சுமந்திரன் எம்.பியின் நிதி ஒதுக்கீட்டில் ஒளிர்கின்றது வலி.தெற்குப் பிரதேசம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரனின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவுத் திட்ட நிதியில் 10 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டு 136 எல்.ஈ..டி. மின்குமிழ்கள் கொள்வனவுசெய்யப்பட்டு வலி.தெற்கு பிரதேசத்தின் சகல இடங்களிலும் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதித் தலைவருமான திஜாகராசா பிரகாஷின் வேண்டுகோளுக்கமைவாகவே நாடாளுமன்ற உறுப்பினரால் இந்த மின்குமிழ்களுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வலி.தெற்கு பிரதேச செயலகத்தின் ஊடாக இந்த 10 லட்சம் ரூபா நிதியில் மின்குமிழ்கள் கொள்வனவு செய்யப்பட்டு கட்சியின் மானிப்பாய் தொகுதித் தலைவர் தி.பிரகாஷ், பிரதேச செயலரிடமிருந்து அவற்றைப் பெற்று தற்போது பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றார்.

வலிகாமம் தெற்குப் பிரதேசத்தில் பாகுபாடின்றி சகல முக்கிய சந்திகள், பிரதான வீதிகள், சந்தைகள், விளையாட்டுக் கழகங்கள், பாடசாலைகள், ஆலயங்கள் என அனைத்து இடங்களிலும் இந்த மின்குமிழ்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

இதனால் அந்தப் பிரதேச மக்கள் நாடாளுமன்ற உறுப்பினருக்குத் தமது நன்றிகளையும் முகநூல்கள் வாயிலாக கட்சி பேதமின்றித் தெரிவித்துவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Share the Post

You May Also Like