பொய்யுரைப்பதில் வல்லவர் சுரேஷ்!

நொதேன் பவர் மீதான குற்றச்சாட்டுக்கு மாவை பதில்

பொய்யுரைப்பதில் வல்லவர் சுரேஷ் பிரேமச்சந்திரன். பொய்யுரைப்பது அவருக்குக் கைவந்த கலை. அதனால்தான், நிலத்தடி நீர் மாசு தொடர்பிலும் சகல உண்மைகளும் தெரிந்திருந்தும் அபாண்டமான ஒரு பொய்க் குற்றச்சாட்டை என்மீது அவிழ்த்துவிட்டிருக்கின்றார். என்மீது வழக்குத் தாக்கல் செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டும் அவர், அந்த நேரத்தில் அவரும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்தானே! அவர் வழக்குத் தாக்கல் செய்திருக்கலாமே…!

  • இவ்வாறு நிலத்தடி நீர் பிரச்சினை வடக்கில் ஏற்பட்டபோது வேண்டுமென்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசா மௌனம் சாதித்தார் என்ற குற்றச்சாட்டுடை முன்வைத்து சுரேஷ் பிரேமச்சந்திரன் ‘காலைக்கதிர்’ நாளிதழுக்கு செய்தி வழங்கியிருந்தார். அந்தச் செய்திக்கு மறுப்புத் தெரிவித்து ஊடகங்களுக்கு வழங்கியுள்ள ஊடக அறிக்கையிலேயே மாவை சேனாதிராசா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-

“நிலத்தடி நீர் மாசடைந்த பிரச்சினையின் போது

வேண்டுமென்றே மௌனம் சாதித்தவர் மாவை!

சுரேஸ் பிறேமச்சந்திரன் தாக்குகிறார்”

என்ற தலைப்பில் 16-04-2019 ஆம் திகதிய ‘காலைக் கதிர்’ பத்திரிகையின் 09 ஆம் பக்கத்தில் செய்தி வந்திருப்பதாக அறிந்தேன். அச் செய்தி பற்றி 19-04-2017 அன்று ‘காலைக்கதிர்’ ஆசிரிய பீடத்துடன் தொடர்பு கொண்டு தான் அச் செய்தியைப் படித்தேன்.

இதுவும் ஒரு கட்டுக்கதையாகத் தானிருந்தது. அதைவிட “நொதேன் பவர் நிறுவனத்திடம் மாவை விலைபோயிருந்தமையை காட்டுகின்றன” என்று இன்னொரு பொய்யை மீண்டும் நாக்கூசாமல் அவிழ்த்து விட்டிருக்கிறார். இது அவருக்கு கைவந்த கலை என்பதை அறிவேன்.

21-04-19 அன்று கொழும்பிலும், மட்டக்களப்பிலும் குண்டுவெடிப்புக்களின் விளைவுகளால் பதிலெழுதப் பிந்திவிட்டேன். 22,23/04 மட்டக்களப்புக்கு சென்றுவிட்டேன்.

இப் பொய்களை அவிழ்த்துவிடுவது ஜேர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லருக்கு பொய்யை உண்மை போலாக்கவும், மெய்யை பொய்யாகவும் கூறும் திறமை கொண்டவனாய் விளங்கியவன் கோயபல்லஸ் என்பவன். அந்த கோயபல்ஸ் பாணியில் சுரேஸூம் இப்பொய்களை பிரசாரப்படுத்தி, மக்களை நம்பவைக்க முயற்சிக்கிறார். ஆனால், மக்கள் நம்பமாட்டார்கள். இருப்பினும் பதில் கொடுக்காமலிருக்க முடியாது. அது உண்மை போல் ஆகிவிடும்.

நான் என் வாழ்நாளில் தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சிக்கும் பழக்கம் கொண்டவனல்லன். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தான் சார்ந்த பிரதேசத்திற்கு மின்சாரம் வழங்குமாறு அரசையோ மின்சார அமைச்சரையோ கேட்டிருப்பாராயின் அது ஒரு குற்றமாக இருக்க முடியாது.

வடக்குக்கு மின்சாரம் வேண்டுமென்ற அவசியம் 2007-2009 காலப்பகுதியில் ஏற்பட்டிருக்கலாம், இது போர் நடைபெற்ற உச்ச காலம். இராஜபக்ஷா ஆட்சிக்காலத்தில் மக்கள் போரினால் படும் அவலங்கள், கொலைகள், பட்டினி, மருந்துத் தட்டுப்பாடு பற்றி அரசுக்கெதிராக நாடாளுமன்றத்திற்குள்ளேயே த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டங்கள் நடத்திய காலம். கொத்துக் குண்டுகள், விசவாயுக் குண்டுகள் மக்கள் மீது வீசப்பட்ட காலம். 2009 ஏப்ரல் ஆக இருக்க வேண்டும் எம் மக்களை –தேமாபரிக் குண்டுகள்”, “பொஸ்பரஸ் எரிவாயுக் குண்டுகள்” இராணுவத்தால் மக்கள் மீது வீசப்படுவதாகவும் போரை நிறுத்தி மக்களைக் காக்க வேண்டுமென்றும் டெல்லி சென்று இந்திய மத்திய அரசிடமும் சர்வதேசத்திடமும் வேண்டுகோள் விடுத்த காலம். இச் சம்பவத்தை 2019 வரவு –  செலவுத் திட்டத்தின் போது வெளிவிவகார அமைச்சு விவாதத்தில் மார்ச் 26 இல் நாடாளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சருக்கு முன் நினைவுபடுத்திப் பேசியிருந்தேன். செய்திகள் வெளிவந்திருந்தன. 2007 – 2009 போர்க்காலம் அரசு மீதும் இராஜபக்ஷா, கோட்டாபய மீதும் பகையோடிருந்த காலம்.

அந்த இராஜபக்ஷாவின் காலத்தில் சுரேஸ் பிறேமச்சந்திரன், இராஜபக்ஷாவின் ஆத்மார்த்த ஆலோசகர். தூண்டில் போட்டுக் கொண்டிருந்தவர். தவறுகளிருந்தால் நாடாளுமன்ற உறுப்பினராக ராஜபக்ஷாவிடம் பேசியிருக்கலாம். “நொதேர்ன் பவர்” நிறுவனம் பற்றி பேச்சுக்களிருந்தால் ஆத்மார்த்த நண்பர் இராஜபக்ஷாவிடம் பேசி நிறுத்தியிருக்கலாம். ஆனால், மாவை சேனாதிராசா “நொதேர்ன் பவர்” நிறுவனத்தைக் கொண்டுவர அமைச்சரவைப் பத்திரம் கொண்டுவரும் வரை கடுமையாக வேலை செய்தவர் என்றும் இன்னொரு பொய்யைக் கூறினார். அந்த நிறுவனத்துடனோ, சம்பந்தப்பட்டவர்களுடனோ எந்தப் பேச்சு வார்த்தையிலும் நான் ஈடுபட்டவனல்லன். அந்த நிறுவனத்தை அதிகம் தெரிந்தவனுமல்லன்! தன்னிடம் ஏதோ ஆதாரம் இருக்கிறதாம். அதை வெளிவிடுவது தானே. ஏன் கதை எழுதிக் கொண்டிருக்கிறார்?

ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினை என்னவெனில் 2007 -2012 கால வரையில் தான் வடக்குக்கு மின்சாரம் மேலதிகமாக வழங்கத் தொடங்கினார்கள் மின்சார சபையினர். மின்சார நிலையம் அமைந்திருப்பது சுன்னாகத்தில் வலிதெற்குப் பிரதேசம், “நொதோன் பவர்” நிறுவனத்தினால் வழங்கப்பட்ட மின்சாரம் சம்பந்தப்பட்டதல்ல பிரச்சினை. பிரச்சினை அந்த இயந்திரங்களிலிருந்து “கழிவு ஓயில்” நிலத்தடி நீரில் கலந்து குடிதண்ணீர் மாசடைந்தது என்பது தான், அந்தத் தவறுக்கு அந்த மின்சார நிலையம் “கழிவு ஓயில்” வெளியே விட்ட பொழுது நிலத்தில் செல்லாமல் பாதுகாப்பான கட்டமைப்பை உருவாக்கவில்லை. அதனால் நிலத்தடி நீர் மாசடைந்து மக்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டது என்பது தான் குற்றச்சாட்டு. அது தான் நீதிமன்ற வழக்குகளுமாகும். 2019 உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் “நொதேர்ன் பவர்” மீண்டும் மின்சாரம் வழங்கலாம் ஆனால் கட்டுப்பாடுகளை ஏற்க வேண்டும் என்று கூறியிருக்கிறது. மக்களுக்கு நட்டஈடு வழங்கவும் கட்டளையிட்டிருக்கிறது.

அடுத்து மின்சார இயந்திரத்தின் கழிவு ஒயிலால் நிலத்தடி நீர், கிணற்று நீர் மாசடைந்தது. அது ‘நொதேர்ன் பவர் நிறுவனத்தின்” பாரதூரமான ஒரு குற்றமே தான். அந்த இயந்திரத்தோடு, இலங்கை மின்சார சபை (CEB)) “உத்தர ஜனணி” என்றும் “அக்கிறிக்கோ ” என்றும் மூன்று இயந்திரங்கள் மின்சாரம் வழங்கியிருக்கின்றன. அந்தப் பிரதேசம், மற்றும் வலி-வடக்குப் பிரதேசங்கள் முழு இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து வந்தன. கழிவு ஓயிலால் தான் கிணற்று நீர் மாசடைந்தது. இதற்கெதிராக வைத்தியர்கள், புத்திஜீவிகள் போராட்டம் நடத்தினர், மாவை சேனாதிராசா மௌனம் காத்தார். அவர் வலிவடக்கைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்றும் சொல்லியிருக்கிறார் சுரேஸ், மாவை சேனாதிராசா யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், நான் அறிந்து கொண்டது அந்த மின்சார நிறுவனத்திற்கு முன் சிவன் கோவிலடியில் நடந்த போராட்டத்தில் நாம் கலந்து கொண்டிருக்கிறோம், எனது போராட்ட வரலாற்றில் நான் தப்பிப் பிழைத்தவனல்லன். எனக்கு சுரேஸ் போராட்டம் பற்றி சொல்லித் தரவேண்டியதில்லை . 2017 ஜனவரி 9 இலிருந்து மூன்று முதல் ஆறு மாதம் வரை கொடிய வைரஸ் நோய்க்கு (Cellulitis) ஆளாகியிருந்தேன். கொழும்பு மருத்துவமனையிலிருந்தேன்.

மாவை சேனாதிராசா தரப்பு இப் பிரச்சினையில் நீதிமன்றம் ஏன் போகவில்லை என்று ஒரு கேள்வி. மாவை சேனாதிராசாவுக்கு எதிரான எத்தனை வழக்குகள், என்னால் வைக்கப்பட்ட. உச்ச நீதிமன்ற வழக்குகள் இன்றும் உச்ச நீதிமன்றத்திலேயிருக்கின்றன, “தமிழீழம் கோருகிறோம், 1978 அரசமைப்பை எதிர்க்கிறோம்” என்று மட்டக்களப்பிலேயே நின்று போராடினவன் தான் மாவை, 2003 நிலவிடுவிப்புக்கான எனது வழக்கு இன்றும் 2176 வழக்குகள் உச்சநீதிமன்றில் இருக்கின்றன. உச்ச நீதிமன்றத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட எனது நில வழக்கில் எமக்கு வெற்றி கிடைத்தது மூன்று ஆண்டுகளின் பின். ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன், சுமந்திரன் ஆகியோரே இவ்வழக்குகளை நடத்தினர்.

1978 அரசமைப்பை எதிர்க்கின்றோம் என்று சிறையிலடைத்து கொழும்பு மேல் நீதிமன்று வரை சென்ற என்மீதான வழக்கு. மட்டக்களப்பில் நடைபெற்ற போது சுரேஸின் மாற்றுத்தலைவர் நீதிபதி தான் மட்டக்களப்பில் பிணை தந்தார் என் பெருமைப்படுபவர். “தமிழரசுக் கட்சியைத் தடை செய்ய வேண்டும், மாவை சேனாதிராசாவின் அரசியலுரிமையைப் பறிக்க வேண்டும்” என்று 2014ல் உச்ச நீதிமன்றத்தில் சிங்கள தீவிரவாதிகளால் தொடுத்த வழக்கில் 2017 ஓகஸ்டில் தீர்ப்பு. அந்த வழக்கில் வெற்றி பெற்றோம். நான் கேட்கிறேன். இந்த கழிவு ஓயில் வழக்கையாவது ஏன் சுரேஸ் போடவில்லை ? இது ஒரு பொதுப்பிரச்சினை. ஏதாவது போராட்டத்தை நடத்தினாரா?.

“நொதேர்ன் பவர்” கழிவு ஒயில் நிலத்தடி நீரில் கலந்ததற்கு” எதிராக ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் முன்னிலைப்பட்டு வழக்குத் தாக்கல் செய்கிறார் என்பது எமக்குத் தெரியும், பாராட்டப்பட வேண்டும். அவர் ஊர் மக்கள் சார்பில். அதைவிட மூத்த வழக்கறிஞர் அந்த வழக்கின் தீர்ப்பு மாகாண சபையைக் குற்றஞ்சாட்டியது. அதனை மேல் முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.

2014 ஆம் ஆண்டுப் பகுதியில் தான் கழிவு ஓயில் தொடர்பில் பிரச்சினைகள் தொடங்கியன. வலி-தெற்கு பிரதேச சபைப்பிரிவில் சுன்னாகத்தில் அமைந்த இரண்டு தனியார் மின் நிலையங்கள் மின்சாரம் வழங்கியிருந்த காலத்தில் அவ்வியந்திரங்களிலிருந்து கழிவு ஓயில் கிணற்று நீரில் கலந்ததென்ற பிரச்சினை வெளிவந்தது. அதில் ஒன்று தான் நொதேர்ன் பவர்.

ஒரு நிறுவனம் அல்லது நொதேர்ன் பவர் நிறுவனம் அரசோடு இணங்கி செயற்படமுனைய முன் பலதுறை ஆய்வுகள் இடம்பெற வேண்டும். தொழில்நுட்பவியலாளர், சம்பந்தப்பட்ட அமைச்சு நிர்வாகிகள், சுற்றுச்சூழலாளர்(EPL), முதலீட்டுச் சபையினர் பி.ஓ.ஐ(BOI) என்று பல கட்டமைப்புக்கள் தான் அமைச்சரவைப் பத்திரத்திற்கு முன் செயல்படுவர்கள் நொதேர்ன் பவர் நிறுவனமோ, உத்தர ஜனணியோ, அக்கிறிக்கோவோ அவற்றைக் கடந்து தான் செயற்பாட்டிற்கு வரமுடிந்திருக்கும். இதற்கு BOI தான் அனுமதி வழங்கியிருக்கிறது. அமைச்சரவை தீர்மானித்ததா என்று தெரியவில்லை, இதனை 2019 உச்ச நீதிமன்ற வழக்கைப் படித்த போது அறிந்தேன்.இவை பற்றி இராஜபக்ஷாவின் ஆத்மார்த்த ஆலோசகர் அரசுடன் பேசியிருக்க முடியும்! என்ன செய்தார்?

இத்தனைக்கும் வலி-வடக்கில் ஒரு கிணற்றிலேனும் கழிவு எண்ணை கலக்கவில்லையென்றும் ஆனால் வலி–தெற்கில் பாதிப்புற்ற கிணற்றுப் பிரதேச மக்களுக்கு குடிதண்ணீரைத் தாராளமாக வழங்கினோம் என்று வலி-வடக்குப் பிரதேசசபைத் தலைவர் என்னிடம் கூறினார். வழக்குகளிலும் வலி வடக்குப் பிரதேசம் இடம்பெறவில்லை .

முக்கிய விடயத்திற்கு வருகிறேன்.

  1. 2015 ஜனவரியில் விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் தன்னிச்சையாக ஒரு நிபுணர் குழுவை முதலமைச்சர் அனுசரணையோடு நியமித்தார். இதேவேளை ஆஸ்திரேலிய நிபுணர்களின் ஆய்வு “மாசுபட்ட நிலத்தடி நீரில் எந்த ஒரு மாதிரியிலும் BTEX அனுமதிக்கப்பட்ட அளவிலும் அதிகமாகக் காணப்படவில்லை ” என்றனர். இதன் பின் ஐங்கரநேசனால் நியமிக்கப்பட்ட ஒன்பது பேர் கொண்ட நிபுணர்குழுவும் என்ன சொன்னார்கள்; ” இவ்வாய்வுகள் சுன்னாகம் பகுதியில் கிணற்று நீர் பெற்றோலியப் பொருட்களாலோ, பார உலோகங்களாலோ மாசடைந்துள்ளன என்பதற்கான சான்றுகள் இல்லை என்பதைக் காட்டுகின்றன” என்றும் 2015 டிசம்பர் இறுதி அறிக்கையிலும் குறிப்பிட்டுள்ளனர்.
  2. இதன் போது 07/12/2015 திகதியிட்ட ஒரு கடிதம், “வாக்கேர்ஸ்” சி எம் எல் (WALKERS CML.) என்ற தலைப்பில் “நொதோன் பவர் கம்பனிப் பணிப்பாளர் பெரேரா என்பவர் கையெழுத்திட்டு வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனுக்குப் பெயரிட்டு அனுப்பிய அந்தக் கடிதத்தில் வடக்கு மாகாணசபையினால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவின் அறிக்கையை தாங்கள் நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்கு தந்துதவுமாறு” கேட்டுள்ளமை தெரியவருகிறது. அண்மையில் அதைப் பார்த்த பொழுது தான் “நொதேர்ன் பவர் கம்பனி”யின் பின்புலம் தெரிந்தது. உச்ச நீதிமன்றத்தில் அந்த மாகாண சபையமைத்த நிபுணர்குழு அறிக்கை நொதேர்ன் பவர் கம்பனியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2015 இல் உச்சநீதிமன்ற வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஐந்தாவது பிரதிவாதி முதலமைச்சர். ஆறாவது பிரதிவாதி அமைச்சர் ஐங்கரநேசன். முதலமைச்சருக்காக ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் வழக்கறிஞர். 2019 ஏப்ரல் 4 ஆந் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பு முக்கியமானது.
  3. சில புத்திஜீவிகள் நிலத்தடி நீர் மாசடைந்தது பற்றி இடையிடை போராடினார்கள். அதே வேளை, நீதியரசர் முதலமைச்சராயிருந்த வடக்கு மாகாணசபை நியமித்த நிபுணர் ஒன்பது பேர் மற்றும் ஆஸ்திரேலிய நிபுணர்களிருவர் ஆய்வுகள் வேறு தகவல்களை ஆய்வுகளை வெளியிட்டனர். அவர்களும் நிபுணர்கள், புத்திஜீவிகள் தாம். நாம் எது சரியென்று தீர்மானிக்க வேண்டும். நாமும் ஒரு கருத்தைக் கொண்டு குழப்பநிலையைத் தோற்றுவிக்க வேண்டுமா? அவ்வாறு செய்யவில்லை. முதலமைச்சராயிருந்த நீதியரசர் கூட இப் பிரச்சினைகளால் மக்களுக்குப் பாதிப்பில்லை என்று கூறினார் என அறிந்தோம்.

          அவை பற்றி தீர்மானமெடுக்கக்கூடிய நிபுணத்துவத்தை நாம் கொண்டிருக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணம் பற்றிய தீர்வு ஒன்று மற்றது “நோதேர்ன் பவர் நிறுவனம்” விட்ட தவறு, கழிவு ஓயில் நிலத்தடி நீருடன் கலக்கும் அளவுக்குக் கவனமெடுக்காமல் விட்ட குற்றம் இவை பற்றியதே நீதிமன்றத்தின் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு அடிப்படையான அம்சங்களாகக் கொள்ளலாம். அதனாலேயே உச்ச நீதிமன்று 2019 ஏப்ரலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிட்டது.

  1. 2017 இல் நீதியரசர் முதலமைச்சர், மாகாண அமைச்சர்களின் ஊழல் பற்றி விசாரிக்க நியமித்த விசாரணைக்குழு அறிக்கையிலும் ஐங்கரநேசன் அமைச்சரினால் நிபுணர்குழுவை நியமித்தமையை விமர்சித்து குற்றம் சுமத்தியது.
  2. | இறுதியில் அந்த அறிக்கையும், “வடக்கு மாகாணசபை விவசாய அமைச்சர் சட்ட பூர்வமாக அதிகாரமளிக்கப்படாததும், நிர்வாக ரீதியாக தொடர்பற்றதுமான இவ்விடயத்தில் தலையிட்டு இதற்கான நிபுணத்துவம், தொழிநுட்ப வளம், தேவையான உபகரணங்கள் இல்லாத நிலையில் கௌரவ அமைச்சர் தன்னிச்சையாகவே ஓர் குழுவை அமைத்து பின்னர் அதற்கு மாகாண சபை அனுமதியைப் பெற்று மத்திய அரசால் செய்யப்பட்ட ஆய்வு தரவுகளை மாத்திரம் கொண்டு அக்குழு பகுப்பாய்வு செய்து நிலத்தடி நீரில் ஓயில் கலப்பு இல்லை என ஓர் அறிக்கையை தயாரித்து சிறு வட்டத்துக்குள் அதனை வெளியிட்டு நொதேர்ன் பவர் (Northern Power) நிறுவனம் அதனைப் பாராட்டும் அளவுக்கு செயற்பட்டமை; நிலத்தடி நீரில் ஓயில் கலக்கப்பட்டுள்ளது என்ற அடிப்படையில் மத்திய அரசால் வெளியிடப்பட்ட அறிக்கையோடு முரண்பாட்டை ஏற்படுத்தியமை, விவசாய அமைச்சால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் தகுதியிலும், அவர்களது அறிக்கையின் மீதும் அக்குழுவை நியமித்த கெளரவ விவசாய அமைச்சர் மீதும், ஒட்டு மொத்தமாக வட மாகாணசபை மீதும், பொதுமக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியமை நியாயபூர்வமானது’ என இவ் விசாரணைக் குழு கருதுகின்றது என்றே அறிவித்தது.இதற்காக செலவிடப்பட்ட நிதி வீண் விரயம் எனக் கருதுகின்றது. இந் நிபுணர்குழுவின் அறிக்கை பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டமை இச் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளது என்றது, இவ்வறிக்கை முதலமைச்சர் நியமித்த குழுவினாலேயே அறிவிக்கப்பட்டது.  மாகாண சபையினால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு அறிக்கை “நொதேர்ன் பவர்” நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு உச்ச நீதிமன்ற விசாரணையின் போது தாக்கல் செய்யப்பட்டுள்ளமை நிரூபணமானது. இந்த அறிக்கைகள் வடமாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன.

    அடுத்து 2016 ஆம் ஆண்டு மல்லாகம் நீதிமன்றும் B/402/PC/2016 என்ற வழக்கில் 23-01-2017 இல் வழங்கிய தீர்ப்பில், கட்டளையில் கூறப்பட்டது என்னவெனில், “குறித்த வழக்கின் குற்றச் செயல்களைப் புரிந்தவர்களைத் தப்ப வைப்பதற்கு பல்வேறு தரப்பட்ட அழுத்தங்களும் அதிகாரிகளுக்கு பிரயோகிக்கப்படுகின்றன என மன்றுக்கு தோன்றுகின்றது. யாரோ ஒரு மறைகரம் இக்குற்றச் செயலை செய்தவர்களை காப்பாற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொள்வதாகத் தென்படுவதால், குறித்த விடயம் தொடர்பில் சாதாரண பொலிஸ் அதிகாரிகளினால் உரிய முறையில் விசாரணைகள் இதுவரையும் செய்யப்படாதமை மன்றினால் அவதானிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த வழக்கில் பாரிய சுற்றுப்புறச் சூழல் மாசடைதல் ஒன்று ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகிய நிலையிலும் இன்றுவரை எந்தவித சட்ட நடவடிக்கைகளும் குறித்த குற்றச் செயலை செய்தவர்களுக்கு எதிராக எடுக்கப்படவில்லை என்பதும் பல அரச அதிகாரிகள் இந்த குற்றச் செயலுக்கு உடந்தையாக உள்ளார்கள். பல அரச அதிகாரிகள் மற்றும் பிழையான அறிக்கைகளை தயாரித்து வெளியிட்டவர்கள் ஏதாவது பணங்களும் பெற்றுக் கொண்டு அவ்வாறு செய்தனரா என்ற கேள்வியும் மன்றுக்கு தோன்றுகின்றது. குறித்த விடயம் தொடர்பாக பணிப்பாளர், நிதி மோசடி விசாரணை பிரிவு இந்த விடயம் தொடர்பில் விசாரணை செய்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறு மன்று குறித்த பணிப்பாளர் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு கட்டளையிடுகின்றது. கட்டளையின் பிரதியை உரிய அதிகாரிகளுக்கு அனுப்பவும்” என்று கட்டளையிட்டது. இவை பற்றி கேள்வி எழுப்பாத சுரேஸ் பிரேமச்சந்திரன் “நொதேர்ன் பவர்” நிறுவனத்தைக் கொண்டு வந்தார் மாவை என்ற பொய் செய்தியை வெளியிட்டதன் உள்நோக்கம் தெளிவானதே. . அரசின் நிதிமோசடி விசாரணைக்குழு இவ்விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தவுள்ளதாகவும், அதனைத் தடுத்துவிட உயர் மட்டத்தில் முயற்சிகள் இடம்பெற்றன எனவும் தகவல்கள் வருகின்றன.

    இந்த நிலையிற்றான் சுரேஸ் பிறேமச்சந்திரன், மாவை சேனாதிராசாவை வலிந்து இழுத்து “விலைப்பட்டுள்ளார்” என்று பொய் குற்றத்தை அவிழ்த்து விட்டிருப்பது யாரைக் காப்பாற்றுவதற்கு யாரைப் பலிக்கடாவாக்க முயற்சிக்கிறார் என்பது வெளிப்படை. சுரேஸின் குற்றச்சாட்டுக்கள் பற்றி எமது வழக்கறிஞர்களிடத்திலும் பேசியுள்ளேன். இன்றுள்ள பயங்கரவாத நெருக்கடி நிலைமைகளில் சுரேஸின் பொய் பிரச்சாரத்திற்கு பதிலளிக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பது கவலைக்குரியதே. – என்றுள்ளது.

Share the Post

You May Also Like