அற்பர்களுக்குப் பவுசு வந்தால் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பார்களாம்!

 

– நக்கீரன் –

குரு : வா, வா உன்னைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்!

சீடன் : வணக்கம் குருவே! நீங்கள் சொல்வதைக் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது! பொதுவாக குருமார் சீடர்களின் பேச்சைக் கேட்பதில்லை.

குரு : ஸ்ரீலங்காவுக்கு  கால அவகாசம் கொடுக்கக் கூடாது என்று சிலர் தொண்டை வறளக் கத்தினார்கள். இப்போது தீர்மானம் 40-1 நிறைவேறியதை வைத்து த.தே.கூ. ரணில் விக்கிரமசிங்கவின் அரசைக் காப்பாற்றி விட்டதாகச் சிலர் சொல்கிறார்களே…..?

சீடன் : அப்படிச் சொல்கின்றமை தவறு. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்,  கிழக்கிலங்கை பல்கலைக் கழக சமூகங்கள் கூட கால அவகாசம் கொடாதே எனக் கூறி ஆர்ப்பாட்டப் பேரணி, ஊர்வலம்  சென்றார்கள். 40-1 தீர்மானம் நிறைவேற்றப்படாவிட்டால் ஸ்ரீ லங்கா ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மேற்பார்வையில் இருந்து விடுபட்டிருக்கும். ஸ்ரீ லங்கா தூதுக்குழு ”தப்பினோம் பிழைத்தோம்” என தலை, கால் தெரியாத மகிழ்ச்சியோடு வெற்றிகரமாக நாடு திரும்பியிருப்பார்கள்!

குரு : தீர்மானம் 40-1 அப்படி என்ன சொல்கிறது?

சீடன் : தீர்மானம் 40 -1 க்கு ஸ்ரீ லங்கா உட்பட 46 நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ளன! அந்தத் தீர்மானம் என்ன சொல்கிறது என்றால்,  2015 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 30-1 முழுமையாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும். அது தொடர்பான முன்னேற்றம் பற்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்  பேரவையின் ஆணையாளர் ஓர் எழுத்து மூலமான அறிக்கையை மனித உரிமை பேரவையின் 43 ஆவது அமர்விலும் (2020) அதனைத் தொடர்ந்து ஒரு முழுமையான அறிக்கையை 46 ஆவது அமர்வில் (2021) சமர்ப்பிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து பேரவையின் 30-1 தீர்மானம் நடைமுறைப் படுத்தப்பட்டமையையிட்டு ஒரு கலந்துரையாடல் இடம் பெறும்.

குரு : கடந்த காலங்களிலும் இதே மாதிரியான தீர்மானங்களைத்தானே நிறைவேற்றினார்கள். அந்தத் தீர்மானங்களுக்கும் இப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கும் என்ன வேறுபாடு……?

சீடன் :  நல்ல கேள்வி குருவே! ஐக்கிய நாடுகள் மனித உரிமை  பேரவை கடந்த 2012 ஆம் ஆண்டு தொடக்கம் ஸ்ரீ லங்காவுக்கு எதிராகத் தீர்மானங்களை நிறைவேற்றி வந்துள்ளது. அதில் 2015 இல் நிறைவேற்றப்பட்ட 30-1 தீர்மானம் மிக முக்கியமானது. அதில் அதிகாரப் பரவலாக்கல், பாதுகாப்புப் படைகளை சீரமைத்தல், முப்படை வசமுள்ள தனியார் காணிகளை விடுவித்தல், இறுதிப் போரில் ஸ்ரீலங்கா படையினரும் விடுதலைப் புலிகளும் இழைத்த போர்க்குற்றங்கள்,  மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக  ஒரு கலப்பு விசாரணை செய்ய வேண்டும்  என்பவை அடங்கலாக 25 விடயங்கள் வரிசைப்படுத்தப் பட்டிருந்தது. தீர்மானம் 30-1 இல் சிலவற்றை ஸ்ரீலங்கா அரசு நடைமுறைப்படுத்தியிருக்கிறது. சிலவற்றை அரையும் குறையுமாக – பாதிக் கிணறு தாண்டியவன் மாதிரி – செய்து முடித்திருக்கிறது. குறிப்பாக அரசியல் பரவலாக்கல் பற்றி எந்த முன்னேற்றமும் இல்லை. பாதியில் நின்றுவிட்டது. அடுத்து  கலப்பு போர்க்குற்ற விசாரணை பற்றி ஓர் அசைவும் இல்லை. அதனை நடைமுறைப்படுத்த மாட்டோம் என வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பன இம்முறை பகிரங்கமாக அறிவித்து விட்டார்!

குரு : அதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன்,  இரு கட்சிகளும் இணைந்து இருந்த நிலையில் புதிய அரசியல் யாப்பை உருவாக்கமுடியும் என்று நம்பினோம். ஆனால், கடந்த ஒக்ரோபர் 26,  2018 ஆம் திகதி ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன குத்துக்கரணம் அடித்தார். மறுபுறம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கியிடம்  துணிவு இல்லாத காரணத்தால் அந்த முயற்சி தடைப்பட்டுள்ளது என்றுகூட அண்மையில் கூறினாரோ…..?.

சீடன் : சரியாகச் சொன்னீர்கள் குருவே! ஜனாதிபதி சிறிசேன, இன்னும் ஒருபடி மேலே சென்று கலப்பு விசாரணை வேண்டும் என்போர் தேசத் துரோகிகள், அரசியல் யாப்பின் எதிரிகள்  என வசை பாடியுள்ளார்!  ஜனாதிபதி சிறிசேன ஒரு சிங்கள – பௌத்த தீவிர தேசியவாதி. அவர் அப்படித்தான் பேசுவார். அவர், தான் கொடுத்த வாக்குறுதிகளை மறந்து பேசுகிறார். வேடிக்கை என்னவென்றால் வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவனும் இதே பாணியில் கலப்பு விசாரணை வேண்டும் என்போர் தேசத் துரோகிகள் என ஒத்தூதுகிறார். !  அவர் ஜனாதிபதியின் அல்லக்கை ஆச்சே…..!

குரு : ”நக்கினார் நாவிழந்தார்” என்பார்கள். வடக்கு ஆளுநரின் பேச்சும் நடத்தையும் அவர் வகிக்கும் பதவிக்கு பொருத்தமாக இல்லை எனப் பலர் நினைக்கிறார்கள்!

சீடன் : இந்த முறை ஸ்ரீலங்கா சார்பில் ஜெனீவாவுக்குப் போனவர்களில் ஜனாதிபதி சார்பாகப் போனவர்கள் இருவர். ஒருவர் முன்னாள் அமைச்சர் சரத் அமுனுகம. மற்றவர் ஆளுநர் இராகவன். பிரதமர் சார்பாகப் போனவர் வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பன.  கடந்த காலங்களில் நடந்த  30, 34 அமர்வுகளுக்கும் இம்முறை நடந்த 40 ஆவது அமர்வுக்கும்  வேறுபாடு காணப்படுகிறது.

குரு : என்ன வேறுபாடு?

சீடன் :  சென்ற தடவைகள் என்னப்பன் குதிருக்குள் இல்லை என்று சொன்னவன் கதை மாதிரி வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்குத் தொடுநர்கள் அங்கீகரிக்கப்பட்ட சட்டவாளர்கள்,  விசாரணையாளர்களை உள்ளடக்கியதாக ஒரு கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையைப் பகிரங்கமாக நிராகரிக்கவில்லை.   இந்தத் தடவை அந்த நிலைப்பாட்டில் தலைகீழ் மாற்றம். ஸ்ரீ லங்கா அரசு  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்  கலப்பு நீதிமன்ற கோரிக்கையை பகிரங்கமாக நிராகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலையீடுதான்  முக்கிய காரணம்.  ஆனால், 2015 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 30-1 இல்  சில மாற்றங்கள்  – குறிப்பாக கலப்பு அனைத்துலக போர்க்குற்ற விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை நீக்கப்பட வேண்டும் – கொண்டுவர எடுத்த முயற்சி பலிக்கவில்லை.

குரு : தீர்மானம் 40-1 க்கு அனுசரணை வழங்கக் கூடாது அதில் ஸ்ரீ லங்காவின் தூதுவர் இட்ட கையெழுத்தை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று ஜனாதிபதி சொல்லியிருக்கிறாரே….?

சீடன் : அதுதான் அவரது நிலைப்பாடு. இப்போது ஒளிவுமறைவின்றிப் பேசுகிறார்.

குரு :  ஜனாதிபதி சிறிசேனாவினால் ஜெனிவாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வட மாகாண சபையின் ஆளுநர் எக்கச்சக்கமான சர்ச்சையில் சிக்கிக்  கொண்டார் என்று சொல்கிறார்களே…..?

சீடன் :  தீர்மானம் 40-1 க்கு அனுசரணையாக ஸ்ரீ லங்கா தூதுவர் கைச்சாத்திட்டுள்ளமையைத் தான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் அதுபற்றி எதுவும் தனக்குத் தெரியாது என்றும்  மைத்திரிபால சிறிசேன சொல்லுகிறார். போரில் விடுதலைப் புலிகளைப் புறங்கண்ட முப்படையினரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (அரசாங்கம்) காட்டிக்கொடுத்து  விட்டது என அவர்  சீறுகிறார்.  ஜனாதிபதி சிறிசேனவைப் பொறுத்தளவில் இலங்கை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைத் தீர்மானத்துக்கு அனுசரணை வழங்கக் கூடாது, போர்க் குற்றச் சாட்டுக்கள் பற்றி கலப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற  கோரிக்கை  நீக்கப்பட வேண்டும் என்பதே அவரது நிலைப்பாடு.  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இதே கருத்தைக் கொண்டிருக்கிறார்.   வெளிநாட்டு நீதிபதிகள் ஸ்ரீலங்கா  நீதிமன்றங்களில் பங்கு கொள்ள அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் இல்லை என்கிறார்.

குரு :  வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பன என்ன  பேசினார்…..?

சீடன் : வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தனது  உரையில்,  படையினர் மீதான போர்க்குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.  இராணுவம் பொதுமக்களைக் கொலை செய்யவில்லை என்றார்.  ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரது  அலுவலகத்தை ஸ்ரீ லங்காவில்  திறக்க  வேண்டும் என்ற பரிந்துரையை நிராகரித்தார்.   நிலையான காலவரிசையோடு கூடிய ஓர் இடைநிலை செயல்முறைக்கு ஒரு விரிவான மற்றும் முழுமையான மூலோபாயத்தை செயற்படுத்த (இலங்கை) அரசாங்கத்தை ஊக்குவிக்கும் என்ற  யோசனையை நிராகரித்தார். இறுதிக் கட்டப் போரில் படையினர் போர்க்குற்றங்களை இழைக்கவில்லை என்றும் சர்வதேச அளவில் பயங்கரவாத அமைப்பாக பிரகடனம் செய்யப்பட்ட அமைப்புடன்தான் படையினர் போரிட்டனரே தவிர, எந்தவோர் இனத்துடனும் அல்ல என்றும் திலக் மாரப்பன கூறினார். அதைவிடப் போர்க்குற்றங்கள் தொடர்பான நம்பகமான நிரூபிக்கத்தக்க குற்றச்சாட்டுகள் இல்லை என்பதையும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

குரு : ஆனால், போரின் இறுதிக் கட்டத்தின் போதும் அதன் பின்னரும் சில இராணுவ அதிகாரிகள் தமிழ்மக்கள் மீதும்,  சரணடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து சரணடைந்த மற்றும் கைதுசெய்யப்பட்ட போராளிகள் மீதும் போர்க்குற்றங்களைப் புரிந்துள்ளனர். இதற்கான சாட்சியங்கள் என்னிடம் இருக்கின்றன என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா பகிரங்கமாக அறிவித்துள்ளாரே….?

சீடன் :  நீங்கள் சொல்கின்றமை சரியே!  மேலும்  இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் வரவர மோசமாகவுள்ளது. போர்க்குற்றம் இழைத்த இராணுவ அதிகாரிகளுக்குத் தண்டனை வழங்கி, அவர்களை உடன் அரசு சிறையில் அடைக்கவேண்டும்.  அப்போதுதான் ஐ.நாவின் பிடியிலிருந்து இலங்கை தப்பித்துக்கொள்ளலாம். வெளிநாட்டு செய்திச் சேவையொன்றின் கொழும்பு செய்தியாளருக்கு வழங்கிய செவ்வியிலேயே சரத் பொன்சேகா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

குரு :  முப்படையினரும் கைப்பற்றி வைத்திருந்த அரச காணிகள், தனியார் காணிகள் எனக் காணிகள்  கிட்டத்தட்ட  விடுவிக்கப் பட்டுவிட்டன என திலக் மாரப்பன பேசியிருக்கிறாரே?

சீடன் – ஆமாம் குருவே! அப்படித்தான் பேசியிருக்கிறார். ஐ.நா  மனித உரிமைப் பேரவையில் பேசிய  வெளியுறவு  அமைச்சர் திலக் மாரப்பன, 12-03-2019  நாள் வரை   71, 172. 56 ஏக்கர் அரச காணிகளில்  63, 257. 48 ஏக்கர் (88.87 விழுக்காடு) நிலமும்  28,215.29 ஏக்கர் தனியார் காணியில் 26,005.17 ஏக்கர் (92.16 விழுக்காடு) நிலமும் கையளிக்கப்பட்டு விட்டதாம். மொத்தமாக  99,387.85 ஏக்கர் காணியில் 12-03-2019 வரை 89,262.65 ஏக்கர் (89.81 விழுக்காடு) காணி அரச படைகளால் விடுவிக்கப்பட்டு விட்டதாம்! இந்த புள்ளிவிவரத்தின் அடிப்படையில் அரச காணிகளில் 7,915.08 ஏக்கர் (11.12 விழுக்காடு) நிலமும் தனியார் காணிகளில் 2,210.12 ஏக்கர் ( 7.83 விழுக்காடு)நிலமும் ஆக மொத்தம் 10,125.20  ஏக்கர் (10.18 விழுக்காடு) நிலம் மட்டுமே முப்படைகள் வசம் இருக்கின்றனவாம்.

இன்னொரு செய்தி (ஏப்ரில் 06)  2009  ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுமார் 84,675 ஏக்கர் காணிகள் பாதுகாப்பு தரப்பின் கட்டுப்பாட்டில் இருந்தன. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பின்னர் 2019 மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையில், பாதுகாப்பு படைகள் வசம் இருந்து வந்த 84,675 ஏக்கரில் 71,178 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டதிலிருந்து இதுவரை 6,951 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டிகின்றமையுடன், இன்னும் 475 ஏக்கர் விரைவில் விடுவிக்கப்பட உள்ளன எனவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அந்த வகையில் தற்போது படைகள் வசம் 13,497ஏக்கர் காணிகளே உள்ளன எனவும், அவற்றுள் 11,039 ஏக்கர் அரச காணிகள் எனவும் மிகுதி 2,458 ஏக்கர் நிலம் தனியாருக்குச் சொந்தமானவை எனவும்  அரசாங்கம் தெரிவித்துள்ளது.

குரு : வெளியுறவு அமைச்சர் கொடுத்த புள்ளி விவரத்துக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி கொடுத்துள்ள புள்ளி விவரத்துக்கும் இடையில் 3,372 ஏக்கர் காணி வித்தியாசப்படுகிறது?

சீடன் |: நீங்கள் சொல்கின்றமை சரி குருவே!  2015 இல் வலிகாமம் வடக்கில் 23 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய 7,410.5 ஏக்கரும் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 2 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய 370.00 ஏக்கரும் மொத்தம் 6,381.5 ஏக்கர் காணி பாதுகாப்பு வலயம்  என்ற போர்வையில்  இராணுவம் கைப்பற்றி இருந்தது. அதற்குப் பின்னர் தொட்டம் தொட்டமாக சுமார் 3,000 ஏக்கர் காணி  விடுவிக்கப்பட்டது. ஆக வலிகாமம் வடக்கில் மட்டும் 3000 இற்கும் அதிகமான ஏக்கர் காணி விடுவிக்காமல் இருக்கிறது. சரியான புள்ளி விவரங்கள் வடக்கு, கிழக்கில் உள்ள 8 நிர்வாக மாவட்ட செயலகங்கள்தான் தர வேண்டும்.

குரு : வட மாகாண சபை ஆளுநர் சுரேன் இராகவன் பற்றி வரும் செய்திகள் கொஞ்சம் கூடச் சரியில்லை. அவற்றால் தொடக்கத்தில் அவர் பற்றிய பிம்பம் பலத்த அடி வாங்கியுள்ளது என நினைக்கிறேன்!

சீடன் : ஆளுநர்  இடம், பொருள், ஏவல் அறியாமல் கண்டபடி  பேசுகிறார்.  ஸ்ரீ லங்கா தொடர்பான தமது அறிக்கையில் தவறுகள் இருக்கின்றமையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் ஒப்புக் கொண்டார் என்றும்  இதுகுறித்து தமது அதிகாரிகளை எச்சரித்தார் என்றும் ஆளுநர்  கொழும்பு டெயிலி மிறர் நாளேட்டுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார்.அதனை  ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அறிக்கை மூலம் முன்றாக நிராகரித்துவிட்டார்.  ஸ்ரீ லங்கா அரச தரப்புக்  குழுவுடன் நான் நடத்திய கலந்துரையாடல் திரிபுபடுத்தப்பட்டுள்ளமை ஆழ்ந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீ லங்கா தொடர்பான அறிக்கை சரியானதே என்றும் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார் எனவும் ஆணையாளர் தெரிவித்தார்.

குரு : போர்க்காலத்தில் நடந்த போர்க் குற்றங்களை விசாரிக்க ஒரு கலப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட வேண்டும் எனக் கேட்பவர்கள் தேசத் துரோகக் குற்றச்சாட்டில் விசாரிக்கப் பட வேண்டும் என ஆளுநர் சொல்லியிருக்கிறாரே….. ?

சீடன் : ”நாய் வேடம் போட்டால் குரைத்துத்தான் ஆக வேண்டும்”. ஜனாதிபதி சிறிசேனா  பாடிய பாட்டுக்குத்தான் ஆளுநர்  தாளம் போட்டிருக்கிறார். ”நக்கினார் நாவிழந்தார்” என்ற கதைதான். கிளிநொச்சியில் ஓர் உணவகம் வழங்கிய உணவில் புழு இருந்ததாக ஆளுநர் முறைபாடு செய்தார். சம்பந்தப்பட்ட உத்தியோயகத்தர்கள் நீதி மன்றம் சென்று அன்று மாலையே உணவகத்தை மூட உத்தரவு பெற்றுவிட்டார்கள். ஆனால் ஆளுநர் ஒரு நாட்டாமை போல  பொலீஸாரோடு இரவு எட்டு மணிக்குச் சென்று கடையைப் பூட்டிவிட்டார்!

குரு – அற்பர்களுக்கு பவுசு வந்தால் அர்த்த இராத்திரியில் குடை பிடிப்பர் என்ற பழமொழி சரியாகத்தான் இருக்கிறது!

Share the Post

You May Also Like