அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக விவசாயிகள் மற்றும் மீனவர்கள் பாதிப்பு – அரசாங்கம் அவசர நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்

கடந்த ஒரு வார காலமாக இடையறாது பெய்துவரும் அடைமழை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் கடற்றொழில், நன்னீர் மீனவர்கள், அன்றாடம் கூலி வேலை செய்து தமது ஜீவனோபாயத்தை ஓட்டுகின்ற பாமர மக்கள் இந்த மழை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கம் அவசர நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்.

இவ்வாறு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்தில் கேட்டுள்ளார். அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதை போன்று இன்று அம்பாறை மாவட்ட நெற்செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காட்டு யானைகளின் அச்சுறுத்தல்கள் ஒருபுறம், நெற்செய்கையைப் பாதிக்கும் நோய்த்தாக்கங்கள் மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் கடன் சுமைகள் என்பவற்றுக்கு மத்தியில் வாழும் இவர்கள் தமது நெல் அறுவடையினை மேற்கொள்வதற்கு தயாராகி இருந்த வேளையில் மீண்டும் அடை மழை ஏற்பட்டுள்ளது. இதனால் விளைந்து முற்றிய நெற்கதிர்கள் நிலத்தோடு சாய்ந்து கிடக்கின்றன. வயல் நிலங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இந்நிலையில் இவர்கள் இன்று பேதலித்து செய்வதறியாது போட்ட முதலையும் பெறமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதே வேளை நெல்லை கொள்வனவு செய்கின்ற இடைத்தரகர்கள் நெல்லின் விலையை கணிசமாக குறைத்து கொள்வனவு செய்கின்றனர். இதுவும் நெற்செய்கையாளர்களுக்கு விழுந்த பாரிய இடியாகும்.

இவை ஒரு புறம் இருக்க சிறுபோக நெற்செய்கையை ஆரம்பிப்பதற்கான பணிகளை தொடங்கவிருந்த வேளையில் வயல் நிலங்கள் மழை வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இதே போன்று தொடர் மழை காரணமாக மீனவர்களும் அன்றாடம் கூலி வேலை செய்கின்ற ஏழை மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே அரசாங்கம் சொல்லொண்ணா இழப்புக்களைச் சந்தித்துள்ள நெற்செய்கையாளர்களுக்கும் ஏனையோருக்கும் மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்களை அனுமானித்து காலம் தாழ்த்தாது நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் உருக்கமான கோரிக்கையினை பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சார்பில் முன்வைத்துள்ளார்.

Share the Post

You May Also Like