையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் விலை பேசப்பட்டார்கள். எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒருவரைத் தவிர எவரும் விலைபோகவில்லை. எங்களையும் வலைத்துப் போட்டிருந்தால், நாங்களும் எடுபிடிகளாகப் பணத்தைப் பெற்றுக் கொண்டு சென்றிருந்தால் தற்போது இந்தப் பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருக்காது. சுயநல அரசியல், சுயபய அரசியல் மற்றும் அதிகார மோகம் என்பனவே பாராளுமன்றம் இவ்வாறு குறையாகக் கலைக்கப்பட்டமைக்கு முக்கிய காரணம். என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் பிரமி கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற புலமைப் பரிசில் சித்தி பெற்ற மாணவர்களைக் கௌரவித்துப் பாராட்டும் நிகழ்வில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரப் பிரதி முதல்வர் க.சத்தியசீலன் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

60 மாதங்கள் 05 நாட்கள் இருக்க வேண்டிய இந்தப் பாராளுமன்றம் 38 மாதங்களில் குறை பிரசவம் என்ற அடிப்படையில் கலைக்கப்பட்டு விட்டது. 22 மாதங்களுக்கு முன்பே இது கலைக்கப்பட்டு விட்டது. சுயநல அரசியல், சுயபய அரசியல் மற்றும் அதிகார மோகம் என்பனவே பாராளுமன்றம் இவ்வாறு குறையாகக் கலைக்கப்பட்டமைக்கு முக்கிய காரணம்.

எமக்காக வரையப்பட்ட புதிய அரசியல் யாப்பு. மிக நீண்ட காலமாக அமைக்கபப்பட்டு வழிநடத்தல் குழுவினால் இம்மாதம் 07ம் திகதி அறிக்கை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட இருந்தது. சிறுபான்மை இனத்திற்குத் தீர்வாக அமையப் போகின்ற அரசியல் யாப்பினை நடைமுறைப்படுத்த விடக் கூடாது என்ற பேரினவாதச் சிந்தனையும், சிறுபான்மை இனத்திற்கு எந்தவொரு அரசியற் தீர்வும் கிடைக்கக் கூடாது என்ற ஒரு வடிகட்டிய வக்கிர புத்தியும் கூடக் காரணமாக இருக்கின்றது.

அத்துடன் பல பாரிய மோசடியுடன் தொடர்புடைய மோசடிக்காரர்களுக்கும், படுகொலைக் காரர்களுக்கும் தண்டணை கொண்டுக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் பல விசேட நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. இந்த விசேட நீதிமன்றங்கள் தங்கள் விசாரணைகளை நடாத்திக் கொண்டிருந்ததது. பலர் சிறைக்குள் செல்ல வேணடடிய நிர்ப்பந்தங்களில் காணப்பட்டார்கள். இதனைத் தடுப்பதற்கு இந்த நல்லாட்சி அரசாங்கத்தை விட்டுவிடக் கூடாது என்கின்ற காரணமும் உண்டு.

இந்த விசேட நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டவர்கள் யார் என்பதை மக்கள் ஊடகங்கள் வாயிலாக அறிந்திருப்பீர்கள். அவர்கள் மிகமிகப் பிரபலமான புள்ளிகள். இதன் பிரகாரம் இந்த விசேட நீதிமன்றங்களைத் தடுக்க வேண்டும், அரசியல் யாப்பினைத் தடுக்க வேண்டும், இனப்பிரச்சனைக்கான தீர்வினைக் கொடுக்கக் கூடாது, விசேட நீதிமன்றங்கள் மூலம் சில கௌரவப் பிரஜைகள் என்று சொல்லப்படுபவர்கள் சிறைக்குள் தள்ளப்படக் கூடாது என்கின்ற காரணங்களால் தான் இந்த பராளுமன்றத்தை மிகவும் அவசரமாகக் கலைத்தார்கள்.

பாராளுமன்றம் கலைக்கப்பட முன்னர் அரசியல் சந்தையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் விலை பேசப்பட்டார்கள். எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒருவரைத் தவிர எவரும் விலைபோகவில்லை. எங்களிடமும் வந்தார்கள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி மற்றும் பல வரப்பிரசாதங்களைத் தருவதாகவும் கூறினார்கள். நாங்கள் சொன்னோம் எங்களுக்கென்று ஒரு கட்சி இருக்கின்றது. எமக்கு ஒரு தலைமை இருக்கின்றது. கட்சியின் தலைமை எடுக்கின்ற முடிவை மீறி கூரையைப் பிய்த்துக் கோடி கோடியாகக் கொட்டினாலும், எந்த அமைச்சுப் பதவியைத் தருவதாகச் சொன்னாலும் நாங்கள் வரமாட்டோம். என்று வந்த தூதுவர்களுக்கு நாங்கள் பதில் சொல்லி அனுப்பி வைத்தோம்.

எனவே எங்களை வலைத்துப் போட்டிருந்தால், நாங்களும் எடுபிடிகளாகப் பணத்தைப் பெற்றுக் கொண்டு அங்கு சென்றிருந்தால் தற்போது இந்தப் பாராளுமன்றம் கலைக்கப்படாமல் இருந்திருக்கும். எங்களைப் போலி அமைச்சர்களாக அமர்த்த நினைத்தார்கள். எங்களில் ஐந்து, ஆறு பேரையாவது எடுக்கலாம் என்று பார்த்தார்கள் ஒன்று மட்டும் கழன்றது மற்றைய ஒருவரும் கழறவில்லை. இதன் விளைவாகத் தான் பாராளுமன்றம் குறை மாதத்தில் கலைக்கப்பட்டது.

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கின்றதோ அது நன்றாகவே நடக்கின்றது. எது நடக்க இருக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கும். ஒரு பிரச்சினை வரும் போது தான் ஒருவரின் குணங்கள், கோலங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். தற்போது நாங்கள் சிலரைக் கற்றுக் கொள்வதற்கு இந்த அரசியற் சந்தை எங்களுக்கு ஒரு வழிகாட்டியிருக்கின்றது. பணம் கொடுத்தல், பதவி கொடுத்தல், பயமுறுத்தல், பணயம் வைத்தல், படுகொலை என்கின்ற அரசியலுக்கு நாங்கள் ஒருபோதும் அடிபணியப் போவதில்லை என்று தெரிவித்தார்.

Share the Post

You May Also Like