சர்வதேச நீதிப்பொறிக்குள் சிக்குமா இலங்கை அரசு?

ஐக்கியநாடுகள் மனித உரிமைக் கவுன்ஸிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு இலங்கை அரசு மூன்றாவது முறையும் இணை அனுசரணை வழங்கியுள்ளது. தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அரசு தவறும் பட்சத்தில் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு அல்லது முழுமையான சர்வதேச நீதிப்பொறிமுறையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெனீவாவில் இருந்து வந்த சூட்டோடு நேற்று நாடாளுமன்றத்தில் முழங்கித் தள்ளியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.

இதுவரை காலமும் போலித்தேசியவாதிகள் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்தவேண்டும் நிறுத்தவேண்டும் என்று கத்தியபோது, சுமந்திரன் மௌனம் காத்தார். முடிந்தால் அவர்கள் அதைச் செய்யட்டும் நாம் தடுக்கவில்லை என்று குறிப்பிட்டார். பின்னர் ஒரு கட்டத்தில் அவர்களே குறிப்பிட்டார்கள், சுமந்திரன் நினைத்தால் இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்குக் கொண்டு செல்லலாம் என்று. இன்று அது நிஜமாகும்போல் தெரிகின்றது.

சர்வதேசம் என்பது நாம் நினைந்தமைபோல் காரியமாற்றுவது கடினம். சர்வதேசத்தின் முன் காரியமாற்ற மிகுந்த சாணக்கியம் தேவை. 2009 ஆம் ஆண்டு ஐ.நா. அவையில் அனைத்து நாடுகளும் சேர்ந்து இலங்கைக்கு பாராட்டுத் தெரிவித்தன பயங்கரவாதத்தை ஒழித்தமைக்காக என்று. பின்னர் 2015 செப்ரெம்பரில் இலங்கைமீது போர்க்குற்ற விசாரணை தீர்மானமாக 30/1 இல் கொண்டுவரப்பட்டு இலங்கை தானும் அதற்கு இணை அனுசரணை வழங்கி பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பின்னர் 2017 ஆம் ஆண்டு ஒக்ரோபரில் 34/1 இல் அத்தீர்மானம் சில திருத்தங்களுடன் மீண்டும் கொண்டுவரப்பட்டு அவற்றில் குறிப்பிடப்பட்ட சரத்துக்களை இலங்கை நிறைவேற்ற 2 வருட சர்வதேச மேற்பார்வைக் காலமும் வழங்கப்பட்டது. ஆனால், 2019 இல்  இலங்கை தொடர்பான ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் கூறப்பட்டமைபோன்று, சில சில நகர்வுகளை மட்டும் இலங்கை முன்னெடுத்துள்ளதே தவிர, பெரியளவில் எதனையும் நிறைவேற்றவில்லை.

இந்தநிலையில் ஜெனீவாவிலிருந்து இலங்கை வரமுன்னர், ஜெனீவாவில் வைத்து  தமிழ் மக்களின் பேச்சாளர் எம்.ஏ..சுமந்திரன் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கையில், ‘ஐ.தே.க பொய்யுரைத்தது’ என்றும், ‘கூட்டமைப்பின் பதிலடியை ஐதேக விரைவில் எதிர்கொள்ளும்’ என்றும் தெரிவித்திருந்தார். இலங்கை மீண்டு நாடாளுமன்றுக்குச் சென்று வரவு – செலவுத் திட்டத்தில் விவசாய அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில், ”சர்வதேச நீதிப் பொறிக்குள் அரசை சிக்க வைப்போம்” என்று ஆணித்தரமாகக் கூறிய சுமந்திரன், ஜெனீவாவில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஆற்றிய உரையையும் முற்றாக நிராகரித்துள்ளார். அப்போ குற்றவியல் நீதிமன்றில் இலங்கையை நிறுத்துவதுதான் சுமந்திரன், ஐ.தே.கவுக்குக் கொடுக்கும் பதிலடியோ….? தெரியவில்லை.

சுமந்திரனின் கருத்து நிஜமாகுமா?
இல்லை உணர்ச்சி வெளிப்பாடா..?

”சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையை நிறுத்துவோம்” என்று, என்றுமில்லாதவாறு – குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும் என்று போலித் தேசியவாதிகள் கூறும்போது பல வியாக்கியாணங்கள் கற்பிக்கும் சுமந்திரன் – இப்போ, தானே இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துவோம் என்கின்றாரே? இவர் சொன்னால் நடக்குமா? முதல் இவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துவதற்கு வாக்கெடுப்பு ஐ.நா.வில் நடத்தப்படவேண்டும் என்றாரே! இவர் புத்திபேதலித்து உழறினாரா? அல்லது சொன்னது நிஜம்தானா….? என்ற கேள்விகள் பலரது மனதையும் நெருடும்.

சுமந்திரன் மற்றவர்கள் போன்று ”எடுத்தோம் கவிழ்த்தோம்” என்று செயற்படுபவர் அல்லர். மிகவும் நிதானமாகச் சிந்திப்பவர். பிறர் கருத்தைக் கணக்கெடுக்காதவர். தான் நகர்த்தும் ஒவ்வோர் அடியையும் மிகவும் நிதானமாகவும் நேர்த்தியாகவும் வைப்பவர். ஒரு கருமத்தை ஆற்றிவிட்டு பின்னர் அதற்காக வருத்தப்படுபவர் கிடையா. ஒட்டுமொத்தத்தில் அவர் மெல்லெனப் பாயும் தண்ணீர். நான் எதற்காக மெல்லெனப் பாயும் தண்ணீர் என்கிறேன் என்றால், தமிழில் ஒரு பேச்சுவழக்கு உண்டு, ”மெல்லெனப் பாயும் தண்ணீர் கல்லையும் ஊடறுத்துப் பாயும்’‘ என்று. அவர் நிச்சயம் கல்லை ஊடறுக்கும் தண்ணீர் போன்ற ஆற்றல் படைத்தவர். சர்வதேசத்தின் ஒவ்வொரு நகர்வையும் அவதானித்து, தமிழ்மக்கள் சார்பான தனது நகர்வை நகர்த்துபவர். அவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையை நிறுத்துவேன் என்றால் நிச்சயம் அதில் அர்த்தம் இருக்கும்.

பக்க அறையில் பகட்டுக்கு
பேசுபவர் அல்லர் சுமந்திரன்!

ஐ.நா. மாநாடு என்றதுமே இங்கிருந்து பெரும் பட்டாளம் படை எடுக்கும். மக்களும் நம்புகின்றார்கள், இவர்கள் ஐ.நா.வில் எமது பிரச்சினைகள் தொடர்பில் ஓங்கிக் குரல் கொடுக்கின்றார்கள் என்று. வெளிநாடுகளில் உள்ள சில புலம்பெயர் உறவுகள், கிடக்கின்ற பண்த்தை என்ன செய்வது என்று அறியாது இங்குள்ள – மக்களால் நிராகரிக்கப்பட்ட – போலித் தேசியம் பேசும் – இந்த முட்டாள்களை, ஏதோ பெரிய அரசியல் தலைவர்கள் -அறிவுடையோர்  – என்று நம்பி அழைப்பார்கள்.

ஐ.நா. மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள உறுப்பு நாடுகள் மட்டும்தான் பங்குகொள்ளலாம். அரசாங்கத்தால் நியமிக்கப்படுகின்ற அரச பிரதிநிதிகள் மாத்திரம்தான் பங்கு கொள்ளலாம். நாம் அரசாங்கம் அல்லவே! அரச பிரதிநிதிகள் அல்லரே! இங்கிருந்து படையெடுக்கும் இந்த போலித் தேசியவாதிகள் புலம்பெயர் தமிழன் ஒருவர் அங்கு சிந்திய வியர்வையில் உழைத்த பணத்தில் ஓசியில் சென்று, அவர்களின் பணத்தில் பக்க அறை ஒன்றை எடுத்து, கூட்டத்தொடருக்கு வந்த சர்வதேச பிரதிநிதிகளை விருந்துக்கு அழைத்து, தாம் ஏதோ ஆற்றுகின்றோம் – மக்களின் பிரச்சினையை உரைக்கிறோம் – என்று புளுடா விடுவார்கள். மக்களும் அதை நம்புவார்கள். இந்தமுறை இந்த படைபட்டாளம் மஹிந்தவுக்கு ஆதரவாக ஜெனீவா சென்றது. மஹிந்த – மைத்திரி தரப்பு ”கால அவகாசம் வழங்கக்கூடாது” என்றது. இந்தத் தரப்பும் பக்க அறைகளில் கூட்டங்களை ஒழுங்குபடுத்தி ”சர்வதேச மேற்பார்வைக் காலம் வழங்கக் கூடாது” என்றது.

இந்தத் தரப்புக்கள் படையெடுப்பதைப் பார்த்து எமது மக்களும் விடயம் புரியாமல் சம்பந்தன், சுமந்திரன், மாவை மற்றும் தமது பிரதிநிதிகள் எவரும் போகவில்லை. இவர்களுக்கு இந்த விடயத்தில் அக்கறை இல்லை என்று, போலித் தேசியவாதிகளின் கருத்தைக் கேட்டு கூட்டமைப்புத் தலைமைகளைக் குறைகூறுவர். அவர்கள் மீது தப்பில்லை.

ஆனால், சுமந்திரன் மற்றவர்கள் போன்று வெளியில் படம் காட்டித் திரிபவர் அல்லர். வாக்குக்காக அலைபவரும் அல்லர். தனக்கு சரியெனப்பட்டதை நேர்த்தியாக ஆற்றுபவர். ஒவ்வொரு ஐ.நா. கூட்டத் தொடரிலும் சகல நாடுகளில் இருந்து பங்குபற்றும் பிரதிநிதிகளுடன் இலங்கை தொடர்பில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தொலைபேசியில் உரையாடி காரியத்தைச் சாதித்து வந்தார். இம்முறை சில முக்கிய விடயங்களை நேரில் பேசவேண்டும் என்பதற்காக நேரில் சென்று காரியத்தைச் சாதித்தார். அதன் வெளிப்பாடு 2017 ஆம் ஆண்டு 17 வாக்குகள் எமக்கு எதிராக வீழ்ந்தன. இம்முறை தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றம்.

 

இலங்கையின் மழுப்பல்

ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட சில தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு, அரசமைப்பில் மாற்றம் செய்யவேண்டும். சில சரத்துக்கள் மாற்றப்படவேண்டும் என்று இலங்கை தற்போது கூறுகின்றது. ஆனால், இந்தத் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய நேரத்தில் – 2015 இல் – சர்வதேச பொறியில் இருந்து – அதன் கடும் சூட்டிலிருந்து – தப்பிப்பதற்காக இணை அனுசரணையை வழங்கியுள்ளது. ”ஆறின கஞ்சி பழங் கஞ்சி” என்பார்கள். இப்போ அந்தப் பிரேரனையை நீத்துப்போகும் படியாக இலங்கை செயற்படுகின்றது.

பொங்கி எழுந்தார் சுமந்திரன்!

இலங்கைச் சட்டங்கள் மற்றும் சர்வதேச சட்டங்களை மதிக்கின்ற சுமந்திரன், இலங்கையில் ஜனாதிபதியும் மஹிந்தவும் சேர்ந்து, அரசமைப்புக்கு முரணாக ஒக்ரோபர் புரட்சியில் செயற்பட்ட விதத்துக்கே இலங்கை நீதித்துறைறை நாடி சட்டத்தையும் அரசமைப்பையும் காப்பாற்றியவர் சுமந்திரன். ரணில் விக்கிரமசிங்கவோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியோ நம்பிக்கையிழந்து இருந்த நேரத்தில், தான் மனுதாரராக கனக ஈஸ்வரன் ஊடாக வழக்குத் தாக்கல் செய்ய முடிவெடுத்தார் சுமந்திரன். இதைக் கேள்வியுற்ற சம்பந்தன் ஐயா, தன்னை பிரதான மனுதாரராக்கும்படி கேட்டமைக்கு அமைவாக, அவரது பெயரில் தானும் ஓர் சட்டவாளனாக நின்று, முதலாவது மனுவாக சம்பந்தன் ஐயாவின் மனுவை தாக்கல் செய்து சிரேஷ்ட சட்டத்தரணி கனக ஈஸ்வரனுடன் சேர்ந்து வழக்காடி மாண்டுபோன ஜனநாயகத்தை மீள உயிர்ப்பித்தார். இது வரலாற்றில் ஒரு பெரும் சாதனையாகப் பதியப்பட்டது. வடக்கு மக்கள் மட்டுமல்லர் தென்னிலங்கை, சர்வதேசம் என அனைவரும் சுமந்திரனைப் பாராட்டத் தவறவில்லை.

இவ்வாறான சட்ட நுணுக்கங்களில் இலங்கைச் சட்டம் மட்டுமன்றி, சர்வதேச சட்டங்களிலும் தேர்ச்சிபெற்ற சுமந்திரனுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையை எவ்வாறு கட்டுப்போட்டு இழுத்துச் செல்வதென்பதும் நன்கு தெரியும். அதனால்தான், அவர் அந்த உரையை நேற்று நாடாளுமன்றில் பொங்கியெழுந்து ஆற்றியிருக்கின்றார்.

போர்க்குற்ற விசாரணை முடிந்துவிட்டதா…?

போர்க்குற்ற விசாரணை முடிந்துவிட்டதா? முடியவில்லையா? சுமந்திரனே ஒவ்வொரு நேரம் ஒவ்வொருவிதமாகப் பேசுகின்றாரே என்றெல்லாம் போலித் தேசிய வாதிகள், தெளிவின்றி, தாமும் குழம்பி மக்களையும் குழப்பி வருகின்றார்கள். உண்மையில் சர்வதேச விசாரணை முடிவடைந்துவிட்டது.

ஐக்கியநாடுகள் சபையால் நியமிக்கப்பட்ட தருஷ்மன், தொரயா, ஒபேட்டின் ஆகியோர் கொண்ட குழுவினர், இலங்கை வந்து இறுதி யுத்தம் இடம்பெற்ற பகுதிகளுக்குச் சென்று, பாதிக்கப்பட்ட மக்களிடம் வாக்குமூலங்களைப் பெற்று, அரசு போர்க்குற்றத்தில் ஈடுபட்டதற்கான சகல ஆதாரங்களையும் திரட்டிச் சென்றுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ, கோத்தா, படைத்தரப்பினர் அந்த அறிக்கையில் குற்றவாளிகளாகக் காணப்படுகின்றனர். அந்த நேரத்தில் அரசுக்கு ஆதரவாகச் செயற்பட்ட ஒட்டுக்குழுக்கள் பற்றியும் அவர்கள் செய்த குற்றங்கள் பற்றியும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, விடுதலைப் புலித் தளபதிகள் சிலரது பெயர்களும் குற்றவாளிகளாக அறிக்கையில் காட்டப்பட்டுள்ளது. ஆனால், அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் தளபதிகள் தற்போது உயிரோடு இல்லை. உயிரோடு இல்லாதவர்களை எவ்வாறு தண்டிப்பது? இருப்பவர்களைத்தானே தண்டிக்க முடியும்! அதன்படி, மஹிந்த, கோட்டா, படைத்தரப்பு என்போர் தண்டிக்கப்படவேண்டியவர்களே!

இதேநேரத்தில், அறிக்கையில் இன்னுமொரு முக்கிய விடயமும் சொல்லப்பட்டுள்ளது. இவர்களை இலங்கை நீதிமன்றத்தின் முன் நிறுத்த முடியாது. இலங்கை தன்னைத்தானே விசாரணை செய்யும்போது பக்கச் சார்புத் தன்மை காணப்படும். சர்வதேச பொறிமுறைக்குட்பட்ட கலப்பு நீதிமன்றத்தின் ஊடாகக் குற்றவாளிகள் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் என்றும் உள்ளது.

தருஷ்மன் தலைமையிலான குழு போர்க்குற்றங்கள் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களிடம் வாக்குமூலங்களையும், இன அழிப்பு நடந்தமைக்கான தடயங்களையும் பெற்று வர்வதேசத்தின் முன் அறிக்கை வடிவில் வழங்கியுள்ளது. விசாரணை முடிவடைந்துள்ளது. இனி நடைபெறவிருப்பது தண்டணைப் பொறிமுறை. அது சர்வதேச கலப்பு நீதிமன்றப் பொறிமுறையாக அமையவேண்டும் அவ்வளவே.

சர்வதேச பொறிமுறை சாத்தியமாகுமா?

இலங்கை அரசு கூறலாம் எமது உள்வீட்டு விடயங்களில் வெளிநாட்டு நீதிபதிகள் தலையிட முடியாது. அதற்கு எமது இலங்கைச் சட்டம் ஏற்புடையதன்று என்று. ஆனால், இந்த விடயத்தை ஐநாவில் கொண்டுவரும்போதே சர்வதேசம் இரண்டு அமெரிக்க சட்ட வல்லுநர்களை அழைத்து இதுதொடர்பில் ஆழ்ந்து – அகன்று – ஆய்ந்து – முடிவெடுத்ததன் பின்னரே 2015 இல் இந்தத் தீர்மானத்தை 30/1 என்ற சரத்தில் கொண்டுவந்தது. பின்னர் 2017 இல் 34/1 என்ற சரத்திலும் தற்போது 40/1 என்ற சரத்திலும் கொண்டுவந்தது. தற்போது ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை மறுத்து உரையாற்றிய இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, மீண்டும் 40/1 தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது எந்தவித எதிர்க் கருத்தும் தெரிவிக்கவில்லையே. தாமும் சேர்ந்து அதற்கு வாக்களித்து ஆதரவு- இணை அனுசரணை வழங்கினாரே! இதில் உண்மையில் சுமந்திரனுக்கு – ஏன் தமிழ் மக்களுக்கு – பாரிய வெற்றி என்னவென்றால், 2017 ஆம் ஆண்டு தீர்மானம் கொண்டுவந்தபோது இலங்கை அனுசரணை வழங்கியிருந்தாலும் 17 நாடுகள் அதனை எதிர்த்திருந்தன. ஆனால், இம்முறை ஒரு நாடு தவறாமல் அதற்கு ஆதரவு வழங்கியிருக்கின்றன.

வெளிநாட்டு நீதிபதிகள்

இங்கு கடமையாற்றலாமா?

இந்த விடயத்தில் இலங்கை, புதுச் சட்டக்கோட்பாடு ஒன்றை சர்வதேசத்தின் முன் வைக்கின்றது. இங்கு சர்வதேச நீதிபதிகள் கடமையாற்ற முடியாது; அது செல்லாது என்கின்றது. சும்மாவா! செல்லும் செல்லாதெல்லாம் அறிந்தவர்தானே எங்கள் செட்டியார் சுமந்திரன்! அவரை இவர்கள் சட்டத்தைக் காட்டி ஏய்க்காட்ட முடியுமா?

இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அவ்வாறான ஒரு சட்ட ஏற்பாடு உள்ளது. ஆனால், இலங்கையில் அவ்வாறான ஏற்பாடுகள் எதுவும் இல்லை. இது தொடர்பில் இன்று ‘காலைக்கதிர் ‘பத்திரிகையின் ஆசிரியர் சிரேஷ்ட ஊடகவியலாளர் பட்டம்பெறாத சட்ட வல்லுநர் ந.வித்தியாதரனும் ”இனி இது இரகசியம் அல்ல…!” பகுதியில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதம நீதியரசராக இருந்த சிராணி பண்டாரநாயக்க சட்டவிரோதமாக, தமது இஷ்டத்துக்கு செயற்படத் தவறிய காரணத்தால் மஹிந்த ராஜபக்ஷவால் சட்டத்துக்கு முரணாக பதவியில் இருந்து தூக்கப்பட்டார். அந்த நேரத்தில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிக்கு நம்பிக்கைக்குப் பாத்திரமாகவும், நெருக்கமானவராகவும் இருந்த விஜயதாச ராஜபக்ஷ, அப்போது எதிரணியில் போய் இருந்தபடி தனிநபர் பிரேரணை ஒன்றை முன்மொழிந்து கொண்டு வந்தார். அது நீதிபதிகள், நீதியரசர்கள் போன்றோரின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை செய்வதற்கான ஒரு நீதிக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு வழிசெய்யும் சட்டமூலம் ஆகும்.

அந்தச் சட்டமூலத்தில், இந்நாட்டின் நீதிபதிகள், நீதியரசர்கள் போன்றோரின் நடத்தைகளை விசாரணை செய்யவேண்டுமாயின், வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு விசாரணை செய்யலாம் என்ற வாசகங்கள் – சட்ட ஏற்பாடுகள் – அடங்கியிருக்கின்றன.

இந்த விடயத்தை நாடாளுமன்றில் கோடிகாட்டிய சுமந்திரன், வெளிநாட்டு நீதிபதிகள் இங்குவந்து விசாரணை நடத்த முடியாது எனின், அந்த நேரத்தில் விஜயதாச ராஜபக்ஷ சபையில் கொண்டுவந்த பிரேரணை எவ்வாறு ஏற்புடையதாகும்? என்ற கேள்வியைத் தொடுத்தார்.

ஆக, ஒட்டுமொத்தத்தில் வெளிநாட்டு நீதிபதிகள், நீதி அரசர்கள் இலங்கையில் வந்து , இலங்கை நீதித்துறையுடன் இணைந்து விசாரணைகளை நடத்த ஏலாது என்ற தடையோ, அல்லது நடத்தலாம் என்ற அனுமதியோ இலங்கை அரசமைப்பில் இல்லை. அந்த விடயம் இலங்கை அரசமைப்பில் திறந்த விவகாரமாகவே – தொடப்படாத விடயமாகவே – உள்ளது.ஆகவே, வெளிநாட்டு நீதிபதிகள் இங்குவந்து விசாரணைகளை நடத்தலாம் என்பதே சுமந்திரனின் வாதம். இதனால்தான் நான் சுமந்திரனுக்கு தேசத்தின் குரலுக்கு வழங்கப்பட்ட பட்டத்தை அவ்வப்போது மதியுரைஞர் என்று பாவிக்கின்றமை வழமை.

சுமந்திரனின் இந்தக் கருத்துக்கள் ஆழமானவை. அர்த்தம் மிக்கவை. சட்டத்துக்குட்பட்டவை. நியாயாதிக்கமானவை. இதனால்தான், இறுதியில் போலித் தேசியவாதிகள் கூட ”சுமந்திரன் நிழனைப்பாராகில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்குக் கொண்டு செல்லலாம்” என்று ‘சுடலை ஞானம்’ உரைத்தார்களோ தெரியவில்லை. நான் குறிப்பிட்ட மெல்லெனப் பாயும் தண்ணீர் நிச்சயமாக கல்லை அல்ல கருங்கற்பாறையை ஊடறுத்துப் பாயவிருக்கின்றது. ”அரசியல் பிழைத்தேர்க்கு அறங்கூற்றாகும்”. ‘‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்”. நிச்சயம் இலங்கை சர்வதேசப் பொறிக்குள் சுமந்திரன் ஊடக அகப்பட இருக்கின்றது. அந்தக் கட்டு மாயக் கட்டாகவும் இருக்கலாம். மாந்திரீகக் கட்டாகவும் இருக்கலாம். தமிழ் இன அழிப்பை மேற்கொண்ட மஹிந்த அன்ட் கோ சர்வதேச வலைக்குள் அகப்பட்டு சின்னாபின்னமாகப்போகின்றது என்பது வெள்ளிடைமலை.

தெல்லியூர் சி.ஹரிகரன்

Share the Post

You May Also Like